திருவில்லிபுத்தூர் அருகே நாட்டு வெடி குண்டுகள் கண்டுபிடிப்பு, 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி – கான்சாபுரம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்தப்பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வருவார்கள். இந்தப்பகுதிக்கு அருகில் வனப்பகுதி உள்ளதால், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில், புதுப்பட்டி – கான்சாபுரம் செல்லும் சாலையில் உள்ள அர்ச்சுனாபுரம் பெரிய ஓடை பகுதியில் இருந்து மூலக்காடு செல்லும் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வ.புதுப்பட்டி, கிறிஸ்டியான் பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் சந்தேகம்படும் வகையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் அருகே இரண்டு பைகள் இருந்தது. வனத்துறை ஊழியர்களை பார்த்ததும் 3 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதனால் சந்தேகம் அடைந்த வனத்துறை ஊழியர்கள் இது குறித்து வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். திருவில்லிபுத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது சாலையோரத்தில் உள்ள ஓடை பகுதியில் இருந்த முட்புதருக்குள், இரண்டு பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பகுதியை மக்கள் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, கயிறுகள் கட்டி பாதையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த நாட்டு வெடி குண்டுகள், அந்தப்பகுதியில் ஒரு பள்ளம் தோண்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்தப்பகுதியிலிருந்து தப்பி ஓடிய கிறிஸ்டியான் பேட்டை பகுதியைச் சேர்ந்த
புஷ்பராஜ் (22), ராம்குமார் (21), சின்னச்சாமி (20) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாட்டு வெடி குண்டுகளை யார் வைத்தது, விலங்குகளை வேட்டையாட தயாரிக்கப்பட்டதா, அல்லது ஏதேனும் குற்றச் செயலுக்காக தயாரிக்கப்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top