THE KOVAI HERALD
பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியிருக்கிறார் ராகுல்காந்தி. கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கிய இப்பாத யாத்திரை பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ராகுல்காந்தியிடம் வழங்கினார்.
இதையடுத்து தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு சுமார் 700 மீட்டர் தூரம் நடந்து வந்த ராகுல்காந்தி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நான்கு நாட்கள் கன்னியாகுமரி, நாகர்கோயில் பகுதியிலேயே யாத்திரை நடத்திய ராகுல் ஐந்தாம்நாள்தான் கேரளாவில் தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். . இதன் மூலம் தமிழகம் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் காங்கிரஸிற்கு புத்தெழுச்சி கிடைக்கும் என நம்புகிறார்கள் எதிர்கட்சியினர். இதன் மூலம் மோடிக்கு எதிரான கோஷம் கொடி கட்டிப்பறக்கிறது. இது முழுக்க முழுக்க 2024 மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் ஆயத்தம் என்பதை மறுப்பதற்கில்லை. அந்தத் தேர்தல் அரசியலுக்கு ராகுலின் பாதயாத்திரை எந்த அளவ பயன்படும் என்று பார்த்தால் காங்கிரஸிற்கு பெரிய அளவில் அலை அடிக்கும் என்று தோன்றவில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
காங்கிரஸிற்கு பாதயாத்திரை என்பது புதிதல்ல. சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெரிய அளவில் தண்டியாத்திரையை நடத்தி உலகப் புகழ்பெற்றார் காந்தியடிகள். அதை அடியொற்றி சுதந்திர இந்தியாவிலும் இப்படியான யாத்திரைகளை காங்கிரஸ் அவ்வப்போது நடத்தியே வந்திருக்கிறது. அதில் கிடைத்த அரசியல் பலாபலன் என்பது காங்கிரஸ் கட்சிக்கே இருந்துள்ளது. ஆனால் அது ராகுல் காந்தியின் பயணத்தின் மூலம் எடுபடுமா என்பது கேள்விக்குரியே என்கிறார்கள் அவர்கள். என்னதான் காங்கிரஸ் பிராந்தியக்கட்சிகளை பெரிய அளவில் அரவணைத்து தன்னை பிராந்தியக் கட்சி அளவில் சுருக்கினால் ஒழிய எதிர்வரும் தேர்தலில் பாஜகவை அவர்கள் எதிர்கொள்ள முடியாது என்கின்றனர் அவர்கள்.
உதாரணமாக காங்கிரஸிற்கு கேரளத்தின் எல்லையில் உள்ள தமிழகப்பகுதிகள் காங்கிரஸிற்கு செல்வாக்கு உள்ள பகுதிகள். குமரி, நாகர்கோயில் தொடங்கி கேரளத்தின் மலப்புரம் வயநாடு வரைக்கும் இதேதான் நிலை. நீலகிரி மாவட்டம் கூடலூரிலோ, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலோ காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் மற்ற கட்சிகள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. ஒரு வேளை கூட்டணிக்கட்சிகள் உடைத்துக் கொண்டால் கண்டிப்பாக அங்கே பாஜக வளர்ச்சியைத் தடுக்க முடிவதில்லை.
