THE KOVAI HERALD
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் பிளாஸ்டிக்கு பதிலாக மாற்றுப் பொருள் வேண்டும். அதை நாம் தான் மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்கிறார் கோவை இளைஞர் எஸ்.கல்யாணகுமார். இயற்கையாக கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டே நெகிழிக்கு மாற்றாக தேநீர்கப் காற்று புகாத குடுவை உள்ளிட்ட எண்ணற்ற பொருட்களை உருவாக்க இயந்திரத்தை தயாரித்து உள்ளார் அந்த இளம் தொழிலதிபர்.
லாபமும் இல்லை
பிளாஸ்டிக் பை, கப் போன்ற வற்றை தயாரிக்க மூலப் பொருட்களை வாங்கும் சிரமம் சற்று அதிகம் தான். கட்டுப்படியாகாத அடக்க விலை, அதிக செலவு என பல அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக இத்தொழிலை நடத்த முடியவில்லை என்கிறார்கள் சிறுகுறு தொழில்அதிபர்கள்.
மஞ்சள் பை
இதற்கெல்லாம் மாற்றாக ‘மீண்டும் மஞ்சள் பை’இயக்கத்தை தமிழகஅரசு தொடங்கி உள்ளது. ஆனால் இந்த மஞ்சள் பையை தயாரிக்கும் செலவு சற்று அதிகம் தான். விற்பனைக்கு வரும்போது தரமான மஞ்சள் பைக்கு ரூ.10 வரை ஆகும் என்கிறார்கள்.
சென்னையில் ‘மீண்டும் மஞ்சள் பை’பிரச்சார தொடக்கத்தின்போது நடந்த கண்காட்சிபற்றி தமிழக சுற்றுச்சூழல்முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ. அங்கு இடம் பெற்றிருந்த பல சுவராசிய கண்டுபிடிப்புகளை நயமாக விவரித்து பலவற்றை ட்விட்டரில் பதிவிட்டார்.
புதிய சிந்தனை
அவ்வாறு பதியப்பட்ட தகவல் ஒன்று 39 வயதான கோவை இளம்தொழிலதிபர் எஸ்.கல்யாணகுமாரைப் பற்றியது. அவரின் தயாரிப்புகளை பகிர்ந்துள்ளார். அதற்கு முன் அவரைப்பற்றி…
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் தனது தந்தையின் இயந்திரங்களை வடிவமைக் கும்தொழிலில் சேர்ந்தார் எஸ்.கல்யாணகுமார். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை அன்றாட வாழ்க்கையில் இருந்து அகற்ற தீவிரமாக முயன்றாராம். இதன் பயனாக இயற்கைக் கழிவுகளில் இருந்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பொருட்களைத் தயாரிக்கும் உபகரணங்களை உருவாக்கு வதில் மும்முரம் காட்டினார்.
சேலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் தடம் பதித்தார் கோவையில். இவர் வடிவமைத்த இயந்திரத்தில் அரிசி, கோதுமை தவிடு, வாழைஇலை, கிழங்குகள், தினைக்கழிவுகள், புளிவிதைகள், நிலக்கடலை ஓடு, வைக்கோல் மற்றும் பிற கரிம கழிவுகள் மற்றும் கூழ்போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தலாம்.
நெல்உமி, வாழைப்பழக் கழிவுகள் மற்றும் மரக்கூழ் போன்ற 15 மக்கும் கரிமக் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி, பத்து வகையான ஒற்றைப் பயன்பாட்டுப் பொருட்களை வெளியிடுவதற்கு அவருடைய உபகரணங்களின் வரம்பு உதவுகிறது.
எளிதில் மக்கும்
ஐந்து வகையான டீ கப்கள், நான்கு வகையான ஜூஸ் மற்றும் ஒயின் கிளாஸ்கள், தண்ணீர் பாட்டில்கள், வழக்கமான பிளாஸ்க், காற்றுபுகாத குடுவை, பல்வேறு அளவுகள் மற்றும்தரம் கொண்ட உணவுப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு, கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு எளிதில் மக்கும் தன்மைகொண்டவை.
‘ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் பாக்கு இலையில் இருந்து பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கினோம். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் நஷ்டத்தில் இயங்கி வந்தது, அதற்கு மாற்றாக மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டை கடக்க நாங்கள் பல கரிம கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கினோம்’ என்றார்.
