பிகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி, பயணிகள் ரயிலுக்கு தேர்வர்கள் புதன்கிழமை தீ வைத்ததால் பரபரப்பு நிலவுகிறது. ரயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைக்கேடு நடந்துள்ளதால் தேர்வை ரத்து செய்யக் கோரி கயாவில் இன்று காலை முதல் தேர்வர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா குமார் கூறியதாவது: தற்போது சூழல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ரயிலுக்கு தீ வைத்த சிலரை அடையாளம் கண்டுள்ளோம். அரசு பொருள்களை சேதப்படுத்தக் கூடாது என மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம். தேர்வு குறித்து விசாரிக்க அரசுத் தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டில் 73-வது குடியரசு நாள் கொண்டாடி வரும் சூழலில் தேர்வு எழுதிய இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.