மதுரை மாவட்டம் பள்ளிக்கல்வி துறை சார்பில், மதுரை மேற்கு ஒன்றியம் ஆலாத்தூர் ஊராட்சியில், இல்லம் தேடிக் கல்வி திட்டம் – 2021 பயிற்சி மையத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
பி.மூர்த்தி, தெரிவிக்கையில்:-
ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமங்களில் இரவு நேரங்களில் கல்வி கற்பிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதற்கு பின்னால், படிப்படியாக கல்வியின் தரம் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், அனைத்து துறைகளையும் முன்னேற்றும் வகையிலான ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக, இன்று கூட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். மதுரை மாவட்டத்தில் கொரோன நோய்த் தொற்று பரவல் அதிகரித்த போது, நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீடுவீடாக சென்று நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சையளித்து கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தன்னார்வ அடிப்படையிலான திட்டம் ஆகும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. உதாரணமான, ஒத்தக்கடை அரசுப் பள்ளியில் தனியார் பள்ளிகளில் பயின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மாணவச் செல்வங்கள் கல்வி பயில தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர், ஏற்படுத்தித் தருவார்கள் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தெரிவிக்கையில்:-
தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் முதல் கட்சியான நீதி கட்சியின் ஆட்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய கல்விச் சட்டம் நடைமுறையில் இருந்தது. கல்வியினால் முன்னேறிய ஒரு சமுதாயம் கல்வியில் பின் தங்கி விடக்கூடாது. 2020-2021 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 10 முதல் 12 சதவீதம் குறைந்துள்ளது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10 முதல் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
வசதி வாய்ப்புள்ளவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதைவிட ஏழை எளிய சூழ்நிலையில் அரசுப் பள்ளயில் பயின்று உயர்ந்த நிலைக்கு வருதே மிகச்சிறந்தது. கல்வியின் முக்கியத்துவம் ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கும் முன்னேறியவர்கள் தன்நிலையிலிருந்து பின்தங்கிவிடாமல் இருப்பதற்கும் மிகவும் உதவுகிறது. மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 950 பயிற்சி மையங்கள் தொடங்கப்படுகிறது. இனி தமிழகத்தில் ஒரு குழந்தையும் பள்ளிக்கு வராமல் இருக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளில் 2019-2020 ஆம் கல்வியாண்டில் இருந்த மாணவர்களின் சேர்க்கைக்கு இணையாகவு வரும் கல்வியாண்டில் மாணவர்களின் சேர்க்கை இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்
மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), முதன்மைக்கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.