‛பிரேமானந்தா முதல் அன்னபூரணி அரசு அம்மா வரை…!’ எப்படித்தான் ‘ட்ரெண்டிங்’ ஆகிறார்கள் இந்த சாமியார்கள்?

THE KOVAI HERALD

‛பளிச்’ சென்று நல்ல சந்தன நிற முகம், நெற்றியில் குங்குமக்கலரில் ஸ்டிக்கர் பொட்டு, உதட்டில அழுத்தமான சிகப்பு வண்ண லிப்ஸ்டிக், பளபளக்கும் ஜரிகை பட்டு சேலை, அதை விட பளபளப்புடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கெண்டைக்கை சதையை இறுகப்பற்றியிருக்கும் ரவிக்கை, ஆளுயர ரோஜாப்பூ, சம்பங்கி, அரளிப்பூ மாலைகள் சூட அமர்ந்திருக்கும் நாற்காலியில் ஏதோ ஓர் அதிர்வு. ஸ்பிரிங் வைத்திருக்கிறார்களோ, அவர்  உடலே அப்படி அதிர்கிறதோ தெரியவில்லை.

பக்தி காலண்டர்களில் அருள்பாலிக்கும் அம்மனைப் போல் வலக்கையை உயர்த்தி, இடக்கையை தாழ்த்தி அருள்பாவிக்கிறார். அவர் காலில் பூக்கள் தூவுகின்றனர். சில பெண்கள் அவர் காலைப் பற்றிக் கொண்டு கதறுகின்றனர். ‛அம்மா..! அம்மா…‛ ஆத்தா… தாயே…!’’ ஓலக்குரல்கள் மண்டபத்தையே அதிர வைக்கிறது. கூட்டம் திமிலோகப்படுகிறது.

அதிர்ந்த அம்மன் ஒய்யாரமாக எழுந்து நடந்து வருகிறார். அவர் வரும் வழியெல்லாம் பூத்தூவும் பக்தர்கள். ‛பொத்.. பொத்’தென்று காலில் விழும் பக்தைகள். காட்சி மாறுகிறது.

அதே பெண் முகம் சிவக்க, கண்களின் ரத்தநாளம் முறுக்கேற கோபமாய், ‛நான் சொன்னேனா… சாமியார்ன்னு நான் சொன்னேனா? சாமியார்ன்னு சொல்லாத நான் எப்படி போலி சாமியார் ஆவேன். எனக்குள்ளே ஒரு சக்தியை மத்தவங்க உணர்கிறாங்க. அவங்களுக்கு ஆறுதல் சொல்றேன். அதுக்காக நான் எப்படி அம்மன் ஆவேன். சாமியார் ஆவேன்?’’

அந்த யூட்யூப்பர் ஆங்கர் திணறுகிறார்.

‛அப்புறம் எதற்கு கைகளை உயர்த்தி அருளாசி கொடுக்கிறீங்க?’’

‛அது அருளாசின்னு உங்களுக்கு யார் சொன்னா. நீங்களா கற்பனை பண்ணிக்கிறதுக்கு எல்லாம் எப்படி நான் பொறுப்பா ஆக முடியும்..?’’ ‛சரி, அம்மன் இப்படியா ஆடம்பரமா பட்டு சேலை கட்டி, லிப்ஸ்டிக், ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் வச்சுட்டு சிங்காரிச்சுட்டு வருவாங்க!’’

 ‛‛ஏங்க உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நான் எப்போ அம்மன்னு சொன்னேன். நான் ஒரு ஆன்மீகப் பயணம் போறேன். அதுல என் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்றேன்!’’ அதுதான் கேட்கிறேன். ஆன்மீகம்ன்னு சொல்லீட்டு எளிமையா இல்லாம மேக்கப் எல்லாம் பண்ணீட்டு..!’’

‛‛ஏன் இருக்கக்கூடாதா? நான் இப்படி இருக்கணும்ன்னு இருக்கிறேன். ஆன்மீக வழின்னா உத்தராட்சம் போட்டுட்டு, காவி கட்டீட்டு, ஜடா முடி உட்டுட்டு திரியணுமா? எனக்குப் புடிச்சிருக்கு நான் இந்த துணி உடுத்தியிருக்கேன். இப்படி என்னை அழகா வச்சிக்கறேன். அதுல உங்களுக்கென்ன உறுத்தல். அவங்கவங்களுக்கு வேண்ணா ஜீன்ஸ், டீ சர்ட் போட்டுக்கட்டும். காவி கட்டீட்டு, துண்டு போர்த்திட்டு துணி போடறதுலதான் ஆன்மீகம் இருக்குன்னு சொன்னா அதுதான் ஏமாத்து வேலை!’’

