பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றம்.

facebook-logo.jpg

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார். சமூக வலைதள செயலிகள் மூலம் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கவும், பங்குச் சந்தை மற்றும் பொதுப் பிரச்சனைகளில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் துறை வல்லுனர்கள் கூறுகின்றனர். பேஸ்புக் என்பது மார்க் ஜுக்கர்பெர்க் முதன் முதலில் உருவாக்கிய சமூக வலைத்தளத்தின் பெயர், ஆனால் அது மிகப்பெரிய பிராண்டாக மாறிய நிலையில் நிறுவனத்துக்கு பேஸ்புக் என பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது பேஸ்புக் நிறுவனத்தில் பேஸ்புக் மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், அகுலஸ் எனப் பல வர்த்தக பிரிவுகள் தனித்தனியாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அனைத்து பிரிவுகளை தனித்தனியாக வைக்கவும்,அதே நேரத்தில் அனைத்து நிறுவனங்களையும் ஒரே நிறுவனத்துக்குள் கொண்டு வருவதற்காக புதிதாக ஒரு நிறுவன பெயரை வைத்து அதன் கீழ் அனைத்து வர்த்தகத்தையும் கொண்டு வர உள்ளதாக வெர்ஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆனால் இதற்குப் பேஸ்புக் இதுவரை எவ்விதமான மறுப்பும், பதிலும் அளிக்கவில்லை.இதேவேளையில் சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பல ரகசிய ஆவணங்கள் வெளியான நிலையில் பேஸ்புக் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அதேபோல் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தடையாக இருக்கும் பதிவுகளை குறைப்பது, இளம் தலைமுறையில் டீனேஜ் பெண்கள் இன்ஸ்டாகிராம் மூலம் மன உளைச்சல் அடைவது போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.இந்தப் பிரச்சினைகள் அனைத்து நிறுவனங்களையும் பாதிக்கிறது. இந்நிலையில் தான் பேஸ்புக்-ஐ கிளை நிறுவனமாக வைத்துக்கொண்டு புதிய நிறுவன பெயரில் இயங்க வேண்டும் என மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார்.சமீபத்தில் கூகுள் நிறுவனம் ஆல்பபெட் என்ற ஒரு தாய் நிறுவனத்தைக் கொண்டு அதன் கீழ் அனைத்து நிறுவனங்களையும், வர்த்தகத்தையும் கொண்டு வந்தது. அதே கட்டமைப்பில் தான் தற்போது பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தகத்தை நிர்வாகம் செய்ய விரும்புகிறது.

scroll to top