பள்ளி, கல்லூரி இளைஞர்களை திமுகவில் சேர்க்க புதிய திட்டம் – உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரானதன் பின்னணி

Untitled-2-copy.jpg

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதை பெரிய திருவிழா போலவே கொண்டாடியிருக்கிறது ஆளுங்கட்சியான திமுக. அது குடும்ப விழாவா? அரசு விழாவா? ஒரு கெட் டுகதர் பார்ட்டியா? கட்சி விழாவா என்றே புரிபடாத வண்ணம் வலைத்தளங்களில் காட்சிகள் பரிமாறப்பட்டு வருகிறது. அதையெல்லாம் மீறி இந்த நேரத்தில் உதயநிதியை இளைஞர்நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கக் காரணம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சியைப் பிடித்தபோதே அமைச்சராவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. முதலமைச்சர் குடும்பத்திலேயே இன்னொரு அமைச்சர் என்பதும், புத்தம் புதிதாக எம்.எல்.ஏ ஆகியிருக்கும், இளைஞரான உதயநிதிக்கு உடனடி அமைச்சர் பதவி கொடுப்பது என்பது கட்சிக்குள் மட்டுமல்ல, பொதுவெளியிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் என்றே அந்த ஏற்பாட்டைத் தவிர்த்தார் ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல, ஆரம்பத்திலிருந்தே என் குடும்பத்தில் இன்னொருவர் அமைச்சர் ஆவதற்கான வாய்ப்பே கிடையாது என்றும் மறுத்து வந்தார். இதையேதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் சொல்லி வந்தாரே ஒழிய, செயல்பாடு வேறு விதமாக இருந்தது.

பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியமைத்திருந்த நிலையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழகமெங்கும் ஆளுங்கட்சிக்குத்தான் பெருவெற்றி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்திருந்த நேரத்தில் ஸ்டாலினை சென்னை பெருநகர மேயர் வேட்பாளராக நிறுத்தி பெருவெற்றியைப் பெற வைத்தார். ஸ்டாலினுக்கான வெற்றியை மக்களே தந்துள்ளார்கள் என்றும் தன் கருத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

தொடர்ந்து ஸ்டாலின் நிழல் முதல்வராக செயல்பட்டதும், பின்னர் வந்த ஆட்சியிலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆனதும், பின்னர் துணைமுதல்வர் பொறுப்பேற்றதும் எல்லாம் வரலாறு. எனவே தனக்குப் பின் திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட தன் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆவதும், மந்திரி ஆவதும் காலத்தின் கட்டாயம் என்று உணர்ந்தே இருந்தார்.

ஆனாலும் அரசியல் தலைவருக்கான கூறு என்பது வாரிசு அரசியலை செயல் அளவில் ஊக்குவித்தாலும், கருத்தளவில் ஏற்படுத்தக்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தார். அந்த அடிப்படையில்தான் உதயநிதி கடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆன நிலையிலும் கூட தன் குடும்பத்தில் இன்னொருவர் அமைச்சர் ஆவதற்கு வாய்ப்பே இல்லை என்று அடித்துச் சொன்னார் ஸ்டாலின்.

ஆனால் செயல்பாடோ வேறு மாதிரியாக இருந்தது. முதல்வர் வந்தால் என்ன மரியாதையோ அதையும் தாண்டிய மரியாதை எம்.எல்.ஏ உதயநிதிக்கு சட்டசபையில் கட்சிக்காரர்களால் கொடுக்கப்பட்டது. வெளியே கட்சி, அரசு நிகழ்வுகளில் எல்லாம் முதல்வர் வருகைக்கு இணையான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் இவரே நிழல் முதல்வராக செயல்பட்டார். இந்த சூழ்நிலையில்தான் தற்போது இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக்கப்பட்டிருக்கிறார் உதயநிதி. தொழில் துறை முதற்கொண்டு வருவாய்த்துறை வரை எத்தனையோ பெரிய பெரிய துறைகள் இருக்க, உதயநிதி இப்போது கடைகோடியில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் இந்தத் துறை முக்கியத்துவம் பெற்ற துறையாக மாறியிருக்கிறது.

எப்படி ஸ்டாலின் பதவியேற்கும் முன்பு வரை உள்ளாட்சித்துறை என்பது அவ்வளவாக கண்டுகொள்ளப்படாத துறையாக இருந்து, அவர் பதவியேற்றவுடன் மிக மிக முக்கியத்துவம் பெற்ற துறையாக மாறியதோ அதுபோலத்தான் இதுவும். நிழல் முதல்வர் அமைச்சரானால் ஏறத்தாழ அவரே நிழல் முதல்வர் என்றுதானே அர்த்தம்.