‛‛சரி, நீங்க சொல்வதெல்லாம் உண்மையில உங்க புருஷனையும், 2 குழந்தைகளையும் விட்டுட்டு,அரசு என்ற வேறொரு அம்மாவோட புருஷனை கூட்டீட்டு பஞ்சாயத்துப் போனது எல்லாம்…!’’

‛‛ஆமாம் போனேன். அதுலதான் நான் என்னை உணர்ந்தேன். அரசுக்குள்ளேயும் எனக்குள்ளேயும், ஒரே மாதிரியான ஆன்மீக ஒளி இருந்ததை ரெண்டு பேருமே உணர்ந்தோம்!’’

‛‛அந்த அரசு எப்படி செத்தார். அதுலயும் மர்மம் இருக்குன்னு!’’

‛‛ஏங்க அவர் இயற்கையா இறந்தார். அவருக்குள்ளே இருக்கிற ஆன்மீக ஆற்றல் எனக்குள்ளே ஏறி நிற்குது. இது உங்களால் உணர முடியாது. கண்ணால பார்க்க முடியாது..!’’

 புஸ்ஸூ, புஸ்ஸூ என்று மூச்சு வாங்குகிறது , கோபம். ஆவேசம். ஆக்ரோஷம் எதுவோ உறுத்து விழிக்கிறார்.

‛அன்னபூரணி அரசு அம்மா, அன்னபூரணி அரசு ஆத்தா, அன்னபூரணி சாமியார், அன்னபூரணி போலி சாமியார்…!’

இப்படியான பெயர்களில் சமூக வலைத் தளங்களில் ட்ரெண்டிங் ஆனாலும் ஆனார் இந்த பெண் சாமியார். இல்லையில்லை ஆன்மீகவாதி. அவர் சமூகப் பின்புலம் என்ன? அரசியல் பின்புலம் என்ன? அவர் வீட்டு செல்ல நாய்க்குட்டி, செல்ல பூனைக்குட்டி எல்லாம் எப்படி இருக்கின்றன என்ற பெருத்த ஆராய்ச்சியே சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும், பத்திரிகைகளிலும் தீவிரமாய் நடந்தேறி வருகிறது.

செட்டிநாடு, நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட அன்னபூரணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். ஈரோடு சந்தையில் துணி வாங்கி வந்து விற்று பிழைப்பு நடத்த ஏழ்மையில் உழன்ற குடும்பத்தில் இரண்டாம்தாரமாக ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறார்.

பின்னர் அவருடன் பிணக்கு. இன்னொரு ஆணுடன் (இவர் பெயர் அரசு. இவரும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளவர்) தொடர்பு ஏற்பட்டு பஞ்சாயத்து  தனியார் தொலைக்காட்சி ஒன்றின் தொடரான ‛சொல்வதெல்லாம் உண்மை’ வரை பஞ்சாயத்து வந்திருக்கிறது.

அந்த பஞ்சாயத்தில் அன்னபூர்ணியும், அரசுவும் தத்தமது கணவன், மனைவியிடம் விவகாரத்து கோருகின்றனர். எதிர் அணி மறுக்கிறது. இவர்கள் உறவை கண்டிக்கிறது. பஞ்சாயத்து முடிந்து இன்றைக்கு 8 வருடங்கள் ஆகி விட்டது. அரசுவும், அன்னபூர்ணியும் இணைந்து வாழ்ந்த நிலையில் அரசு 2019-ல் மரணமடைந்திருக்கிறார்.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அரசுவும் தானும் தனக்குள் இருந்த இறை நிலை உணர்ந்து   இயற்கை ஒளி என்ற அமைப்பை ஏற்படுத்தி துன்பத்தில் ஆழ்ந்து தன்னை நாடி வந்த மக்களுக்கு ஆறுதல் (அருளாசி) வழங்கி வந்ததாக சொல்கிறார் அன்னபூரணி. இடையில் கணவனிடமிருந்த சக்தி, அவர் மரணத்திற்குப் பின் தன் உடலுக்குள் புகுந்து நிற்பதாகவும், அவர் உருவில் ஒரு சிற்பம் எழுப்பி வழிபட்டதாகவும் (அந்த சிற்பத்தை அன்னபூரணிக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவர் உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது) சொல்கிறார்.

