வாரணாசியில் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் வளாகம் 600 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் லலிதா படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுஉள்ளது.
பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட இந்த வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக காசிக்கு வரும் பிரதமர் மோடி, முதலில் கால பைரவர் கோவிலில் வழிபடுகிறார். பின் கங்கை நதியில் படகில் பயணம் செய்து லலிதா படித்துறையை அடைகிறார். படித்துறையில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்கு நடந்து வந்து கோவில் வளாகத்தை திறந்து வைக்கிறார். மாலை கங்கை ஆரத்தி பூஜையிலும் பிரதமர் பங்கேற்கிறார். வாரணாசியில் தங்கும் பிரதமர், பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநில முதல்வர்களுடன் காலை ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி வாரணாசி விழாக் கோலம் பூண்டுள்ளது.