நான்கு கரங்கள் கொண்ட சதுர்புய கன்னரதேவன்

Pi7_Image_34.jpg

வே.ரோகிணி

ஐந்தாம்பட்டம் கோவிந்தராயனுக்கு எத்தனை மனைவியர், யாரெல்லாம் அந்தப்புர நாயகியர் என்று கணக்கு வழக்கில்லை. அதீத மோகிப்பு அதீத அக்கப்போர் என்பதை முதிர்ந்த வயதில்தான் உணர்ந்தான். அப்போது அவனின் அன்னை ஆதினியும் இல்லை. அப்பன் கலைவல்லவராயனும் இல்லை. நான்கைந்து சமண முனிகள் மட்டுமே இருந்தனர். கூடவே அப்பன் உயிரோடு இருந்த காலத்தில் சொன்ன தாரக மந்திரம் இருந்தது.
தந்தையின் மீது இவனுக்கு அதீத ப்ரியம். இத்தனைக்கும் அவன் அரண்மனைப் பக்கம் வந்ததேயில்லை. தாய் ஆதினிதான் போஷித்தாள். பாட்டி மகிழினியே இவனை உருவாக்கினாள். ஆனால் இவனின் பாசம் தந்தை கலைவல்லவராயன் பக்கமே நின்றது. வருஷத்தில் பாதி நாள் போர்க்களத்திலேயே இருந்தாலும், அதில் ஒரு நாள் தன் தந்தை காலடியில் இருந்தான். அப்போதெல்லாம் அப்பனிடமிருந்து இவனுக்கு போதனைகள்தான் பரிசாகக்கிடைத்தது. தந்தை எப்போதோ சமணத்துறவி ஆகி விட்டான். இவனும் ஆகி விடுவான் போலேவே இவனின் உள்மனது சொல்லியது.
அதன் உச்சகட்ட செயல்பாடே அரிஷ்டாணன் ஜெயினுக்கு குலசத ஊரில் பொம்ம கொம்மன் கிராமத்திலே பூமி சாசனம் செய்வித்த சம்பவம் நடந்தது. அந்த நிலம் ஏழு கண்டகம் பெஸ்தி ஜெயின தேவர் அரச்சனை நிமித்தம் அவர் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட தருமம்.இக்கோயிலில் பூஜை செய்தவன் அரிஷ்டாணனுடைய குரு பிரஞானபனாசாரி. அவன் காரோக விருக்ஷமூலத்திலே வாசம் செய்கிறவன்.
அக்காலத்தில் அங்கே இருந்த ஜெயினன்கள் பஞ்சநந்தி, சொக்கப்பன்னன், ஜெயதேவன். ஒவ்வொரு முறை கோவிந்தராயன் போருக்கு செல்லும் முன்னர் தன் தந்தையை தொழுது ஆசி பெறுவது வழக்கம். அவனும் இவனுக்கு நிறைமனதுடன் ஆசி கொடுப்பான். அதற்கு முன்பாக தன் குரு சமணசித்தன் காலடியில் இவனை நெடுஞ்சாண்கிடையாய் விழ வைப்பான். அந்தக்குருவின் திருவாக்குதான் ஒரு நாள் அப்படி ஒரு உத்திரவை கோவிந்தராயனுக்கு இட வைத்தது.
‘‘நீ இப்போது கடாரப்போருக்கு செல்கிறாய். கடார தேசத்தவர்கள் சாமான்யர்கள் அல்லர். எத்தருக்கு எத்தர். பக்தருக்கு பக்தர். அவர்களை வெல்லும் ஆற்றல் உன்னிடம் வரக்கடாவது. அதற்குப் பிரதியுபகாரமாக நீ எனக்கு என்ன தருவாய்?’’
முற்றும் துறந்த நிர்வாணமாய் நெடு,வெடுவென நிற்கும் சமண முனிக்குள்ளும் கூட மண்ணாசை, பெண்ணாசை, புகழாசை இருக்குமா? துளி கூட எண்ணத் தோன்றவில்லை.
‘‘நான் கொடுப்பதென்ன தேவனே. நீரே எடுத்துக் கொள்ளும். என் ராஜ்யம் வேணுமா? என் அந்தப்புரத்து நாயகிகள் வேணுமா? நான் உங்களைப் போல் துறவறம் பூண வேண்டுமா? எல்லாவற்றுக்கும் நான் தயார். எதுவும் எடுத்துக் கொள்ளுங்கள்!’’
சின்ன முறுவல் கூட இல்லை குருமகா சமணனிடம்.
