THE KOVAI HERALD
‘‘மக்கள் பிரச்சனைகள் எத்தனையோ குவிந்து கிடக்கிறது. ஆனால் மகன் உதயநிதியை முதல்வர் ஸ்டாலின் அமைச்சராக்கியிருக்கிறார். அதுவே இந்த இரண்டாண்டுகளில் திமுக அரசு செய்த பெரிய சாதனை. திமுகவை மக்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சிக்காரர்களே புறக் கணிக்க ஆரம்பித்து விட்டார்கள். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக 40-க்கு 40 இடங்கள் வெற்றி பெறும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார். எனவேதான் திமுக மாற்றுக் கட்சியிலிருந்து ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறது!’ என்று அதிமுகவின் சட்டமன்றக் கொறடாவும், முன்னாள் அமைச்சரு மான எஸ்.பி.வேலுமணி உணர்ச்சி பொங்கினார்.
கோவை மாவட்ட அதிமுக தலைமையிடம் இதயதெய்வம் மாளிகையில் ஜனவரி 3,5,9 ஆகிய தேதிகளில் திமுக அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண் குமார், அம்மன் கே.அர்ச்சுணன், அமைப்புச் செயலாளர் ஏ.கே. செல்வராஜ், வி.பி.கந்தசாமி, அமுல் கந்தசாமி, கே.ஆர். ஜெய ராம், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலு மணி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.
‘‘தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் மிகவும் எழுச்சியாக நடைபெற உதவியாக இருந்த தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்றேன்.
கோவை கூட்டத்தில்தான் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தமிழகம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தார். நடைபெற உள்ள போராட்டம் சிறப்பாக அமைய ஒவ்வொருவரும் மக்கள் பிரச்சினைகளை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வினியோகித்து மக்களை திரட்ட வேண்டும். திமுக அரசை கண்டித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 2000 பேர் கலந்து கொள்ள வேண்டும்.
திமுக கட்சி இன்று ஒரு சாதனை செய்துவிட்டனர். இரண்டே ஆண்டு களில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி உள்ளனர். இதுதான் ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை. எதை செய்ய மாட்டேன் என்று சொல்கிறாரோ அதைத்தான் ஸ்டாலின் செய்வார்.
அறிஞர் அண்ணாவால் ஆரம் பிக்கப்பட்ட திமுக தற்பொழுது ஸ்டாலின் குடும்ப சொத்தாக மாறிவிட்டது. தற்போது கூட குனியமுத்தூர் பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டுகொள்ளாததால் ஆளுகின்ற திமுக அரசை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளார்கள்.
தனது மகன், மருமகன் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் சொன்னார். இன்று தமது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி மூலம் பட்டாபிஷேகம் செய்துள்ளார்கள். திமுகவை நம்பி சென்றவர்கள் தற்கொலை செய்வதற்கு சமம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக வில் சேர்ந்ததாக் பொய்யான வதந்தியை திமுகவினர் பரப்பி வருகிறார்கள். கருணாநிதி கூட ஸ்டாலினை கொண்டு வர யோசனை செய்திருப்பார். ஸ்டாலினோ படுவேகமாக உதயநிதியை அமைச்சராக்கி உள்ளார். வைகோவை எதற்காக வெளியேற்றினார்கள் ஸ்டாலினை எதிர்த்த ஒரே காரணத்திற்காக தானே. வைகோ மற்றும் கம்யூனிஸ்டுகள் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு பற்றி கூட பேசுவதில்லை. சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி இருக்கும்போதே அவரைப் பற்றி திமுக அமைச்சர்கள் புகழ் பாடுவது தாங்க முடியாது. உதயநிதி திமுகவிற்காக என்ன உழைத்திருக்கிறார்.
எவ்வளவு பிரச்சினை தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி எல்லாம் திமுக கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே திமுக குறித்து மக்கள் முடிவு எடுத்து விட்டனர். ஊடகங்கள் மட்டும் ஸ்டாலின் அரசை கைவிட்டு விட்டால் ஸ்டாலின் அரசு உடனே கவிழும். ஆனால் எதுவும் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் திமுக அரசு நடந்து கொள்கிறது. திமுக அழிந்து கொண்டிருக்கிறது. அதை காப்பாற்ற அதிமுகவிலிருந்து ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
200 கோடி நிதி ஒதுக்கியதாக பேட்டி கொடுத்தார் திமுக பொறுப்பு அமைச்சர். கோவையில் எங்கே சாலை இருக்கின்றது. அதிமுக போராட்டம் அறிவித்ததால் சில இடங்களில் சாலை போடுவதுபோல் பாவ்லா காட்டியுள்ளார்கள். இவ்வாறு அவர் பேசினார்.