THE KOVAI HERALD
விமானத்தில் பறப்பது என்பது சாதாரண மக்களுக்கு இன்னமும் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. அதிலும் சாதாரண எளிய, விளிம்பு நிலைக்குடும்பத்திலிருந்து வரும் பெண் விமானப் பணிப் பெண்ணாக விமானத்தில் பறப்பது என்பது அபூர்வத்திலும் அபூர்வம். அழகு, பதுமைபோல நடந்து வருதல், திறமை, துணிச்சல், நுனிநாக்கில் ஆங்கிலம் இது எல்லாம் ஒரு விமானப்பணிப் பெண்ணுக்கான சிறப்புத் தகுதிகள் என்று யாவரும் யாருக்கும் கூறத்தேவையில்லை.
இப்படியான பறத்தல் உலகில் முதன் முதலாக கேரளத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர் விமானப்பணிப் பெண்ணாக தேர்வு பெற்றுள்ளார். அவர் பெயர் கோபிகா. அவருக்கான பறத்தல் கனவு 12 வயதியேயே ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் கண்ணூரில் உள்ள பழங்குடியினரான கரிம்பாலா சமூகத்தைச் சேர்ந்தவர் அவர். அத்தகைய கனவை வளர்ப்பதற்குக் கூட அவர் சமூகத்தில் தைரியம் தேவைப்பட்டது. எத்தனை கேலி, கிண்டல்கள், அதைரியங்கள். அதையெல்லாம் உடைத்துக் கொண்டுதான் தற்போது பறத்தல் வெளிக்குள் பிரவேசித்திருக்கிறார்.
தற்போது அவருக்கு வயது 24. அலக்கோடு அருகே உள்ள கவுங்குடி எஸ்டி காலனியைச் சேர்ந்த 24 வயதான இவர், விமானப் பணிப் பெண்ணாகப் பயணம் செய்யும் மாநிலத்தின் முதல் எஸ்டி பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் சேர உள்ளார்.
“எனது வீட்டிற்கு மேலே ஒரு விமானம் பறப்பதை அடிக்கடி பார்ப்பேன். அதில் ஆட்கள் பறந்து செல்கிறார்கள் என்பதே எனக்கு கேட்க அதிசயமாக இருக்கும். அதில் நாமும் பறக்க வேண்டும். முடியுமா என்று ஆசைப்பட்டேன். அப்படி இருக்க விரும்பியதை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இப்போதும், நான் ஒரு விமானத்தின் அருகே செல்லும்போது உற்சாகமாக உணர்கிறேன்!’’ என்கிறார் கோபிகா.
கோவிந்தன் மற்றும் விஜியின் மகளான கோபிகா, பெரும்பாலான பழங்குடியினப் பெண்களைப் போலவே ஒப்பீட்டளவில் நிறமற்ற குழந்தைப் பருவத்தையும் இளமைப் பருவத்தையும் கொண்டிருந்தார். “வானத்தைத் தொட வேண்டும், விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற இந்த கனவை நான் வளர்த்தேன், ஆனால் யாரிடமும் சொல்லவில்லை. என் பெற்றோருக்கு கூட ஆரம்ப காலத்தில் தெரியாது”என்று அவர் கூறினார்.
கோபிகா இதற்கான படிப்பு பற்றி விசாரித்தபோது அதிர்ந்து போனார். எல்லா நம்பிக்கையையும் கைவிட்டு விட்டார். பிறகும் அதை நெருங்கினார்.
“இது மிகவும் விலை உயர்ந்தது. என் குடும்பத்தால் செலவுகளை சமாளிக்க முடியவில்லை,. அப்போதுதான் எஸ்டி பெண்களின் கல்விக்கான அரசின் திட்டம் குறித்து அவருக்குத் தெரியவந்தது. வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் டிரெய்னிங் அகாடமியில் IATA கஸ்டமர் சர்வீஸ் கேரில் டிப்ளமோவைத் தொடர்வதற்கான வாய்ப்பை விசாரித்தேன். அப்போது கண்ணூரில் உள்ள எஸ்என் கல்லூரியில் எம்எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டிருந்தேன். இதுபோன்ற திட்டங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனது படிப்புக் கட்டணமான ரூ.1 லட்சத்தை மாநில அரசு செலுத்தியது. நான் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றார்கள். நானும் சேர்ந்து கொண்டேன்!’’ என்றவர் தனது வெற்றிக்காக அரசாங்கத்தையும் அகாடமியின் ஆசிரியர்களையும் பாராட்டினார்.
அரசுத் திட்டத்தின் கீழ் படித்த எஸ்டி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பிறகு, ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சியை முடிக்க கோபிகா மும்பை சென்றார்.
“நான் இன்னும் சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். இருப்பினும், நான் அவற்றை அடையும் வரை அவற்றை வெளியிட மாட்டேன்” என்கிறார் கோபிகா.
கரிம்பாலா சமூகத்தினர் பெரும்பாலும் கண்ணூரில் உள்ள தலச்சேரி மற்றும் தலிபரம்பா தாலுகாக்களில் வசிக்கின்றனர். பணியா மற்றும் இருளர் சமூகங்களுடன் ஒப்பிடும்போது, கரிம்பாலாவுக்கு குறைவான உறுப்பினர்களே உள்ளனர்.
இந்திய அளவில் முதன்முதலாக விமானப்பணிப்பெண் ஆகியுள்ள கோபிகாவுக்கு உலக அளவில் சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
S.KAMALA KANNAN Ph. 9244319559