‘‘உன் பாசத்தை நான் அறிவேன். உன் தகப்பனை மிஞ்சிய பாசம். அவனை மிஞ்சிய பக்தி. நான் உன்னிடம் ராஜ்யத்தை வாங்கி என்ன செய்யப் போகிறேன். உன் எதிர்பார்ப்புக்கு சின்ன கைங்கர்யம்தான். எங்கள் வடபுலத்து ஜெயினன்கள் நால்வரும், அவர்தம் சீடர்களும் தெற்கு நோக்கி வருகிறார்கள். பஞ்சநந்தி, சொக்கப்பன்னன், ஜெயதேவன் கூடவே பிரஞானபனாசாரி. இந்த பிரஞானன் அரிஷ்டாணனுடைய குரு. அவர்கள் சமணப்படுகையும் கோயிலும் நாம் வாசம் செய்யும் இந்த நிலத்திலிருந்து நேர் தெற்கே நூறு காத தூரத்தில் அமைக்க உள்ளார்கள். அதற்குத் தேவையானது ஆங்கொரு நிலம்..!’’
சற்றும் யோசிக்கவில்லை கோவிந்தராயன். போர் முடிந்து வெற்றி வாகை சூடிய கையோடு அரிஷ்டாணன் பெயருக்கு கல்சாசனமே செய்து வைத்தான். அந்த நிலம் கிழக்கிருந்து மேற்கேயும், வடக்கிருந்து தெற்கேயும் தலா பத்து நாழிகை தூரம் வெகுவேகமாக ஓடும் தூரமிருந்தது. இந்த தானப் பத்திரம் முடிந்ததும் தன் தந்தையின் காலில் விழுந்து வணங்கினான்.
‘யான் பெற்றதற்கு பேறு செய்தாய் மகனே!’ என கண்ணீர் உகுத்தான் கலைவல்லவராயன். எங்கே உன் தாய் மகிழினி எனக்கு மோசம் செய்து விடுவாளோ? நீ என் மகனே அல்லாது வளர்த்து விடுவாளோ என்று அஞ்சினேன். நல்ல வேளை அப்படி நீ வளரவில்லை. என் மகனாகவே வளர்ந்திருக்கிறாய்!’ என்றவன், ‘மகனே நீ அறியாததல்ல. நான் ஏன் இந்த சமணக்குகையிலேயே தங்கி இந்த சமண குருவுக்கே சேவகம் செய்தேன் என்பதை நீ காலப்போக்கில் உணர்ந்து கொள்வாய். ஆயினும் நான் அதை முன்கூட்டியே போதிப்பது உனக்கான அறிவு விளக்காய் எதிர்காலத்தில் ஒளிரும்!’ என்று நீட்டி முழக்கி சொல்லலானான்.
இந்த மனித குலம் நமக்குப் பின்னே விட்டுச் செல்லப்போவது ஏதுமில்லை. நம் அடையாளங்களாக நிற்கப்போவது நம் உடலோ, உள்ளத் துாய்மையோ கூட அல்ல. எல்லாமே கலைகள். அந்தக் கலைகள்தான். அவை எல்லாமே நாம் முற்றும் துறக்கும்போதே உணர முடியும். ஒற்றை நூலிழை கூட மேனியில் தழுவாத நிலை என்பது அசாதாரமானது. அப்படியொரு நிலையில் நாம் நம்மை விட்டு ஏகி வேறொரு இடத்தில் சஞ்சரிப்பது அதை விட மேலானது. அப்படியான உயரிய தத்துவம்தான் இந்த சமணம். இது ஸ்தூல உடலை முற்றிலும் புறக்கணிக்கிறது. ஆசா பாசங்களை நொறுக்குகிறது. மனித ஆன்மாவைத் தவிர வேறு கடவுள் இல்லை என்று போதிக்கிறது.
கடுந்தவம், பட்டினி போன்றவற்றின் மூலம் நிர்வாண நிலையை அடைவது. இறப்பிற்குப் பின் ஆன்மாவானது பெறும் எல்லையற்ற ஆனந்தமே நிர்வாண நிலையாகும். எதிலும் பற்றில்லாத துறவற வாழ்க்கை வாழ்தல் முக்கியம். நமது வாழ்கைக்கேற்ப மறுபிறவி உண்டு. நானே உன் மகனின் மகனாக, அவனின் மகனாக பிறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. மனிதர்கள் அனைவரும் சமம். முக்கியமான பாவங்கள் என்பவை பொய் கூறுதல், திருடுதல், மது அருந்துதல், தற்பெருமை பேசுதல், பொறாமை, புறங்கூறுதல் போன்றவைகளாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
