தென்னிந்தியாவில் முதல்முறையாக கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் செல்களை கரைக்கும் மருத்துவ கருவி அறிமுகம்

ProSense-Image-scaled.jpg

​புற்றுநோய் மருத்துவத்தில் முன்னணி பல்துறை மருத்துவமனையாக திகழும் கே.எம்.சி.ஹெச்-ல் இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான ஐஸ்கியூர் மெடிக்கல் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான புரோசென்ஸ் கிரையோ அப்லேஷன் சிஸ்டம் என்ற புதிய மருத்துவக் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அல்ட்ரா சவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் வழிகாட்டுதலுடன் ஒரு ஊசியை புற்றுநோய் கட்டியின் மையத்தில் செலுத்தி திரவ நைட்ரஜன் கொண்டு புற்றுநோய் செல்களை உறைய வைத்து அவற்றை அழித்துவிட இக்கருவி உதவுகிறது. இந்த முறை மூலம் உலகம் முழுவதும் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் மற்றும் இதர உடல் பாகங்களில் ஏற்படும் புற்று நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையில் இம்முறை சிறந்த பலனளிப்பதாக உள்ளது. இம்முறையில் சிகிச்சை பெறுவோருக்கு வலி தெரியாது, மருத்துவமனையிலும் தங்கத் தேவையில்லை.

புற்றுநோய்க்கான இப்புதிய மருத்துவக் கருவியின் துவக்கவிழா கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் நடைபெற்றது. இஸ்ரேல் நாட்டின் கான்சுலேட் ஜெனரல் திருமதி டாம்மி பென் ஹெய்ம் அவர்கள் துவக்கிவைத்தார். கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி முன்னிலை வகித்தார்.

புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு முன்னோடி மருத்துவமனையாக கே.எம்.சி.ஹெச் திகழ்கிறது என்று முதன்மை புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்தார். இந்த மண்டலத்திலேயே முதன்முறையாக இமேஜ் கைடட் தெரபி, ஸ்ட்ரீயோடாக்டிக் ரேடியோசர்ஜரி மற்றும் ரெஸ்பிரேட்டரி கேட்டட் தெரபி முதலான பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை கே.எம்.சி.ஹெச் அறிமுகம் செய்துள்ளது என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். மேலும் ஹைபர் ஆர்க் தொழில்நுட்பத்தை நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்த பெருமையையும் கே.எம்.சி.ஹெச் பெற்றுள்ளது என்று அவர் கூறினார். கிரையோதெரபி தொழில்நுட்பம் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்றும் இதன் மூலம் ஏராளமான நோயாளிகள் பலன் பெறுவர் என்று மருத்துவ புற்றுநோய் துறையின் டாக்டர் பரத் ரங்கராஜன் குறிப்பிட்டார்.

மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எந்த புதிய மருத்துவ தொழில் நுட்பத்திலும் முதலீடு செய்திட கே.எம்.சி.ஹெச் தயாராக உள்ளதாக தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி தெரிவித்தார். கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் புற்று நோய் மருத்துவம் என்பது சர்வதேச தரத்திற்கு உயர்ந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாய் உள்ளது என்று கூறினார். ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்ற அதிநவீன சிகிச்சை வசதிகளை இந்த பிராந்தியத்தில் அறிமுகம் செய்ததில் கே.எம்.சி.ஹெச் முன்னோடி என்றும் புற்றுநோய் மருத்துவக் குழுவினரின் திறமையான செயல்திறன் உள்ளவர்கள் என்றும் அவர் பாராட்டினார்.

கே.எம்.சி.ஹெச் கதிரியக்கத் துறையானது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது என்று கதிரியக்க சிகிச்சை துறை தலைவர் டாக்டர் மேத்யூ செரியன் தெரிவித்தார். மார்பக புற்றுநோய் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா ரங்கநாதன் இப்புதிய கருவியைப் பயன்படுத்தி மார்பக புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார். உடலின் மற்ற பாகங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு டாக்டர் வெங்கடேஷ் மற்றும் டாக்டர் ஸ்ரீமான் ஆகியோர் சிகிச்சைகள் அளிப்பார்கள்

அமெரிக்கா முதலான வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் மருத்துவ வசதிகளுக்கு இணையாக நமது நாட்டில் கே.எம்.சி.ஹெச் போன்ற மருத்துவமனைகளிலும் கிடைப்பது பெருமை கொள்ளத் தக்கது என்று கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் என். பழனிசாமி தெரிவித்தார்.

scroll to top