பயணிகளுக்கு நற்பண்புகள் அவசியம் – மூத்த விமானி பகத்சிங் வலியுறுத்தல்

IMG-20230112-WA0014.jpg

விமானத்தில் பயணிப்போர் அடிப்படை நற்பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என தமிழக மூத்த விமானி பகத்சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் புதுடெல்லிக்கு நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் வந்த பயணி மதுபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்து, அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.  இச்சம்பவங்கள் மீது அளிக்கப்பட்ட புகார் தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளன. இச்சூழலில் பயணிகள் சுயஒழுக்கத்துடன் நடந்து கொள்ளவும் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் விமானிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியிருப்பதாவது, “இந்திய விமானத்துறையில் 19-ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். 18 ஆயிரம் மணி நேரங்களுக்கு மேல் விமானத்தை இயக்கிய அனுபவம் எனக்கு உண்டு. சமீபத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தது, பணிப்பெண்களை கேலி செய்தது உள்ளிட்ட அனைத்து அநாகரீக செயல்களும் நடந்துள்ளது வேதனையானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பயணிப்பதற்கு மட்டும் தான் விமான பயணச்சீட்டு. ஆனால் விமானமே தங்களுடையது என்ற மனநிலையில் பயணிகள் இருக்கக்கூடாது.

தவிர சுயஒழுக்கம் என்பதும் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை மதித்து நடக்கும் மனிதநேயம் உள்ளிட்ட  அடிப்படை நற்பண்புகளை பயணிகள் அனைவரும் கொண்டிருத்தல் அவசியம். விமானத்தில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் நடந்துள்ளன. பெரும்பாலும் புகார்கள் அளிக்கப்படுவதில்லை. அங்கேயே பரஸ்பரம் சமரசம் செய்து வைக்கப்படுவதும் உண்டு. இருப்பினும் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் குறிப்பாக சர்வதேச விமானங்களில் பயணிகள் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சட்டங்கள் உள்ளபோதும் அதை அமல்படுத்துவது யார் என்பதில் விமான நிறுவன நிர்வாகம், மத்திய தொழிற்பாதுகாப்பு படை, உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் அலட்சியம் காட்டப்படுகிறது. தவிர பயணிகள் பலரும் புகார் அளிக்க முன்வருவதில்லை. உதாரணத்துக்கு நான் பணியாற்றி விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணித்த இளம்பெண், பிசினஸ் கிளாஸ் வகுப்பு வழியாக கடக்க முயன்றார். சட்டவிதிகளின்படி அது தவறு என்பதால் பணிப்பெண் அறிவுறுத்தினார். ஆனால் அவர் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியதால், புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொண்டேன். அப்போது மூத்த பணிப்பெண் இளம்பெண் எதிர்காலத்தை கருதி புகார் அளிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். விமான பணிப்பெண்களும் மனிதர்கள்தான் என்பதை  புரிந்து கொள்ள வேண்டும். பயணிகள் மனநிலை மாற வேண்டும். அதுவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.” என்றார்.

scroll to top