இவரின் இந்த பயணம் கோவை தொண்டாமுத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை நீண்டிருக்கிறது. வரும் புத்தாண்டு தினத்தன்று ஒரு மண்டபத்தை பதிவு செய்து, அங்கே பக்தர்களுக்கு அருளாசி வழங்கத் திட்டமிட்டிருந்தார் அன்னபூரணி. அதற்குள் இவரின் ஆன்மீக எதிரிகள் தொழில் போட்டியில் இவரின் ஆன்மீக அருளாசி மற்றும் சொல்வதெல்லாம் உண்மை வீடியோ  காட்சிகளை பிணைத்து வலைத்தளங்களில் பரவ விட  விஷயம் விவகாரமாகி, அவர்களே எதிர்பாராத வண்ணம் படு ட்ரெண்டிங் ஆகி விட்டது.

பொதுவாக ரிஷிமூலம், நதி மூலம் ஆராயக்கூடாது என்பர். ஆனால் ட்ரெண்டிங் ஆன ரிஷிகளுக்கு மூலம் தேடுவதுதானே நவீன கால வர்த்தகம்.

ஆட்டோ சங்கர், செக்ஸ் டாக்டர் பிரகாஷ், கேடி பில்லா, கில்லாடி ரங்கா, மலையூர் மம்பட்டியான், சந்தனக்கடத்தல் வீரப்பன், பங்குச்சந்தை மோசடி ஹர்சத் மேத்தா, பத்திரப்பதிவு மோசடி தெல்கி, செரீனா, ஜெயலட்சுமி போன்றவர்களின் கொலை, கொள்ளை, மோசடி, சதி, கடத்தல் மற்றும்   இன்னபிற பாலியல் சமாச்சாரங்களில் எந்த அளவுக்கு மலினப்பட்ட இந்த மனித குல ரசனைக்கு ஏற்ற சுவாரஸ்யங்கள் நிரம்பிக் கிடக்கின்றனவோ, அந்த அளவுக்கு இந்த சாமியார் விஷயத்திலும் உள்ளது. எனவேதான் இது வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் பூதாகரமான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

உலகில் சுவாரஸ்யமான சாமியார் கதைகள் புதிதில்லை. அதிலும் இந்தியா ஒரு ஆன்மீக தேசம். இங்கே வடகயிலாயம் முதல் தென் கயிலாயம் வரை தினம்தோறும் உழலும் சாமியார்களுக்கும் பஞ்சமில்லை. வடக்கே இமயமலை ரிஷிகேசம், பத்ரிநாத், கேதர்நாத் போனாலும் சரி, இங்கே ராமேஸ்வரம், கொல்லிமலை, குற்றாலம், பூண்டி வெள்ளியங்கிரி மலை வந்தாலும் சரி இலட்சோப, லட்ச, ஆயிரமாயிரம் சாமியார்கள் மீதுதான் தடுக்கி விழ வேண்டும். அவர்களில் யார் எந்த நேரத்தில் ட்ரெண்டிங் ஆவார்கள் என்பது அவர்களின் செயல்பாட்டுக்கே வெளிச்சம். இந்த சமூக வலைத்தளங்கள் காலத்தில் மட்டுமல்ல; அச்சு ஊடகங்கள் காலத்திலிருந்தே இது சகஜமாகி வருகிறது.

அப்படி அச்சு ஊடக காலகட்டத்தில் ட்ரெண்ட் ஆனவர்தான் சுவாமி பிரேமானந்தா.

