ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன் என்பவரது மகன் அஜய் குமார் (19). இவர் மதுக்கரை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக ஈச்சனாரி பகுதியில் தனது நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் அஜய்குமார் ஜூலை 13 ஆம் தேதி திடீரென்று வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து அவரை நண்பர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாணவனின் தந்தை சவுந்திரபாண்டியன் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார்.
இறந்த மாணவனின் பிரேத பரிசோதனையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் உடலில் ஏற்றப்பட்டதால் இறப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர் . விசாரணையில் இறந்த மாணவர் வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வாங்கி தண்ணீரில் கரைத்து சிரஞ்சு மூலமாக போதைக்காக தனக்கு தானே உடலில் செலுத்தி கொண்டது தெரிய வந்தது. மேலும் இறந்த மாணவனின் நண்பர்களை விசாரித்ததில் மேற்கண்ட வலி நிவாரண மருந்தை கும்பகோணத்தில் மருந்து கடை வைத்திருக்கும் முகமது பஷீர் (52) என்பவரிடம் எந்தவித டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் லாப நோக்கோடு இந்த மாணவனுக்கு ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது .எனவே போதை ஏற்படுத்தக்கூடிய வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்த குற்றத்திற்காக மருந்து கடை அதிபர் முகமது பஷீரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர் .