தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் கமல்ஹாசன்

kamal.jpg

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை பரவலான பயன்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். கிராமசபை போல தங்களது வார்டிற்கு என்ன தேவை என்பதை அந்தந்த பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மக்கள் நீதி மய்யம் கவுன்சிலர்கள் இக்கூட்டத்தில் தங்களது மாதாந்திர செயல்பாட்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பிப்பர்.வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து விவாதித்து, நிதி ஒதுக்கும் கவுன்சில் கூட்ட விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடு தேடி உள்ளாட்சி சேவை மையம் வரும்- மக்கள் தேவைகள் வீட்டுவாசலில் நிவர்த்தி செய்யப்படும். குறிப்பிட்ட சில கால உத்தரவாதத்துடன் கூடிய தரமான சாலைகள், உரிய விதிமுறைகளை பின்பற்றிப் போடப்படுவதை உறுதி செய்வோம். அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு உயர்தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி அமைத்து குப்பைக்கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். பொது இடங்களில் தேவையான கழிப்பிடங்கள் உறுதி செய்யப்படும். வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகளை வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும்.பள்ளி மற்றும்  மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். முறையான பராமரிப்பின் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகம் அமைத்து அமைப்பது உறுதி செய்யப்படும். ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைக்கப்படும். இதன் மூலம் அவசர ஊர்திகள் சென்சார் உதவியுடன் கண்டறிந்து தடையில்லா போக்குவரத்து ஒழுங்கு செய்யப்படும். மழைநீர் தேங்காத தெருக்கள் என்ற நிலையை அடைய முறையான மழைநீர் வடிகால் அமைப்பு அமைக்கப்படும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும் கட்டிட வரைபட அனுமதிகள் விரைவாக இலஞ்சமில்லாமல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top