மக்களை ஏமாற்றும் செயல்: பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

‘தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, மக்களை ஏமாற்றும் செயல்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில்: மத்திய அரசு, பெட்ரோல் மீதான வரியை, லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. அதை பின்பற்றி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை கணிசமாக குறைத்துள்ளன.தமிழக அரசும் வரியை குறைக்கும் என எதிர்பார்த்த நிலையில், 2014ல் இருந்த அளவுக்கு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்.

இந்நடவடிக்கை தானாகவே, மாநிலங்களின் வரியை குறைத்து விடும் என, தமிழக நிதி அமைச்சர் கூறி உள்ளார். இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.மத்திய அரசின் வரி அதிகரித்தபடி செல்வதால், மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என, நிதி அமைச்சர் கூறியிருக்கிறார். பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழக அரசு மட்டும் இயலாது எனக் கூறுவது நியாயமற்றது.மத்திய அரசின் இந்த வரி விதிப்பு, தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இது, மக்களை ஏமாற்றும் செயல்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

scroll to top