முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட Mi-17V5 ரக ஹெலிகாப்டர், வெலிங்டனில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் பறந்தபோது திடீரென கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த விபத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை விமான நிலையத்தில் 13 பேரின் உடல்களும் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டன. உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில், விமானப்படை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடியை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அஞ்சலி செலுத்தினார். மேலும், முப்படைகளின் தளபதிகளும் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.