பிரேம்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட பிரேமானந்தா  இலங்கையின் மலையகத்தில் மாத்தளை நகரில் தனது ஆசிரமம் ஒன்றையும் அனாதை இல்லம் ஒன்றையும் நடத்தி வந்தார். ஈழப்போரை அடுத்து இவரும் சில சீடர்களும் 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வந்து திருச்சியில் பாத்திமா நகரில் ஓர் ஆசிரமம் அமைத்தார். இந்த ஆசிரமம் ஏறத்தாழ 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலம். இந்த ஆசிரமத்தி, பல பெண்களும், சிறுவர்களும் ஆதரவற்றோர்களும் என சுமார்  200 பேர் வரை தங்கியிருந்தனர்.ஆசிரமத்தின் கிளைகள் இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஏனைய பல நாடுகளிலும் திறக்கப்பட்டன. பின்னாளில் பிரேமானந்தா  பெண்களிடம் தகாத முறையில் நடந்ததாக 1997 ஆம் ஆண்டு எழுந்த பலத்த சர்ச்சை மற்றும் புகார்களின் அடிப்படையில்,  கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இது அப்போது அச்சு ஊடகங்களில் படு ட்ரெண்டிங் ஆனது. பாலியல் குற்றம், வெளிநாடுகளில் அனுமதியின்றி சொத்து குவித்தது, முதலீடு செய்தது, கொலைக்குற்றம் போன்ற பல குற்றங்கள் ஊர்ஜிதமாகி நீதிமன்றம் இவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தது  கடலூர் மற்றும் சென்னை மத்திய சிறைகளில் இருந்த இவர்  உடல் நலக் குறைவு ஏற்பட்டு 2011-ல் மரணமடைந்தார். 

இதே 1997-ம் வருடம். கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈசா யோகா மையம் திடீர் சர்ச்சைக்கு ஆட்பட்டது. இந்த மையத்தை உருவாக்கிய ஜக்கி வாசுதேவ் மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லி, பெங்களூருவைச் சேர்ந்த அந்த பெண்ணின் தந்தையே கோவை போலீசில் புகார் செய்தார். ஜக்கியோ, “யோகாவில் உன்னதமான உயர்ந்த நிலை சமாதிநிலை. அதை அடையணும்ன்னு அந்தப் பெண் தீவிரமாக முயன்று வந்தார். ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அதை வேண்டாம் என்று நான் தடுத்து வந்தேன். ஆனால் அவள் விருப்பப்படி சென்று விட்டாள்!’ என்று தெரிவித்தார். இந்த விவகாரம் அப்போது பத்திரிகை மீடியாக்களில் படு சர்ச்சையானது. பெற்றோர் விருப்பமில்லாமல் இளம் பெண்களுக்கு தீட்சை. மெஸ்மெரிசம், ஹிப்னாடிசம், உணவில், பருகும் பானத்தில் போதை, காடுகள் ஆக்கிரமிப்பு, யானை வலசைப்பாதையில் கட்டிடங்கள் என்றெல்லாம் அதில் விவகாரங்கள் புரண்டன.  அதற்கு முன்பு வரை சிவராத்திரி திருவிழாவுக்கு சுமார் 30 ஆயிரம் 40 ஆயிரம் பேர்கள் வரை இங்கே கூடிக்கலைவது வழக்கம். இப்படி ஒரு விவகாரத்தில் யோகாமையம் ட்ரெண்டிங் ஆன பிறகு படு அமர்க்களப்பட்டது. அடுத்த ஆண்டு முதலே இதன் பக்தர்கள் லட்சக்கணக்கில் தாண்டியது. இந்த யோகா மையம் உலகெங்கும் கிளைகள் விரித்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்து பெரும்பான்மை அமைச்சர்கள், முதலமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ்., ஐ,பி.எஸ் அதிகாரிகள் வரை இங்கே வந்து செல்வது அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இந்தியப்பிரதமர் மோடியே இங்கே வந்து இறங்கி ஜக்கியுடன் விழாவில் கலந்து கொண்டது நடந்தது. ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிக் கிடக்கும் இந்த நிறுவனத்தின் மீது இப்போது காடுகள் ஆக்கிரமிப்பு, யானை வலசையில் கட்டிடங்கள், பெற்றோர் அனுமதியில்லாமல் பிள்ளைகளுக்கு தீட்சை போன்ற சர்ச்சைகள், போராட்டங்கள் அவ்வப்போது கிளம்பிக் கொண்டுதான் இருக்கிறது.

