ப்ளஸ்டூ தேர்வு எழுத வராத 50 ஆயிரம் மாணவ  மாணவியர்கள் எங்கே?

plus.jpeg

​மனித வாழ்வில் கசப்பான அனுபவம், அல்லது கசப்பான கனவு என்றால் எதை சுட்டிக் காட்டுவீர்கள். பள்ளிப் பருவத்தில் தேர்வு எழுதியதை அனுபவத்தை இந்தக் கேள்வியை கேட்கும் போது மட்டும் வைத்து விட்டீர்களானால் 99 சதவீதம் பேர் இதற்குத்தான் டிக் செய்வார்கள்.

வயதான பின்பு பேரன் பேத்திகள் எடுத்த பிறகும் கூட முதியவர்கள் தான் தேர்வு எழுதுவது போல கனவு வந்தால் பயத்தில் ஆடிப் போய் எழுந்து உட்கார்ந்து கொள்வது உண்டு. ஆனால் அவர்கள் எல்லாம் தேர்வுக்கு மட்டம் போட்டவர்களா என்றால் கிடையாது.

ஆனால் இன்று சர்வ நிச்சயமாய் மட்டம் போட்டு விட்டார்கள். கடந்த ப்ளஸ்டூ தேர்வுக்கு மட்டும் 50 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதவே வரவில்லை. அதுதான் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையை ஆட்டம் காண வைத்திருக்கிறது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளிடம் ஆசிரியர்களிடமும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

என்ன நடக்கிறது நம் பள்ளிக்கூடங்களில்? உண்மையைச் சொல்லப் போனால் 50 ஆயிரம் பேர் பள்ளிக்கு பரீட்சை எழுத வரவில்லை என்பதை விட பள்ளிக்கே வரவில்லை என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

கடந்த 2019-க்குப் பிறகு அடியெடுத்து வைத்த கொரானா காலமும், அதன் மூலம் ஏற்பட்ட ஊரடங்கும், அதன் தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்ட ஆன்லைன் வகுப்புகளும், அதை எல்லாவற்றுக்கும் மேலாக புதிய கல்வி முறையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு மாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல, மாணவர்கள் மத்தியிலும் நிகழ்த்தி விட்டது. அதுதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.

‘‘இது இங்கு மட்டும் நடைபெறவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பத்தாவது தேர்வு எழுதும் 31 லட்சம் மாணவர்களில் ஏறத்தாழ 2லட்சம் மாணவர்கள் இந்தித் தேர்வு எழுத வரவில்லை. ஒடிசா மாநிலத்தில் மெட்ரிக்குலேஷன் 10வது  தேர்வு எழுதாத மாணவர்கள்  18,000 பேர். தமிழ்நாட்டில் ப்ளஸ்டூ பொதுத்தேர்வு மார்ச் 13 தொடங்கி நடந்ததில் முதல் இரண்டு தேர்வுகளை நடத்தியதில் 50 ஆயிரம் பேர் பரிட்சை எழுதவில்லை.

இதுதான் ஊடகங்களில் இது அதிர்ச்சியளிக்கும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் கல்வியைத் தொடர்ந்து கவனித்துவரும் எவருக்கும் இது அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்காது. ஏனென்றால் ப்ளஸ் ஒன் பொதுத் தேர்வில் தமிழ்த் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை. 10 ஆம் வகுப்பில் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்கிறார் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்.  

இதற்கு என்ன காரணம்?  இது குறித்து கல்வியாளர் சுடர் நடராஜன் தன் வலைத்தளப் பக்கத்தில் பல்வேறு ஆசிரியர்கள் கூறின கருத்துக்களை தெரிவித்துள்ளார். அது கல்வி குறித்த சமகால சூழலை அழுத்தமாக விவரிக்கிறது.

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் பலரும் மீண்டும் தேர்வு எழுத விரும்புவதில்லை. மாற்றுச் சான்றிதழ் பெறாவிட்டால், பள்ளிக்கு மாதக் கணக்கில் வரா விட்டாலும் அம்மாணவர் பெயர் நீக்கப்படாது இருக்கிறது. இதுவும் தேர்வுக்கு வராதோர் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம். பள்ளிக்கோ, தேர்வுக்கோ வர முடியாத மாற்றுத் திறனாளிகளும் எண்ணிக்கை மற்றும் இதர சலுகைகளுக்காக இணைக்கப்படுகின்றனர்.    

பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் வரலாறு, பொருளியல், கணக்குப் பதிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகள் இருப்பதில்லை. அறிவியல் பாடப்பரிவுகள் மட்டுமே உள்ளன. வேறு வழியில்லாமல் தனக்கு அப்பாடங்களில் விருப்பம் உள்ளதோ இல்லையோ, சேர்ந்து விடுகிறார்கள். படிக்க முடியாமல் திணறி பள்ளிக்கு வருவதை நிறுத்துகிறார்கள்.

