போலீஸ் வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல்-பிரதமர்,முதல்வர் இரங்கல்

ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் உள்ள போலீஸ் முகாம் அருகே சென்றுகொண்டிருந்த போலீஸ் பேருந்து மீது நேற்று மாலை பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பதுங்கியிருந்த  பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது,   பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், ஸ்ரீநகரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விவரங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும், இந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்து டிவிட் போட்டுள்ளார். அதில், ” ஸ்ரீநகர் அருகே போலீஸ் பஸ் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

scroll to top