சதுர்வேதி சாமியார்

 அடுத்ததாக இந்த ட்ரெண்டிங் வரிசையில் வந்தவர் சதுர்வேதி சாமியார்.   முதுநிலை பட்டதாரியான இவர் சென்னை தியாகராய நகரில் ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை நடத்தி வந்தார். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று தனது அறக்கட்டளை அலுவலகத்தில் ஆன்மீக சொற்பொழிவாற்றுவார் சதுர்வேதி. இவருக்கு பிரசன்ன வெங்கடாச்சாரியார், வெங்கட சரவணன் போன்ற பெயர்களும் உண்டு. சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த ஒருவர் தொழில் ரீதியாக தனக்குள்ள பிரச்னைகளை தீர்த்து வைக்கக்கோரி கடந்த 2004ஆம் ஆண்டு சதுர்வேதியை நாடியுள்ளார். குறிப்பிட்ட நபரின் பிரச்னையை தீர்ப்பதாகக்கூறி அவர் வீட்டுக்குச் சென்ற சதுர்வேதி அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தியிருக்கிறார். தனது சித்து வேலைகளை காட்டி தொழிலதிபரின் மனைவி மற்றும் 16 வயது மகளை கவர்ந்திருக்கிறார் சதுர்வேதி. நாளடைவில் பூஜை செய்யப்போன வீட்டின் கீழ்தளத்தை ஆக்கிரமித்துக் கொண்டார். விசேஷ பூஜை என்ற பெயரில் தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளை சதுர்வேதி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும்,  தனது அறைக்குள்ளேயே இருவரையும் அடைத்து வைத்து பலமுறை வன்கொடுமை செய்ததாகவும் , வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிய தொழிலதிபரை தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டியதாகவும், ஒரு கட்டத்தில் தன் மனைவி மற்றும் மகளை ஆந்திராவிற்கு கடத்திச் சென்றுவிட்டதாகவும் கூறி சதுர்வேதி.மீது போலீசில் புகார் செய்தார் தொழிலதிபர். சதுர்வேதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது காவல்துறை. அதன்பின் சதுர்வேதி சாமியார் மீது புகார்கள் குவிந்தன. பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு எனப் பல புகார்களை வரிசைப்படுத்தி  23 பிரிவுகளில் சதுர்வேதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2004ஆம் ஆண்டு சதுர்வேதி கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த சதுர்வேதி 2016ஆம் ஆண்டு முதல் தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து ட்ரெண்டிங் வரிசையில் இடம் பெற காஞ்சி மடமும் தப்பவில்லை. நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் முதல் மாநிலங்களின் முதல்வர்கள் வரை அருளாசி பெற்று செல்லும் முக்கியமான புராதனம் மிக்க ஆன்மீக மையம் காஞ்சிமடம்.காஞ்சிபுரம் சங்கர்ராமன் கொலை வழக்கில், 11 நவம்பர் 2004 அன்று ஜெயந்திர சரசுவதி கைதுசெய்யப்பட்டார். 10 சனவரி 2005 அன்று உச்ச நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது. புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சங்கரராமன் கொலை வழக்கில், அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்படாததால், 27 நவம்பர் 2013 அன்று கொலை வழக்கிலிருந்து ஜெயந்திர சரசுவதி சங்கராச்சாரியார் விடுவிக்கப்பட்டார். இதே ஜெயேந்திரசரஸ்வதி 1987இல் சன்னியாசிகளுக்கான சாதுர்மாசிய விரதத்தை பாதியில் விட்டு காஞ்சி மடத்திலிருந்து தலைமறைவானார். அப்போது அவருக்கு பதிலாக புதிய இளைய சங்கராச்சாரியாராக விசயேந்திர சரசுவதி நியமிகககப்பட்டார். தேடுதலில் தலைக்காவிரியில் துறவி ஆடைகளை துறந்து தலைமறைவாக இருந்தவரை மீணடும் காஞ்சிக்கு கொண்டுவந்தனர். இதனால் ஒரே நேரத்தில் விதிகளுக்கு மாறாக மூன்று சங்கராச்சாரியார்கள் மடத்தில் இருந்தனர். இந்த செய்திகள் ஒவ்வொன்றும் அன்றைய செய்திப் பத்திரிகை மீடியாக்களுக்கு ட்ரெண்டிங் ஆகின. குறிப்பாக ஜெயேந்திரர் சங்கர்ராமன் கொலை வழக்கில் கைதான செய்திகளை தாங்கி வந்த போது தமிழகத்தின் அனைத்து தமிழ் பத்திரிகைகளும் விற்பனையில் வரலாறு காணாத உச்சம் தொட்டது. இன்று வரை அந்த விற்பனை உச்சத்தை தமிழ் பத்திரிகைகள் தொடவேயில்லை.