கடைசியாக பரிட்சைக்கே வராமல் புறக்கணிக்கிறார்கள். .எல்லோரும் எளிதில் பயிலக்கூடிய தொழிற்கல்விப் பிரிவுகள் மூடுவிழா கண்டுள்ளன.  சில ஆண்டுகளாக மடிக்கணினி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைனில் கல்வி என்று சொல்கிறார்கள். இதனால் படிப்பில் இடைநிற்றல் அதிகரிக்கிறது.  அனைத்து மட்டத்திலும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர். இவர்கள் கைச் செலவிற்கு பணம் கிடைத்தவுடன் படிப்பைக் கைவிடுகின்றனர்.

வேறுபல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகின்றனர். மாணவர்களிடையே அதிகரித்துள்ள மது மற்றும் இதரப் போதைப் பொருள்கள் பயன்பாடு. மாணவர்கள் ஒரு பகுதியினர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகும் உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். வீண் பெருமை பேசுவதும் மாணவர்களைக் குறை சொல்லக்கூடாதெனக் கருதி மூடிமறைப்பதும் இந்த சமூகத்திற்குச்  செய்யும்  துரோகமாகும். மாணவர்களுக்கு டாஸ்மாக் பானங்களும் இதர போதைப் பொருள்கள் மிக எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றைத் தடுக்க அரசால் இயலவில்லை.

குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளன. குடும்ப, வாழிடச் சூழல்கள், இணையவெளி ஆபாசம் போன்றவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தெளிவானப் பாலியல் கல்வி இல்லை. மாணவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்கள் மட்டும் போதாது. இது பல துறைகளின்  ஒருங்கிணைந்த பணியாக அமைய வேண்டும். காட்சியூடகத்தின் பாதிப்புகள் அதிகம். கட்டற்ற இணைய, அலைபேசிப் பயன்பாடுகள், ஆன்லைன் விளையாட்டுகள் என எண்ணற்ற தடைகள் உள்ளன.  

புதிய பாடநூல்களின் சுமை மாணவர்களை கல்விப்புலத்திலிருந்து துரத்துகிறது. எளிய பாட்த்திட்டம், எளிய தேர்வுகள் என அனைவரையும் உள்ளடக்கிய கல்வி அவசியம். அவர்களை மருளவைத்து வெளியேற்றும் நடைமுறைகள் ஒழியவேண்டும். தொடக்கக் கல்வி பெருமளவு வீழ்ந்துள்ளது. இது அரசின் தோல்வியைக் காட்டுகிறது. பள்ளிகளைச் சீரமைக்காமல் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்கிற தனிப்பயிற்சித் திட்டத்தினால் பலநூறுகள் ஆசிரியர்கள் மாற்றுப்பணியில் உள்ளனர். இருக்கிற பள்ளியைக் கெடுக்கும் இவ்வகைத் திட்டங்களால் பலனில்லை.

ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு நடவடிக்கைகள்  அடித்தட்டு மக்களை கல்வியை விட்டு அப்புறப்படுத்தியுள்ளது. ஆசிரியர்கள் கல்வி சாராப் பணிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப் படுகின்றனர். வெளிப்படையாகச் சொல்லாமல் கல்வியைச் சீரழிக்கும் முயற்சிகள் அரசுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்வு பற்றிய அச்சம் பெற்றோர்கள், அச்சு, காணொளி ஊடகங்களால் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. இதில் பல வியாபார நோக்கங்களும் இருக்கின்றன.

இவற்றைத் தடுக்க வேண்டும். 70 அல்லது 90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத சுமார் 3:30 மணிநேரம் குழந்தைகளை அடைப்பது ஒரு வன்முறை..ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. குறைவான ஊதியம் பெறும் தற்காலிகப் பணியாளர்கள் திறம்பட செயல்பட இயலாது. ஆசிரியர்கள் பலருக்கு மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப்பணி வழங்குவதால் அப்பள்ளிகள் பாதிப்பிற்குள்ளாகின்றன. அனைவருக்கும் தேவையில்லாத ‘நீட்’ பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் தேவையின்றி அலைகழிக்கப்படுகின்றனர். இதனால் +2 தேர்வில் மாணவர் கவனம் திசை மாறுகிறது.

இப்படி காரணங்கள் பட்டியலாக நீள்கிறது. இன்னும் கூட இந்தப் பட்டியல் நீளலாம். அதற்கெல்லாம் அரசு என்ன செய்யப் போகிறது என்பதுதான் நம் முன் உள்ள மிலியன் டாலர் கேள்வி.

scroll to top