சபா கமலக்கண்ணன்
பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியானதையடுத்து நாடு முழுக்க இதுவே பேசுபொருளாகி உள்ளது. கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, இந்த அரசாங்கம் எப்போது தேசத்தின் மகள்கள், சகோதரிகளின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளது. ஊட்டச்சத்துக் குறைபாட்டில் இருந்து பெண்களைக் காக்க, அவர்கள் சரியான வயதில் திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்வது அவசி யம். இப்போது நாட்டில் ஆணின் திருமண வயது 21 ஆகவும், பெண்ணின் திருமண வயது 18 ஆகவும் உள்ளது. அரசாங்கம், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் மற்றும் இந்து திருமணச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அவ்வாறு திருத்தம் மேற்கொண்டு பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்த்தப்படும்!’’ என்று தெரிவித்திருந்தார்.
பிரதமர் இதைப்பற்றி பேசுவதற்கு முன்னதாகவே, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் செயற்குழுவை அமைத்திருந்தது. ஜெயா ஜேட்லி தலைமையில் நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார். இந்நிலையில்தான் தற்போது இத்தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு சட்டம் அமலாகும் எனத் தெரிகிறது. அனைத்து சமூக அமைப்புகளும் இதை வரவேற்றுக் கொண்டிருக்க, எதிர்கட்சிகளிடம் இதற்கு ஆதரவோம எதிர்ப்போ வந்த பாட்டைக் காணோம். இருந்தாலும் தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் இதற்கு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
‘பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. இது பெண்களின் முன்னேற்றத்திற்குப் பேருதவியாய் அமையும். கல்யாணம் எனும் குறுக்கீட்டால் பலரது கனவுகள் தடைபடுவதைத் தடுக்கும். இந்தச் சட்டம் விரைவில் நடைமுறைக்கு வரவேண்டும்” என்று அக்கட்சி தன் ட்விட் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதே சமயம். வெளிப்படையாக இது பற்றி கருத்துக் கூறாவிடினும் பழமைவாதம் பேசும் அடிப்படைவாதிகளிடம் இது குறித்த முணு,முணுப்புகள் நிறையவே உள்ளது.
ஒரு மனிதனின் டீன் ஏஜ் பருவமென்பது 13 வயது முதல் 19 வயது வரைதான். இந்த காலகட்டத்தில்தான் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பருவ வயதாக கருதி, அந்தக் காலத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். பால்ய மணம் என்பது எதிர்க்கப்பட வேண்டியதுதான். அதனால் கல்வி, பொருளாதார முன்னேற்றம் எல்லாமே பாதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு திருமண வயது 18 என்று நிர்ணயித்திருக்கும் இந்த காலகட்டத்திலேயே ஏகப்பட்ட பிரச்சனைகள். வயது வரும் முன்பே அவர்கள் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் நிற்கிறார்கள். பெற்றோர்களின் கஷ்டத்தை கண்டு காண சகிக்க முடியவில்லை. இருபாலரும் இந்த விஷயத்தில் ஈர்ப்பாகி நிற்கும் நிலையில் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. ஊருக்கு ஊர் போக்சா சட்டத்தில் ஏகப்பட்ட வழக்குகள். இதற்கு கட்டப்பஞ்சாயத்துகளும் அரசியல் ரீதியாக, காவல் நிலையங்களில் நடக்கிறது. இனி பெண்ணின் திருமண வயது 21 ஆக மாறும்போது இந்த வம்பு வழக்குகள் இன்னமும் அதிகமாக பெருகும்!’ என்ற வார்த்தைகள் அதில் நிறையவே ததும்புகிறது. ஆனால் இவர்களின் குரல்கள் பெண்ணுக்கு 21 வயதில் திருமணம் முடிப்பதுதான் சரி என்று ஒலிக்கும் குரல்கள் முன் காணாமல் போகிறது. அந்த அளவு பெண்களிடம் மட்டுமல்ல, முற்போக்கான ஆண்களிடமும் இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்கள் இதில் ரொம்பவுமே அகமகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து தொழிலதிபரும், சிறு துளி அமைப்பின் அறங்காவலர் வனிதாமோகன் கூறும்போது, கோவை தொழிலதிபரும், சிறு துளி அமைப்பின் அறங்காவலருமான வனிதாமோகன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது,அந்தக் காலத்தில் சின்ன வயசில் திருமணம் செஞ்சாங்கன்னா அன்று கூட்டுக்குடும்ப முறை. ஒருவருக்கொருவர் பாதுகாப்பா இருப்பாங்க. ரொம்ப கட்டுப்பெட்டியான காலம் பெண்கள் ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ சார்ந்து வாழ முடிந்தது. இப்போது அப்படியில்லை. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவருக்கொருவர் சார்ந்து வாழ வேண்டிய தேவை இருக்கிறது. அதை விட தேவைப்பட்டால் ஒரு பெண் தன் குழந்தையோடு தனித்து வாழும் சூழ்நிலைகளும் வளர்ந்து விட்டது. ஒரு சமூகம் மேம்பாடு அடைய வேண்டுமானால் கல்வி, உயர்கல்வி என பெண் செல்லும்போதுதான், அவளை முன்னிட்டு சந்ததிகளும் அடுத்த எல்லைக்குள் பிரவேசிக்கின்றன. அதுவும் இப்போதைய பெண் சாதிக்கிற நோக்கிலேயே வெளிப்படுகிறாள். அதை எல்லாம் அவள் சரியாக செய்ய வேண்டுமானால் சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். அந்த வகையிலும் பார்த்தால் 18 வயது திருமண வயது பெண்ணுக்கு என்றால் அவள் பள்ளிக்கல்வியை மட்டுமே முடிக்க முடிகிறது. உயர்கல்வி என்பதற்கு 21 வயது வாய்ப்பாய் அமைகிறது. உயர்கல்வி முடித்தபிறகு தன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற முதிர்ச்சியும் கூட அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டு விடுகிறது.இதன் மூலம் கிராமப்புறங்களில் இன்றும் நிலவும் பால்ய விவாகம் ஒழியும். ஆகவே இந்த சட்டத்தை வரவேற்கிறேன்!’’ என்று குறிப்பிட்டார்.
குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் பூமா – கூறும்போது,
18 வயசுங்கறதே ஒரு குழந்தைப்பருவம்தான். ஒரு குழந்தையே இன்னொரு குழந்தைக்கு தாயாகறதை மருத்துவ உலகம் ஏற்றுக் கொள்வதில்லை. 13- 19 வயது டீன் ஏஜ் பருவம்ன்னும் சொல்கிறோம். அப்படி பார்த்தாலும் கூட இந்த டீன் ஏஜ் பருவத்தில் கர்ப்பம் என்பது உருவாவது தாய்க்கும், சேய்க்கும் கூட நல்லதில்லை. பிரின்சிபல் மெச்சூரிட்டி, மெண்டல் மெச்சூரிட்டி ரெண்டுமே அப்ப அவங்களுக்கு இருக்காது. டெவலப்மெண்ட் ஆப் யூட்ரஸ், பிரஸ்ட் எல்லாமே சரியாக பொருந்தும் பொதுவான வயசு 21. 18 வயசுல ஓட்டு உரிமை இருந்தாலும் கூட, அதே வயசுல திருமணம் செய்யாம இருப்பதுதான் நல்லது. ஹார்மோன் மாற்றங்கள் முழு மெச்சூரிட்டி கிடைப்பது டீன் முடிஞ்சு ஆரம்பிக்கிற 21 வயசுலதான். டீன் ஏஜ் பருவத்தில் திருமணம் ஆகி கர்ப்பம் ஆகும்போது ஏதாச்சும் ஒரு சூழ்நிலையில் அந்தப் பெண்ணுக்கு சிசேரியனோ, வேறு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டதுன்னா ரொம்ப கஷ்டமாயிரும். கர்ப்பத்தின்போது பெல்விக்போ ன் எக்ஸ்பேன்ஷனுக்கும், பிரசவ வலி வரும்போது அதை தாங்கும் சக்திக்கும் 21 வயசுதான் பொருத்தமானதா மருத்துவரீதியாக உள்ளது. சமூக ரீதியாகவும், பொருளதார ரீதியாகவும், மருத்துவரீதியாகவும், மனநிலை ரீதியாவும் என எல்லா நிலையிலும் பெண்ணுக்கு 21 வயது திருமணமே சரியானது என்பது என் கருத்து.