அப்படியானால் அவர் போகும் இடங்கள், கலந்து கொள்ளும் நிகழ்வுகள் எல்லாமே அரசு மரியாதைகளுடன் முதல்வருக்கான முக்கியத்துவம் பெறுமல்லவா? அந்த அடிப்படையில் மட்டுமல்ல இந்தத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதையும் தாண்டி இதற்குள் ஒரு மாபெரும் அரசியல் உள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

கடந்த கால பத்தாண்டு ஆட்சியில் அதிமுக இளைஞர்கள், இளம்பெண்கள் பக்கம் தன் பார்வையைத் திருப்பியது. அதிமுகவில் மட்டுமல்ல, ஏனைய பல கட்சிகளிலும் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது வெகுவாகக் குறைந்து விட்டது.

திமுகவைப் பொறுத்தவரை அமைச்சர், எம்.எல்.ஏ. கவுன்சிலர் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பிள்ளைகள், கட்சி நிர்வாகிளின் பிள்ளைகள் மட்டுமே அப்பாவின் பொறுப்பு கருதி அதே பொறுப்புக்கு தங்களை மாற்றிக் கொண்டு அரசியலில் ஈடுபட்டார்கள்.

இதை வாகாக பயன்படுத்திக் கொண்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறையை நிறுவியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு கோட்டா சிஸ்டத்தையும் நிறுவியது. அதன் மூலம் தமிழகமெங்கும் 17-18 வயதுக்கு மேற்பட்டவர்களை தேடித்தேடிப் பிடித்து அப்பாசறைக்குப் பொறுப்புகளைக் கொடுத்தது அதன் மூலம் புத்தம் புதிய வாக்காளர்கள் எல்லாம் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பிளக்ஸ் போர்டில் புகைப்படங்களில் மின்னினார்கள்.

இதன் மூலம் அதிமுக தன் ஓட்டு வங்கியை மேலும் புனரமைத்துக் கொண்டது. பத்தாண்டுகால ஆட்சியும் வாகாக அமைந்ததால் அவர்கள் எல்லாம் அரசு நலத்திட்டங்களில் ஊடுருவி மாபெரும் பயன் அடைந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையில்தான் திமுக இப்போது தன் கட்சிக்குள் புதிய ரத்தம், அதுவும் இள ரத்தம் காணாமல் பாடாய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்காகவே இப்போது உதயநிதி கையில் இளைஞர் நலம், விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டு இளைஞர்களைக் கவர திட்டம் தீட்டியிருக்கிறது அதன்படி பள்ளிகளில் 16-17 வயது நெருங்கும் டீன் ஏஜ் பிள்ளைகள், கல்லூரிகளில் 18-க்கு அதிகமாகியிருக்கும் இளைஞர்கள் எல்லாவற்றையும் ஈரக்கும் வண்ணம் விளையாட்டுப் போட்டிகள், இலக்கியப் போட்டிகள் நடத்தி அவர்களுக்கு எல்லாம் அமைச்சர் உதயநிதி கையாலேயே பரிசுகள் வழங்குவது. அவர்களையெல்லாம் கட்சிக்குள் கொண்டு வருவது என்பது மெகா திட்டம்.

இதற்காக தமிழகம் ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு பொறுப்பாளர்கள். அவர்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர், இந்நாள் அமைச்சர்களின் மகன்களே ஆவர். அவர்கள் மூலம் அந்தந்த ஏரியா பள்ளி, கல்லூரிகளில் விழாக்கள் ஏற்பாடு செய்வது சூறாவளி வேகத்தில் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம் ஆளுங்கட்சி. அதற்குத்தான் உதயநிதி ஸ்டாலின் இத்துறைக்கு அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர், ‘‘திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் போகிற இடங்களில் எல்லாம் இப்போது அதிகமாய் கூட்டம் சேருவதில்லை. அப்படியே வருபவர்கள் நாற்பது வயது கடந்தவர்களாக உள்ளனர். எனவேதான் இப்படியொரு திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். திமுகவிலேயே விளையாட்டுப்பிரிவு என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு செயலாளர் தயாநிதிமாறன் எம்பி. இவருக்குத் துணைச் செயலாளராக சேலம் பார்த்திபன் எம்.பி, கள்ளக்குறிச்சி பொன் கெளதமசிகாமணி, கோயமுத்தூர் பைந்தமிழ் உள்ளிட்ட அஞ்சு பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஐந்து பேரும் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள். அந்தந்த மண்டலத்தில் பரிச்சயப்பட்டவர்கள். அவர்கள் எல்லாம் கிராம, நகர அளவில் உள்ள பள்ளிக்கல்லூரிகளுக்கு செல்வதையும், இளைஞர்களை இதில் இணைத்து செயல்படுவதிலும் முனைப்பு காட்டவேண்டும் என்று எழுதப்படாத உத்தரவு இடப்பட்டிருக்கிறது. இனிமேல் அடிக்கடி உங்கள் ஊர் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வதும், கேடயங்கள், பரிசு வழங்குவதும் நடக்கும்!’’ என்று தெரிவித்தார்.

திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. செயல்வடிவம் பெறும்போது எப்படியிருக்குமோ பொறுத்திருப்போம்.

scroll to top