மக்கள் இயக்கமாக மாறும் கோவை -துபாய் விமான சேவை கோரிக்கை​ – விரைந்து நடவடிக்கை எடுக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

Kongu-Global-Forum-Nandhakumar-2.jpg

​பத்தாண்டுகளை கடந்தும் கோவை – துபாய் இடையே விமான சேவை தொடங்கப்படாதது பயணிகள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மக்கள் இயக்கமாக மாறி வருவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்பவர்கள் வெளிநாட்டு விமான சேவை அதிகம் இல்லாத காரணத்தால் கொச்சின், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை வழங்கினால் அங்கிருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையை பயன்படுத்த முடியும். இதனால் துபாய்க்கு விமான சேவை தொடங்க வேண்டும் என பயணிகள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அசோக் கஜபதி ராஜூ பசுபதி விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றியபோது கோவையில் நடந்த தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். கோரிக்கையை ஏற்று ‘ஏர் இந்தியா’(அப்போது அரசின் வசம் இருந்தது) சார்பில் கோவை -துபாய் இடையே விமான சேவை தொடங்கப்படும் என அனைவரின் முன்னிலையில் வாக்குறுதி அளித்து சென்றார்.  அதை தொடர்ந்து இன்று வரை மத்திய அமைச்சர், விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடம் தொடர்ந்து இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இன்று வரை விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்து வரும் பயணிகள் பல தரப்பு மக்களை இணைத்து கோவை- துபாய் இடையே விமான சேவை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க தொடங்கியுள்ளனர்.

கொங்கு குளோபல் போரம்(கேஜிஎப்) இயக்குநர் நந்தகுமார் கூறியதாவது:
தொழில் நகரான கோவை, கல்வி, மருத்துவம், ஆன்மிகம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகளவில் சிறந்து விளங்குகின்றது. வெளிநாடுகளுக்கு இரண்டு விமான சேவை மட்டும் உள்ளதால், கோவையிலிருந்து – துபாய்க்கு விமான சேவையை தொடங்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

தற்போது கோவையில் உள்ள விமான ஓடுபாதையில் வைட் பாடி என்று சொல்லக்கூடிய விமானங்கள் மட்டுமே இயக்குவதில் சிக்கல் உள்ளது. இருப்பினும் நேரோ பாடி ரகத்தை சேர்ந்த விமானங்களை எளிதில் கையாள முடியும். சிங்கப்பூர், ஷார்ஜாவுக்கு தற்போது அந்த வகையான விமானங்கள் தான் இயக்கப்படுகின்றன.

அதே போல் ஒரு விமானத்தை ‘பிளை துபாய்’ நிறுவனம் சார்பில் கோவை -துபாய் இடையே தொடங்க வேண்டும். ‘பைலேட்ரல் ஒப்பந்தத்தில்’ கோவை இணைக்கப்படாதது ஒரு காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் மத்திய அரசு நினைத்தால் அதில் சில திருத்தங்களை செய்து கோவையில் இருந்து துபாய்க்கு விமான சேவையை தொடங்க முடியும்.

இதுவரை தொழில் அமைப்புகள் சார்பில் முன்வைக்கப்பட்டு வந்த கோரிக்கை தற்போது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. துபாய்க்கு விமான சேவை விரைவில் தொடங்க வலியுறுத்தி மக்கள் பலர் ஒன்றிணைந்து சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். எனவே மத்திய அரசு விரைவில் கோவை- துபாய் இடையே விமான சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

scroll to top