சுவாமி நித்யானந்தா

அதையடுத்தும் சாமியார் சர்ச்சைக்குள் அகப்பட்டு ட்ரெண்டிங் ஆனவர் சுவாமி நித்யானந்தா. இவர் பரமஹம்ச நித்தியானந்த தியான பீடம் என்பதைத் தோற்றுவித்துள்ளார். இந்த பீடத்தின் தலைமை இடம் பெங்களூருவில் உள்ளது. இந்த பீடத்திற்கு கனடா முதலான 50 நாடுகளில் கிளைகள் உள்ளன. உலக அளவில் 10 மில்லியன் நபர்கள் பின்பற்றுபவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட சாமியார் நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை  2010, மார்ச் 2 தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்ப அடுத்தடுத்த நாட்களில் ட்ரெண்டிங்கின் உச்சம் தொட்டார் நித்யானந்தா. அவர் மீது அடுக்கடுக்காய் பாலியல் புகார்கள் உட்பட பல புகார்கள் புறப்பட்டன. இதன் பின்னே ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள கோகலம் மாவட்டம் கர்கி எனும் ஊரில் நித்தியானந்தாவை கர்நாடக காவல்துறையினர் ஏப்ரல் 21, 2010 அன்று கைது செய்தனர். பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றிருக்கும் நித்தியானந்தா 18 மாதங்களுக்கு முன்னர் நித்தியானந்தா நேபாளம் வழியாக தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்குவடார் நாட்டின் அருகே உள்ள ஒரு தீவில் தனது பக்தைகளுடன் தங்கி, ]அதனருகில் உள்ள தீவை விலைக்கு வாங்கி தனி நாடு நிறுவியுள்ளதாக அடிக்கடி செய்திகள் ட்ரெண்டிங் கட்டிக் கொள்கின்றன.

இதுவெல்லாம் பெரிய ட்ரெண்டிங் ஆன பெரிய சாமியார்கள் வரிசைதான். மாவட்ட அளவில், நகர அளவில், கிராம அளவில் இத்தகைய சாமியார்கள் உண்டு. தாலி சாமியார், தலையில் தேங்காய் உடைக்கும் சாமியார், நடு இரவில் சுடுகாட்டில் நிர்வாண பூஜை செய்யும் சாமியார் இப்படி பலர் உள்ளூர் அளவிலேயே சர்ச்சைக்குள்ளாகி நின்று விடுவதும் உண்டு.

பிரேமானந்தா முதல் அன்னபூரணி ஆத்தா வரை எந்த சாமியார்களானாலும் ஊரை ஏமாற்றும் ஏதாவது ஒரு தப்பு செய்தே வருகிறார்கள். அவர்களுக்குள் நடக்கும் தொழில் போட்டி, பங்கு பிரிப்பு பிரச்சனையின் காரணமாகவே அவர்களின் எதிரிகள் அதை அம்பலப்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் அப்படி அம்பலப்படுத்த தனியார் டீவி சேனல்கள், பத்திரிகைகள் தேவையாக இருந்தது. இப்போது அப்படியல்ல. ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அவர்களின் ஆதி முதல் அந்தம் வரை தம் ‛யூ-ட்யூப்’ மூலமும், இதர வலைத்தளங்கள் மூலமும் போட்டுத் தாக்கி விடுகிறார்கள். அதுதான் அன்னபூரணி ஆத்தா விஷயத்திலும் நடந்தேறியிருக்கிறது. இவருக்கான தொழில்போட்டி மேல்மருவத்தூர் ஆட்களிடமிருந்தே புறப்பட்டதாக சொல்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை ட்ரெண்டிங் ஆன சாமியார்களுக்கெல்லாம் ஆதரவாகவே குரல் கொடுத்த இந்துத்துவா குழுவினர், அன்னபூரணி விஷயத்தில் மட்டும்  ‛எங்கள் வழிபாட்டு அடையாளமான அம்மனை கொச்சைப்படுத்தி விட்டார்!’ எதிர் குரல் கொடுத்து போலீசில் புகார் செய்துள்ளனர். அன்னபூரணியும் பதிலுக்கு புகார் கொடுத்துள்ளார். சாமியார்கள் மீது காவல்துறையில் புகார்கள் குவியும் நிலை போய் இப்போது சாமியாரே போலீஸில் புகார் அளித்திருப்பது மேலும் முரண்தானே?

scroll to top