பெண் யானைகளை விட, ஆண் யானைகள் அதிகம்;பெண் யானை இறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்

Pi7_Image_elephant-01.jpg

THE KOVAI HERALD:

ஆளியாறு வனச் சரகப் பகுதியில் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் பெண் யானை ஒன்று உயிரிழந்தது. இதன் பின்னணியில் யானைகளின் இடப்பெயர்வை வனத்துறையினர் கூடுதலாக கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை வால்பாறை வனச்சரகத்தின் காடம்பாறை பிரிவில் அப்பர் ஆளியார் சரகப் பகுதியில் வன ஊழியர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் சமீபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பர் ஆளியார் பள்ளம் என்ற பகுதியில் பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் பார்கவ தேஜா மற்றும் அதிகாரிகள் வருகை புரிந்தனர். இதையடுத்து வனத்துறையினர் இறந்த பெண் காட்டு யானையை பிரேதப் பரிசோதனை செய்ததில், ‘இறந்த பெண் யானைக்கு 45 முதல் 50 வயது இருக்கும். ஆண் யானை உடன் சண்டையிட்டு அதிக அளவில் ரத்தப் போக்கு ஏற்பட்டு பெண் யானை உயிரிழந்துள்ளது. ஆண் யானை அருகிலுள்ள வனப் பகுதிக்குள் சென்றிருக்கலாம்!’ என்ற தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஆண் யானைகள் அதிகம்
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற வனத்துறை கால்நடை கூடுதல் இயக்குனர் மனோகரன் கூறுகையில், ஒரு முறை பெண் யானை கருவுற்றால் குட்டி ஈன்றெடுக்க 22 மாதங்கள் ஆகும். மேலும், பெண் யானைகள் மீண்டும் இனச்சேர்க்கைக்கு குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் சில பகுதிகளில் ஆண் யானைகள் எண்ணிக்கை பெண் யானைகளை விட அதிகமாக இருப்பதால், இளம் வயது ஆண் யானைகள் இனப்பெருக்க காலத்தில் பெண் யானைகளை கவர்வதற்கு செல்லும்போது அந்த பெண் யானை மறுப்பு தெரிவிக்கும் நிலையில் யானைகளுக்கிடையே சண்டைகள் ஏற்படும். மேலும் வயது முதிர்ந்த ஆண் யானைகள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடாது. ஆனால் இளம் ஆண் யானைகளுக்கு இந்த பக்குவம் தெரியாததால் சண்டையிடுகின்றன. இதனால் பெண் யானைகள் இறப்பதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்றார்.
யானைகள் உயிரிழப்பு
கோவையில் இந்த ஆண்டில் மட்டும் 10 யானைகள் உயிரிழந்திருக்கிறது. தற்போது யானைகளுக்குள் நடந்த மோதலில் ஒரு பெண் யானை உயிரிழந்திருக்கிறது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண் யானைகளுக்குள் நடக்கும் மோதல், தான் கூட்டத்தின் வழிநடத்தும் யானையாக மாறுவதற்கான போட்டி, மற்றும் பெண் யானையுடன் இணை சேருவதற்கான நோக்கத்தில் இப்படி ஆண் யானைகள் மரணிப்பது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால் ஓர் ஆண் யானை தாக்கி பெண் யானை இறப்பது அபூர்வத்திலும் அபூர்வமானது. எனவே இப்படியான விஷயங்களை வனத்துறையினர் கண்காணித்து வரவேண்டும். மோதல் ஏற்படும் சமயத்தில் அவற்றை விரட்டி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள். பொதுவாக யானைகள் தாவரங்களின் விதைகள் இடம்பெயர, வழித்தடங்கள் உருவாக, வனம் செழிப்படைய என பல்வேறு விதங்களில் உதவியாக இருக்கின்றன. எனவே கோவை, முதுமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் எத்தனை யானைகள் இருக்கின்றன என்பதை ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அவற்றின் ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்துவது அவசியம். குறிப்பாக இள வயது யானைகளின் எண்ணிக்கை மிகவும் முக்கியம். இவை உயிரிழந்தால் உரிய காரணத்தை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

S.KAMALA KANNAN PH.92443 17182

scroll to top