திருப்பூரில் உள்ள காலேஜ் ரோட் பகுதியைச் சேர்ந்த 55 வயதான மணி என்பவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இவர் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகப் போட்டியிட்டார். மணி ரூ.50000 கடன் வாங்கி தேர்தல் செலவு செய்துள்ளார். ஆனால் தேர்தலில் அவரால் 44 வாக்குகள் மட்டுமே பெற முடிந்துள்ளது. மணி தேர்தலில் தோல்வி அடைந்து டெபாசிட் இழந்துள்ளார். கடன் தொல்லை அச்சத்தால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமலஹாசன் இந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் போது அவரது மனைவி சுப்பாத்தாள், மகள்கள் வெண்ணிலா மற்றும் சரோஜினி ஆகியோருடன் கமலஹாசன் தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது அவர் மணியின் குடும்பத்தினருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர் தற்கொலை : கமலஹாசன் ஆறுதல்
