கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் முழு ஊரடங்கு அமலாகிறது. டெல்டா மற்றும் கொரோனா பரவல் கர்நாடகாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொற்று வேகமாகப் பரவும் பெங்களூரூவில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. பெங்களூரூவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி நிறைவடைய இருந்த இரவு நேர ஊரடங்கும் அடுத்த 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், ”வரும் 6 ஆம் தேதி முதல் பெங்களூரூவில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடைபெறும். அதே வேளையில் 10,11,12 வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். கர்நாடகாவில் அனைத்து திரையரங்குகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் 50%இருக்கைகளுடன் செயல்படும். கர்நாடகாவுக்கு மகாராஷ்டிரா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கையும் 21ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது” என அறிவித்துள்ளார்.