போன தடவை எஸ்.பி.வேலுமணி; இந்தமுறை செந்தில் பாலாஜி-எப்படி நடந்தது கோவை ஜல்லிக்கட்டு?

தி கோவை ஹெரால்டு:

மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் பாரம்பர்யமாய் பொங்கலுக்கு பொங்கல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு கிளம்பி யது. மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. எனவே இதை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஜீவகாருண்ய அமைப்புகள் போராடி கோர்ட்டுக்குப் போன நிலையில் மக்கள் எதிர்ப்பால் அதற்கு தடை நீக்கப்பட்டது. அந்த மாபெரும் மக்கள் எழுச்சியின் பயனாக பாரம்பர்யமாய் நடத்தப்பட்டு வரும் பகுதிகளில் மட்டுமல்லாது மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட ஆரம்பித்தன.
மதுரையைப் போலவே அதை அரசு சார்பாக நடத்த உத்திரவிட்டது கடந்த கால அதிமுக அரசு. அந்த வகையில் மதுரையைப் போலவே கோவையிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வந்தன. அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியே இதில் பிரதான இடம் வகித்ததோடு, அவரே அதிக அளவில் பரிசுப் பொருட்கள் ஸ்பான்சர் வழங்கினார். அதனால் இது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஜல்லிக்கட்டு என்றே மாடு பிடி வீரர்கள் புகழ்ந்து பரிசுகளை வாங்கிச் சென்றனர்.
இந்த ஆண்டு ஆட்சி மாறி விட்டது. கோவைக்கு ஆளுங்கட்சி சார்பாக எம்.எல்.ஏக்களும் இல்லை. அதனால் உள்ளூர் மந்திரிகளும் இல்லை. பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பொங்கல் கழிந்து வரும் ஜல்லிக்கட்டு இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் இருந்து வந்தது.
அதே நேரம் வெகுவேகமாக கொரானா ஒரு பக்கம் பரவி வந்தது. அதனால் முழு ஊரடங்கு எந்த நேரத்திலும் பிறப்பிக்கப்படலாம் என்ற பேச்சும் இருந்தது. ஆனால் அதையெல்லாம் முறியடிக்கும் விதமாக கடந்த வாரம் கோவையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் வழக்கம் போல் நடக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் கடந்த 21-ம் தேதி கோவையில் கோவை செட்டிபாளையம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதற்கு பரிசு மழையும் பொழிந்தது. வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கார், பைக், தங்க நாணயம், சைக்கிள், ‘டிவி’ என ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
போட்டி முடிவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”போட்டிக்கு, 1,250 காளைகள் வந்திருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் 873 காளைகள் மட்டுமே போட்டியில் களம் இறங்க முடிந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 400 வீரர்கள் களம் இறங்கினர். இதில் 21 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் குருவித்துறை மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆல்டோ கார் பரிசாக வழங்கப்படுகிறது,” என்று அறிவித்தார்.
இரண்டாம் பரிசாக, 19 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த பிரபா என்பவருக்கு புல் லட் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை 18 காளைகளை அடுக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டியை பார்வையிட பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் ஆளும் கட்சியினர், வி. வி.ஐ.பி.,க்களின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது. அதனால் முந்தைய ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளைப் போல் அல்லாமல் சோபையிழந்தே மாடுபிடி வீரர்கள் சென்றனர்.
‘ஆயிரம்தான் இருந்தாலும் எஸ்.பி.வேலுமணி ஜல்லிக்கட்டு போல் இல்லையப்பா!’ என்று அவர்கள் பேசிச் செல்வதைக் காண முடிந்தது.
ஆயிரம்தான் அரசு ஜல்லிக்கட்டை நடத்தினாலும் அதிலும் கட்சி அரசியல் தவிர்க்க முடி யாதது என் பதை கோவையில் நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டும் கட்டியங்கூறியிருக்கிறது.

scroll to top