“பனை வச்சாலும் அமோகமா உயரலாம்’’ பழமொழியைப் பொய்யாக்கப் புறப்பட்டிருக்கும் விவசாய விஞ்ஞானி

gf.jpg

THE KOVAI HERALD:

பனை வச்சவன் பார்த்துட்டுப் போவான்; திணை வச்சவன் திண்ணுட்டுப் போவான்னு ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிய, “பனை வச்சவனும் அமோகமா சாப்பிட்டுட்டுப் போகலாம்’ங்கிற அளவு அடியோட மாத்திட முடியும். அதுதான் இங்கே 7500 குழிகள் போட்டு பனை நாற்றாக வைத்துள்ளேன்!’ என்று பெருத்த நம்பிக்கையுடன் பேசுகிறார் இந்த விவசாய விஞ்ஞானி முகுந்தன்.

இவர் மத்திய அரசு நிறுவனமான சுகர்கேன் இன்ஸ்டிட்யூட்- இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்சர் ரிசர்ச் விஞ்ஞானியாக   பணியாற்றி வந்துள்ளார். 2011-ல் பணி ஓய்வு பெற்று எஞ்சிய காலத்தில் விவசாயத்திற்கே அர்ப்பணிப்பது என்று முடிவு எடுத்து தனது மனைவியின் பூர்வீக நிலம் 9 ஏக்கரில் முழுக்க பனை மரங்களை நட்டுள்ளார். இதற்கு ஊடுபயிராக அத்தி மரங்களையும், அஷ்வகந்தா மூலிகை செடிகளையும் விளைவித்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

பல்லடம் -பொங்கலூர் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இவர்களின் பனைத் தோட்டம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெம்பரப்புக்காடு. அதனூடே வரிசையாய் குழிகள். அதில் விசிறிகளாய் தோகை விரித்து நிற்கும் பனை நாற்றுகளின் துளிர்கள். ஒவ்வொரு குழிக்கும் கரிய நிறத்தில் வைளந்து, நெளிந்து நீளும் சொட்டு நீர் பாசன ட்யூப்புகள். தூரத்தே தெரியும் ஆழ்குழாய் கிணறு, மோட்டார்கள்.

“பாலைவனத்தில் எந்த தாவரம் வளரும், பனிப்பிரதேசத்தில் வளரும் தாவரம் எது, மித வெப்ப மண்டலத்தில் வளரும் மரங்கள் இப்படி உலகத்தில் எந்தெந்த நாடுகளில் என்னென்ன தாவரம் எந்தந்த தட்பவெப்ப நிலையில் வளர்கிறதோ அவையெல்லாம் உள்ள இடம் இங்கிலாந்தில் உள்ள க்யூப் கார்டன். அங்கேயே இதற்காக சென்று ஆய்வு நடத்தி வந்திருக்கிறார் அவர்!’ என்று பெருமிதம் பொங்க நம்மிடம் தன் கணவரை அறிமுகப்படுத்தி விட்டபடி ஒதுங்கிக் கொண்டார் விஞ்ஞானி முகுந்தனின் மனைவி. தொடர்ந்து முகுந்தனே தன் பனை விவசாயத்தைப் பற்றி விரிவாகப் பேசலானார்:

” இந்த பல்லடம் ஏரியாவில் தண்ணீர் அவ்வளவு சுலபமா கிடைக்காது. இங்கே 3 ஆழ்குழாய் கிணறு தோண்டினோம். 1000 அடிக்கு மேல் போயும் தண்ணீர் அவ்வளவாக இல்லை. இருப்பதை வைத்து சிறப்பாக விவசாயம் செய்ய உகந்தது பனைதான் என்று தேர்ந்தெடுத்தோம். பனை தமிழ்நாடு மரங்களின் சின்னம்தான். ஆனாலும் புறம்போக்கு மரம். யாருமே பண்ணைப் பயிராக கருதுவதில்லை. பனை வச்சவன் பார்த்துட்டுப் போவான்; திணை வச்சவன் திண்ணுட்டுப் போவான்னு ஒரு பழமொழி வந்ததுக்கு இதுதான் காரணமாகவும் இருக்கும். அதை உடைக்கிற மாதிரி இதுல ஆராய்ச்சியும் செய்து உலகுக்கு அறிவிக்கணும். நல்ல லாபமாகவும் இதை விளைவிச்சுக் காட்டணும்ன்னு முடிவு செஞ்சேன். அதுக்காகவே நிறைய ரிசர்ச்சும் செஞ்சேன்.

“பனைக்கு தண்ணி அதிகம் தேவையில்லை. ஒரு ஏக்கர்ல 555 பனை மரங்கள் நடலாம். அதுல வர்ற வருமானம் 8 ஏக்கர் தென்னையின் வருமானத்திற்கு சமம். ஒரு ஏக்கர் தென்னைக்கு பயன்படுத்தற தண்ணீரை 9 ஏக்கர் பனைக்கு பயன்படுத்தலாம். ஆக இங்கே இருக்கிற 9 ஏக்கர் பனை மூலம் 75 ஏக்கர் தென்னையில் சம்பாதிக்கிற வருமானத்தை ஈட்ட முடியும். மூன்றிலொரு பங்கு வேலை செய்தால் போதும். தண்ணீரும் குறைந்த அளவு போதும். ஒரு தென்னை மரம் பலன் கொடுக்க ஏழெட்டு வருஷம் ஆகும். பனை மரம் இன்னும் ஓரிரு ஆண்டுகள் கூடுதலாக இருந்தால் பலன் கொடுக்க ஆரம்பித்து விடுகிறது.

