பள்ளிகளை திறப்பது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் – விஜயகாந்த் வேண்டுகோள்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் பிப்ரவரி 1-ந் தேதி முதல் அனைத்துப்பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.இந்த அறிவிப்பை தேசிய முற்போக்கு திராவிட கழகமும் வரவேற்கிறது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது. நியோகோவ் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். எனவே பள்ளிகள் திறப்பது குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில் ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது மேலும் மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா? வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொது தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

scroll to top