கோவை மூத்த வழக்கறிஞர் சி. ஞானபாரதி கூறும்போது,
மனுஸ்மிருதி பெண்ணுக்கு பால்ய வயதில் திருமணம் என்பதையே வலியுறுத்துகிறது. சில முனிவர்களின் கூற்றுக்களைப் பார்த்தால் பெண் பிள்ளைகளை குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைத்து விட்டால் அவர்களுக்கு பெரும் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆளாளுக்கு சொல்லியிருக்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் காலஞ்சென்ற தேசத்தலைவர் ஒருவர், பெண்கள் மூன்று வயது, நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே ஓர் ஆணுக்கு மணமுடித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டால் ஒரு நாற்றைப் பிடுங்கி சரியான பருவத்தில் வயலில் நட்ட மாதிரி, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு போகிறோம் என்ற வருத்தம் கூட வராமல் பெண் தான் வாழும் வீட்டில் வாழ முடியும் என்றும் கூட பிற்போக்குத்தனமாக சிந்தித்து எழுதவும் செய்தார். இது எல்லாம் அந்தக் கால சூழல் எப்படியிருந்ததோ அப்படியே சிந்தித்திருக்கிறார்கள். ஆனால் தற்போதை நவீன காலத்திற்கு அவை எல்லாமே அபத்தத்தின் வெளிப்பாடுகளே. பெண்ணுக்கு திருமண வயது என்பது 21 என்பது சரியானது. அதை நிறைய மருத்துவர் குழு, நிபுணர்கள் குழு எல்லாம் காலம், காலமாக ஆய்வு செய்து சொல்லியிருக்கிறார்கள். இந்த காலகட்டம்தான் டீன் ஏஜ் பருவம் தாண்டி, உணர்வுகளுக்கு இடம் தராமல் அறிவுப்பூர்வமாக ஒரு பெண் சிந்தித்து முடிவு எடுக்கும் தருணமாக உள்ளது. கருவுறுதல், பிள்ளைப் பேறு போன்றவைக்கு ஏற்புடைய உடல்வாகு, பிரசவத்தில் குழந்தை அல்லது தாயின் மரணம் போன்றவை தவிர்க்கப்படக்கூடிய சூழல் எல்லாமே இந்த 21 வயதில்தான் வருகிறது என்பதையும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவேதான் பெண் திருமண வயதை 21-க்கு மாற்றச் சொல்லி உலக நாடுகளுக்கு ஐ.நா.சபையே தொடர்ந்து வலியுறுத்துகிறது. தவிர இந்த சட்டம் வந்தால் போக்சா சட்டம் பாயும், இன்னும் ஆண்கள் மீது வழக்குகள் பாயும். போலீஸ் ஸ்டேஷன்களில் கட்டப்பஞ்சாயத்துகள் நிரம்பி வழியும் என்று நினைப்பதெல்லாம் வெறும் கற்பனை வாதம். பெண்ணுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்தால் அது குற்றம். பாலியல் வன்முறை குற்றத்தின் கீழ் அது வந்து ஆணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. இந்த சட்ட வடிவமே வேறு. 18-லிருந்து 21 வயது வரை உள்ள பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம்தான். ஆனால் அது போக்சோ சட்டத்தின் கீழ் வராது. பெற்றோர் சம்மதப்படி பெண் திருமண வயது வராமலே (21 வயது) திருமணம் செய்து வைக்கப்பட்டால் திருமண வயது வரம்பு மீறின சட்டப்படி அதற்கு ஒரு அபராதத்தொகையே நிர்ணயிக்கப்படும் என்று சொல்கிறார்கள்!’’ என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறும் போது,