“அதுவரை வருமானத்திற்கு என்ன செய்வது? அதற்காகவே அத்தியை இதற்கு ஊடுபயிராக தேர்ந்தெடுத்தேன். மொத்தம் உள்ள 7500 குழிகளில்  4000 குழிகளில் பனையும், மீதியில் அத்தியும் வைத்தேன். இங்கே அஷ்வகந்தா மூலிகைச் செடிகள் தானாகவே முளைக்கிறது. அதன் கிழங்குகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கிறது. வெறுமனே ஆடுமாடுகள் மேய்ச்சலில் சாப்பிட்டு செல்லும் அச்செடிகள் பனைக்காக வேலி போட்டதன் பலனாய் அவையும் குத்துக்குத்தாக நன்றாக செழித்த வளர, அதை கண்ணும் கருத்துமாக வளர்ப்பதில் ஈடுபட்டார் என் மனைவி. இப்போது அதில் கிடைக்கும் கிழங்குகளையும் ட்ரையரில் போட்டு நல்ல விலை கிடைக்கும் போது விற்கும் எண்ணத்தில் பாதுகாத்து வருகிறோம். இன்றைக்கு இந்த பனை நட்டி ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டது. நாற்று விசிறி விட்டு விட்டது. இந்த ஊடுபயிர்கள் மூலம் உடனுக்குடனே வருமானமும் கிடைத்து , அவ்வப்போது வரும் பனைக்கான செலவுகளை ஈடுகட்டி விடுகிறது!’’ என்று மகிழ்ச்சி பொங்கப் பேசுகிறார் முகுந்தன்.

இவர்கள் பனை நட்டிருப்பது முழுக்க களிமண் பூமி. ஒன்றரை, இரண்டரை அடி ஆழத்திற்கு களி மண்ணாகவே இருப்பதால் வேர்கள் அதற்கு கீழேதான் துளிர் விடுகிறது. அதற்கு சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் எட்டுவதில்லை. அதற்காக ஒவ்வொரு குழிக்கு அருகாமையில் 4 அங்குல சுற்றளவில் 2-3 அடி ஆழ குழிகள் போட்டு அதில் மினரல் வாட்டர், ஜூஸ் பாட்டில்களை பாதி அறுத்து, குழியில் விட்டு நீர் வேருக்கு செல்ல புதிய ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்த 2 அடி குழி வெட்டவே ஆக்ரா மிஷின் ஒன்றை வாங்கியுள்ளார். 8000 மினரல் வாட்டர் பாட்டில்களுக்கும் ஆர்டர் கொடுத்துள்ளார். இந்த பாட்டில் பதித்து, அதற்குள் ஜல்லி மணல் கலந்து சொட்டு நீர் பாசனம் வழியே நீர் கொடுத்தால் துளி நீர் விரயமாகாது என்பது இவர் கணக்கு.

அதேபோல் பனை விதைகளில் ‘ஒரு விதை, இரண்டு விதை, மூன்று விதைபழம்’  எனமூன்று ரகங்கள் உண்டாம். அதாவது ஒற்றை நுங்கு உள்ளது ஒரு விதை. அது ஆண் பழம் என்கிறார்கள். இரண்டு நுங்கு உள்ள பழம் ஒன்று ஆண், ஒன்று பெண்ணாம். மூன்று விதை உள்ள பழம் 1 பெண் 2 ஆண் என்கிறார்கள். இது  எல்லாம் வெறுமனே செவி வழி வரும் தகவல்கள்தான். ஆய்வில் வெளிப்பட்டவை அல்ல. உண்மையிலேயே அப்படித்தானா என்பதை ஆதாரப்பூர்வமாக உணர்ந்து ஆய்வில் வெளிப்படுத்த, இவற்றை ரக வாரியாகப் பிரித்து ஒவ்வொரு வரிசையிலும் நட்டுள்ளாராம். வளர்ந்து பலன் கொடுக்கும்போது ஒற்றை விதை, இரட்டை விதை, மூன்று விதைப் பழங்கள் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை உலகுக்கும், மற்ற விவசாயிகளுக்கும் அறிவிக்கவே இந்த ஏற்பாடாம்.

பனை விதைப்பதை ஊக்குவிக்கும் பணியில் பல தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அதில் ஒன்றாக வனத்திற்குள் திருப்பூர் அமைப்பு 55 நாட்கள் வேலை செய்து, ஆதர் மிஷின், டிராக்டர்கள் கொண்டு வந்து இவருக்கு பனை விதைகள் விதைக்க 7500 குழிகளை அவர்களே  தோண்டித் தந்திருக்கிறார்கள்.

ஆனால் பனை நடுவோம். நம் தமிழ்நாட்டு பாரம்பர்ய மரத்தை காப்போம் என பிரச்சாரம் நடக்கும் சூழ்நிலையில் இவர்கள் நடத்து பனைப் பண்ணையத்திற்கு இலவச மின்சாரமோ, அரசு மான்யமோ எதுவுமேம இல்லை.

“அதை எதிர்பார்த்தெல்லாம் நாங்கள் பனை விவசாயம் செய்யவில்லை. இது நிச்சயம் பலன் கொடுக்கும். அதை விட முக்கியம் அழிந்து வரும் பனை காப்பாற்றப்பட வேண்டிய பொக்கிஷம். அதற்காகவே முழு மூச்சாக இதற்காக இறங்கியுள்ளோம்!’’ என்கின்றனர் வயோதிக காலத்திலும் மனம் தளராத முகுந்தன் தம்பதியினர். அவர்கள் சேவை நாட்டுக்குத் தேவை மட்டுமல்ல, எதிர்கால விவசாயத்திற்கும் தேவை என வாழ்த்தி அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.

scroll to top