திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு

DOG.jpg

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது.

திருவில்லிபுத்தூரில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கடந்த 2015ம் ஆண்டு, மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து சிமி என்ற மோப்பநாய் கொண்டு வரப்பட்டது. வனப்பகுதி குற்றங்களை தடுக்கும் விதமாக தமிழகத்தின் வனப்பகுதிக்கு கொண்டு வரப்பட்ட முதல் மோப்ப நாய் சிமி ஆகும்.டெல்லியில் பயிற்சியை முடித்த மோப்ப நாய் சிமி, திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக, வனப்பாதுகாப்பாளர் பெரியசாமி, சிமியை பாதுகாத்து பராமரித்து வந்தார். வனப்பகுதிகளில் சமூக விரோதிகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியிலும், காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்கு நாட்டு வெடி குண்டுகள் பயன்படுத்தப் படுவதை கண்டுபிடிக்கும் பணியிலும் மோப்ப நாய் சிமி சிறப்பாக பணியாற்றியது.

மேலும் கடந்த 2018ம் ஆண்டு, கம்பம் பள்ளத்தாக்கில் யானை வேட்டையில் ஈடுபட்ட கும்பலை பிடிப்பதற்கு மோப்ப நாய் சிமி பெரும் உதவியாக இருந்தது என்று வனத்துறையினர் கூறினர். கடந்த 8 ஆண்டுகளாக வனத்துறையில் பணியாற்றிய மோப்ப நாய் சிமி, கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. திருநெல்வேலி கால்நடை மருத்துவமனையில் சிமிக்கு உயரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மோப்ப நாய் சிமி திடீரென்று உயிரிழந்தது. இறந்த மோப்ப நாய் சிமியின் உடலுக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மரியாதை செய்தனர். பின்னர் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலக வளாகப் பகுதியில், வனத்துறை அதிகாரிகள் மரியாதையுடன் மோப்ப நாய் சிமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

scroll to top