இந்த சட்டம் என்னைப் போன்ற பெண்ணைப் பெற்ற தகப்பன்கள் நெஞ்சில் பால் வார்த்தது போலிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கு முன்பு மட்டும் இந்த சட்டம் வந்திருந்தால் நானே என் பெண்ணைக் காப்பாற்றியிருப்பேன்…!’’ என்று கனிந்துருகியவர் தன் பெண்ணின் வாழ்க்கையை இதற்கு முன்னுதாரணமாக சொன்னார்.மூணு வருஷம் முன்னே எம் பொண்ணு இப்படித்தான் டிகிரி படிக்கிற நேரத்தில் காதலில் விழுந்தாள். நாங்க எவ்வளவோ எடுத்து சொன்னோம். இது உனக்குப் படிக்கிற வயசு. வேண்டாம்ன்னு. அவ கேட்கலை. அந்தப் பையன்கிட்டவும், அவங்க வீட்டார் கிட்டவும் நேர்லயே போய்க் கெஞ்சினேன். பொண்ணு படிக்கணும். விட்ருங்கப்பா. படிப்பு முடிஞ்சதும் பேசிக்கலாம்ன்னு சொன்னேன். கேட்கல. சரியா என் பொண்ணுக்கு எப்போ 18 வயசாகும்ன்னு தெரிஞ்சு, 18 வயசு ஒரு நாள் ஆனதும் ஆதார் அட்டைய காட்டி போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு கல்யாணம் முடிச்சிட்டாங்க. நாங்களும் கை கழுவின மாதிரி விட்டோம். இப்ப 21 வயசாச்சு, பொண்ணுக்கு. 2 குழந்தைகள். டிகிரியும் முடிக்கல. பாடத்துல 2 அரியர்ஸ். அது மட்டுமா. புருஷன் எங்கியோ கடைக்கு கூலி வேலைக்குப் போறான். சம்பளம் போதலை. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியல. எம் பொண்டாட்டிதான் கூலி நாழி செஞ்சு அந்த வீட்டு வாடகையை கொடுக்கறா. இப்படி எத்தனை குடும்பங்கள் பாழ்பட்டிருக்கும். எத்தனை பொண்ணுக பாதிக்கப்பட்டிருக்கும். இதே 21 வயசுன்னா பொண்ணு படிப்பு முடிச்சிருக்கும். அதோட முடிவை முதிர்ச்சியா எடுத்திருக்கும். ரோட்டுல, வழியில போறவனை ரோமியோன்னு நினைச்சு ஏமாறுகிற நிலைல இருக்காது!’’ என்றெல்லாம் உணர்ச்சி பொங்கினார்.
கோவை அவிநாசிலிங்கம் மனையியல் கல்லூரி மாணவி தா.ரா. ரிதன்யா ஸ்ரீ கூறுகையில்,
அரசு நல்ல முடிவை எடுத்திருக்கிறது. 18 வயதில் ப்ளஸ் ஒன், ப்ளஸ்டூதான் படித்திருப்பேன். அப்ப ஊசலாட்டத்தில் சரியான முடிவு எடுக்க முடியாது. அப்படியே முடிவு எடுத்தாலும் அது பின்னாளில் வருத்தப்படும் முடிவாகத்தான் இருக்கும். 21 வயது என்பது என்னைப் போன்ற பெண்களுக்கு நல்ல முடிவு எடுக்கும் திறன் மேம்படுவதற்கான வாய்ப்பு. அதற்கு சட்டம் கொண்டு வரும் அரசுக்கு என் நன்றி!’’ என்றார்.
சமீபத்தில் கல்லூரி முடித்து வக்கீலாக பிராக்டீஸ் செய்து வரும் மகாலட்சுமி கூறும்போது,
21 வயசுல முடிவு எடுக்கும் மெச்சூரிட்டி இருக்கும். கண்டிப்பாக டிகிரி முடிச்சிடலாம். யாரையும் சார்ந்திருக்காமல் தன்னையே நம்பி வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். பள்ளிப் படிப்பு மட்டும் முடித்து விட்டு மற்றவரை சார்ந்திருக்கும் நிலை பெண்ணுக்கு இருக்காது. ஆகவே இந்த சட்டத்தை பெண்கள் அத்தனை பேருமே வரவேற்பர்!’’ என்று தெரிவித்தார்.