பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மோடியின் உருவப்படத்திற்கு மலர் தூவி த.பெ.தி.கவினர் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோவையில் பிரதமர் மோடியின்  உருவப்படத்திற்கு மலர் தூவி நூதன முறையில் போராட்டம் இன்று காலை நடைபெற்றது.கோவை அவிநாசி சாலையில் ஒரு தனியார் மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்கில்  த.பெ.தி.க பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் டீசல், பெட்ரோல் விலையை உலகிலேயே அதிகமான விலைக்கு உயர்த்தி சாதனை படைத்ததாக மோடியின் உருவப்படத்திற்கு மலர் தூவினர் போராட்டத்திற்கு நடத்தினர்.அப்போது அவர் கூறுகையில், ”சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக உள்ளது. எனவே நாடு முழுவதும் பெட்ரோல் விலையை ரூ.70 க்கு விற்பனை செய்ய மத்திய அரசால் முடியும். ஆனால் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 100 ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே டீசல், பெட்ரோல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனே மேற்கொள்ள வேண்டும்”. என்றார்.முன்னதாக மலர் தூவும் போராட்டம் அறிவித்த உடன் அந்த பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து உரிய அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக த.பெ.தி.க. பொது செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

scroll to top