திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் திருக்கல்யாணம் கோலாகலம்

WhatsApp-Image-2023-04-06-at-1.32.14-PM.jpg

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி, நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக திருக்கல்யாணம் நடைபெற்ற ஆடிப்பூரக் கொட்டகைக்கு ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி எழுந்தருளினார். பின்னர் ஸ்ரீஆண்டாள் திருமணப் பந்தலுக்கு அழைத்துவரப்பட்டார். அதனையடுத்து ஸ்ரீஆண்டாளை, பெரியாழ்வார் கன்னிகா தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் திருமணத்தை பாலாஜி பட்டர் நடத்தி வைத்தார். ஸ்ரீஆண்டாள் திருமணத்தை காண வந்திருந்த பெண் பக்தர்கள், திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றவுடன் தங்களது மங்கல்யகயிற்றை புதியதாக மாற்றிக் கொண்டு, ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகளிடம் ஆசி பெற்றனர். திருக்கல்யாணம் நிகழ்ச்சியை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்யாண விருந்து சாப்பாடு வழங்கப்பட்டது. ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா உட்பட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

scroll to top