வாழைஇலைக் கழிவு
அவர் தங்களது இயந்திரத்தால் தயாரிக்கப்படும் பொருட்கள் பற்றி கூறுகையில், “கிலோ 14 ரூபாய்க்கு வாங்கும்நெல் உமியைப்பயன்படுத்தி 30 டீ கப் தயாரிக்கலாம். உற்பத்திச் செலவில் கப் ஒன்றுக்கு 65 பைசா என்ற காரணியாக, சில்லறை சந்தையில் ஒவ்வொரு கோப்பையும் ரூ.1.50க்கு விற்கலாம். (அரசால்அங்கீகரிக்கப்ப ட்ட பேப்பர் கப் ஒன்று 1.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது) வாழைஇலைக் கழிவுகளைப் பயன்படுத்தினால், இந்தக் கோப்பைகளை இன்னும் குறைந்த விலையில் செய்யலாம். மூலப்பொருள் மற்றும் தரத்தைப் பொறுத்து விலையை மாற்றியமைக்கலாம்” என்றார்.
“மாற்று என்பது உதாரணமாக டீக் கடையில் பேப்பர் கப்புக்கு பதிலாக மாற்று என்பது கிடையாது.. இதற்கு முக்கியக் காரணம் அவற்றைத் தயாரிக்கும் மூலப்பொருள்கள் கிடைப்பதில்லை என்பதே குற்றச்சாட்டு” பார்க்கப்போனால் மாற்றுப் பொருள் தயாரிப்பதில் அவ்வளவாக லாபம் கிடைப்பதில்லை. வைக்கோல் எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது விவசாயிகளுக்கு தெரிவதில்லை. முதலில் விவசாயிகளுக்கு வைக்கோல் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எந்தமாதிரி பயன்படுத்தலாம் என தெரிவித்தால் அதன்படி அப்பொருளை தயாரிக்க இயந்திரத்தை உருவாக்கி விடுவேன். அதை அவர்களிடம் முறையாக கொண்டு சேர்க்க வேண்டும் ” என்றார்.
பாலும் கேடாகும்
அவர், தயாரிக்கும் பொருட்கள் இயற்கைக்கு கேடு விளைவிக்காதவை. தற்போது, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கப் பை போன்றவற்றை உட்கொள்கின்றன. அமிலங்களால் தயாரிக்கப்பட்டவையால் அதுதரும் பால்கூட உடல்நலத்திற்குகேடு தான். ஆனால் புண்ணாக்கு, தவிடு போன்றவற்றால் தயாரிக்கப்படும் டீ கப் கிளாஸ்கள் உள்ளிட்டவை குப்பைக்கு போனாலும் அவற்றை உண்ணும் கால்நடைகளுக்கு தீங்கு விளைவிக்காது. அதற்கு அது உணவாகவே மாறிவிடும் நன்மைஉள்ளது.
அவரது தயாரிப்புகள் மலிவான விலையில் குறைந்த செலவழிப்பில் கசிவு இல்லாத காற்றுபுகாத பேக்கிங் விருப்பத்துடன் வருகின்றன. மெழுகு பூசப்பட்ட தட்டுகள் அல்லது வெள்ளிப்படலத்திற்கு இணையான விலையில் அவற்றை விற்கலாம். தற்போது இவர் ஒருமாதத்திற்கு கிட்டத்தட்ட 10 லட்சம் டீகப் ஆர்டர்களைப் பெறுகிறார். மஞ்சப்பை பிரசாரம் ஒரு வரப்பிரசாதமாக அவருக்கு வந்துள்ளது. பல அரசு துறைகள் அவரிடமிருந்து இயந்திரங்களை வாங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விநியோகிக்க விருப்பம் தெரிவித்துள்ளன. இயந்திரங்களை விற்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பகுதியில் கிடைக்கும் இயற்கை மூலப்பொருட்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையும், சந்தைப்படுத்துதலுக்கான யுத்தியையும் வழங்கி வருகிறார்.
தமிழக சுற்றுச்சூழல்முதன்மைச் செயலாளர் சுப்ரியாசாஹூ தனது பதிவில், “மாற்றுப்பொருட்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளவர்களை கண்காட்சிக்கு அழைத்தோம். அவர்கள் அனைவருக்கும்பகிர்ந்து கொள்ள சுவாரஸ்யமான கதைகள் இருந்தன. உணவுப் பாத்திரங்கள் மற்றும் தேநீர் கோப்பைகள் தயாரிக்க அரிசி தவிடு பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும்ஆரோக்கியத்துக்கும் ஏற்றது. மாவட்ட நிர்வாகங்கள் இந்த தயாரிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சிப்பதால் இது போன்ற முயற்சிகள் எங்களுக்கு உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எஸ்.கல்யாணகுமாரைத்தொடர்பு கொள்ள : 95977 15496.
KAMALA KANNAN S Ph. 92443 17182