பழமுதிர்சோலையில், தைபூசவிழா

மேலூர் அருகே, முருகப் பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றக்கூடிய பழமுதிர்
சோலையில் நடைபெற்ற தைப்பூச பெருந்திருவிழாவானது, பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர் கோவிலில் உள்ள, முருகப்
பெருமானின் ஆறாவது படைவீடாக கருதக்கூடிய பழமுதிர்ச்சோலை சோலைமலை முருகன் திருக்கோயில் 10 நாட்களாக நடைபெற்று வந்த தைப்பூச பெருந்திருவிழா தீர்த்தவாரி மற்றும் மஹா பூர்ணகுதியுடன் நிறைவு பெற்றது. கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த தைப்பூசத் திருவிழாவையொட்டி, முருகப் பெருமானுக்கு தினசரி பல்வேறு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, பூதவாகனம், சிம்மவாகனம், காமதேனு வாகனம், ஆட்டுக்கிடாய் வாகனம், குதிரை வாகனம், வெள்ளிமயில் வாகனம், பூச்சப்பரம் என தினசரி ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளப்பட்டு, திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம்வந்தார்.
இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளபட்டு, திருக்கோயில் முன்பு உள்ள தீர்த்தத் தொட்டியில் தீர்த்தவாரி மற்றும் மஹா பூர்ணகுதி நடைபெற்றது. இந்த விழாவில், கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசின் உத்தரவின்படி, பக்தர்கள் அனுமதியின்றி திருக்கோயில் குருக்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மட்டும் உரிய பாதுகாப்புடன் கலந்துகொண்டு நடைபெற்றது.

scroll to top