இப்படியான தத்துவ செயல்பாடுகளால் வடக்கே மக்களை அதிகம் கவர்ந்த சமயங்களில் சமணமும் ஒன்றாகும். இதனை வடபுல அரசர்களும், பேரரசர்களும் பின்பற்றியதால் நம் ஆயிரமாயிரம் தேசங்கள் முழுமையும் பரவி நிற்கிறது. சமணம், சமண அவைகள் மூலம் வளர்க்கப்பட்டு, பரப்பப்பட்டு வருவது நமக்கான கொடுப்பினை. அதைத்தான் நாம் நிலம் அளித்திருக்கும் சமண முனிகள் தென்னகத்தே செய்யப்போகிறார்கள். அதன் மூலம் முதல் நிலம் கொடுத்தவன் என்ற நிகழ்வு மூலம் நின் புகழ் இந்த தேசத்தில் திக்கெட்டும் பரவப்போகிறது..
ஆம் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதை தன் மகன் சதுர்ப்புய கன்னரதேவனுக்கு சக்கரவர்த்தியாக முடிசூட்டின பின்பு உணர்ந்தான் கோவிந்தராயன். ஸ்கந்தபுரத்திற்கு வந்த ஆறாவது பட்டத்தரசன். தன் மூத்த சகோதரர்களுடன் ராஜ்யத்திற்காக போர் புரிந்தான்.
மூத்தவன் மூளையாக இருந்தால் இளையவன் காளையாகத்தானே இருப்பான்? வடபுல ராஜ்யத்திற்கு தளபதியாக ஒரு காலத்தில் கோவிந்தராயனால் பதவிப் பிராமணம் செய்து வைக்கப்பட்டவன் வடக்கே தன் நாட்டின் மீது படையெடுத்த கடாரத்தவர்களை விரட்டியடித்தவுடன் மீட்டெடுத்த நிலப்பகுதியை அப்படியே தன் தந்தையின் காலடியில் சமர்ப்பித்தான்.
அவனோ பைத்தியக்காரன். எப்போது பார்த்தாலும் தந்தையே தந்தையே என்றவன், அந்த நிலத்தில் பெரும்பகுதியை தன் தந்தையின் நேசத்திற்குரிய சமணத்துறவிகளுக்கு எழுதி வைத்து விட்டான்.
எப்படியான படையெடுப்பு. எத்தனை பேரின் உயிர்துறப்பு, ரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து பெற்ற நிலம் அப்படியே சமணத்துறவிகளின் கைகளுக்கு சென்று விட்டதென்றால் யாருக்குத்தான் கோபம் இருக்காது.
இவனுக்கு மூத்தவர்கள் நால்வருக்கு ஒரு துளி கோபம் இல்லை. தந்தை கோவிந்தராயன் செய்தால் எல்லாம் சரியே என்று நின்றார்கள். அவர்களுடன் வாளால் பேசினான் சதுர்ப்புயன்.
இதனால் உள்நாட்டுப் போர் மூண்டது. சகோதரர்கள் அவரவர்க்கென படை திரட்டி போர்புரிந்தனர். அதில் சதுர்ப்புயனின் வாள் வீச்சு கண்டு அண்ணன்தம்பிகளே அஞ்சினர். அவன் வாளெடுக்கும்போது இரண்டு கரங்களாக இருந்தன. வாள் வீசும்போதோ நான்கு கைகள் எதிராளிக்கு மின்னியது.
நான்கு கரத்திலும் ஆயுதங்கள் இருப்பது போல் தோற்றப்பொழிவு. மேல்நோக்கி நீண்ட கையில் இருந்த குறுவாள் எங்கே தன் நெஞ்சைப் பிளந்து விடுமோ என்று அஞ்சி சரியும் வேளை, அவனின் இன்னொரு கைவாள் விலாவில் செருகி உயிரைக் குடித்தது. நான்கு கரம் கொண்ட இவனுடன் மல்லுக்கு நிற்பது தன்னைத்தான் கொன்று கொல்வதற்கு சமம் என்று அத்தனை பேரும் பின்வாங்கும்போது தன் மூத்த சகோதரர்கள் நான்கு பேர் உடலாக மட்டும் மண்ணில் ரத்தம் கொப்பளித்துக் கிடந்தனர். ஐந்தாவது தலையாக கோவிந்தராயனின் தலை குறி வைக்கப்பட்டபோதுதான் தந்தைக்கு வந்தது ஞானோதயம். தன் தந்தை சொன்ன போதனையை நினைத்தான். மணி முடியை எடுத்து இந்த ஆற்றல் மிகுந்த மகனுக்குச் சூட்டி வடக்கு நோக்கிப் பயணமானான். அதே வேகத்தில் பிரஞாபனாசாரி முனியின் கையால் சமணத்துறவியாக மாறினான்.

கதைப்போம்

THE KOVAI HERALD KAMALA KANNAN S Ph. 92443 17182

scroll to top