தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு: பாதுகாப்பு அதிகாரி உத்தரவு

கடலுார்-கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தொழிலாளர்களுக்கு, தேர்தல் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, கடலுார் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் (கூ.பொ) பூங்குழலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, தேர்தல் நாளில் வாக்காளர்கள் அனைவரும் ஓட்டளிப்பதை உறுதி செய்யும் வகையில் அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நாளில் தேர்தல் நடைபெறும் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக, அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபடும் நிரந்தர மற்றும் ஒப்பந்த, தினக்கூலித் தொழிலாளர்கள் உட்பட அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுப்பு அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் நடக்கும் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணிகளின் நிர்வாகங்கள், தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.விடுமுறை வழங்காதது தொடர்பாக எந்தவித புகாருக்கும் இடமளிக்காமால் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

scroll to top