அப்படித்தான் நாகர்கோயிலில் ஒரு பொன் ராதாகிருஷ்ணன் உருவானார். அதேபோல் ராகுல் காந்தி போட்டியிட்டு வென்ற தொகுதி வயநாடு. வடமாநிலங்களில் இல்லாத செல்வாக்கு இங்கே காங்கிரஸிற்கு இருந்ததாலேயே இங்கே போட்டியிட்டு வென்றார் ராகுல் என்பது அப்போதே அனைவராலும் பேசப்பட்ட தொகுதி. இப்படி கணக்குப் போட்டுப் பார்த்தால் தனக்கு செல்வாக்கு உள்ள, தன் கட்சிக்கு செல்வாக்கு மிக்க தொகுதிகள் வாரியாகவே பாதயாத்திரை பயணத்திட்டம் ராகுல்காந்திக்கு வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதன் மூலம் கட்சி சுத்தமாக சரிந்து, காணாமல் போயிருக்கிற பகுதிகளில் எல்லாம் யார் செல்வாக்கை மீட்டெடுப்பது. அங்கேயெல்லாம் இவர் நடைபயணம் போனால்தானே புத்தெழுச்சி வருவதற்கான வாய்ப்பாக அமையும்? என்பதே பலரது கேள்வி. இதன் மூலம் தனது தொகுதி மக்களை, தன் கட்சி எம்பிக்களின் தொகுதி மக்களை சந்தித்து எப்படியிருக்கீங்க? எனக் கேட்கவும், தன் தொகுதிகள் பத்திரமாக இருக்கிறதா? பலஹீனமாகி மோடிக்கு போக வாய்ப்பிருக்கிறதா? என்று கண்காணிக்கவும்தான் ராகுல் பாதயாத்திரை துவங்கியுள்ளது போல் தோற்றப்பொலிவு கண்டுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் கேரளத்தில் காங்கிரஸிற்கும், இடதுசாரிகளுக்கும்தான் போட்டி. இந்த இரண்டு அணிகள் தேசிய அளவில் ஒன்று சேர்ந்தால் மட்டுமே மோடிக்கு தேர்தலில் நெருக்கடி கொடுக்க முடியும். ஆனால் இங்கேயே காங்கிரஸ் தன்னை மறுபடி மறுபடி வளர்த்துக் கொள்ள நினைத்தால் யாருடன் எதிர்காலத்தில் கூட்டணி வைக்க வேண்டுமோ, அவர்களையே பலஹீனப்படுத்தி மீண்டும் பாஜகவை வெல்ல வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கிறார் ராகுல் என்கிறார்கள் நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ராகுலின் பாதயாத்திரையின் மூலம் நடந்த ஒன்றே ஒன்று. அந்தப் பயணத்தை ஸ்டாலின் துவங்கி வைத்ததும். அவரைக் கட்டியணைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது மட்டும்தான். ஏனென்றால் சமீபகாலங்களில் அரசியல் ரீதியாக காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகளுடன் கூட்டணியை திமுக வைத்திருந்தாலும், அரசு என்கிற ரீதியில் பாஜகவுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
அந்த வகையில் எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளுமோ திமுக என்ற சந்தேகம் திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அவ்வப்போது எழுந்து அடங்கிய வண்ணம் இருக்கிறது. அதற்கு தற்காலிகமாக இந்த நிகழ்வு மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் இரண்டு தலைவர்களும். அந்த வகையில் தமிழகத்தில் தன் இருப்பை இருந்தபடியே நிலை நாட்டியிருக்கிறார்கள் அது எல்லாம் எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு ராகுலுக்கு பலத்தை தமிழக அளவில் கொடுக்குமா என்றால் அதுவும் கேள்விக்குறியே.
ஏனென்றால் ஸ்டாலின் நடத்தும் ஆட்சியும், அவர் நடைமுறைப்படுத்தும் திட்டங்களும் கடந்த அதிமுகவின் செயல்பாட்டிற்கு எட்டாக்கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மைப் பகுதிகளில் திமுக தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இப்போது நம்ம ஆட்சிதான் நடக்கிறதா? என்ற சந்தேகம் இருக்கிறது என்று வெளிப்படையாக சொல்பவர்களும் இருக்கிறார்கள்
அவற்றை சரிப்படுத்தினால் ஒழிய ராகுல் பாதயாத்திரை மட்டுமல்ல, இன்னமும் திமுக கூட்டணியில் உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட சகல கட்சித் தலைவர்கள் பாதயாத்திரை நடத்தினாலும் எடுபடாது என்பதே அரசியல் உண்மை. அதை வைத்து எதிர்கட்சிகள் இப்போதிருந்தே சுதாரிக்க வேண்டும் என்கிறார்கள் நம்மிடம் பேசிய அரசியல் புள்ளிகள்.
S.KAMALA KANNAN Ph. 9244319559