திருப்பரங்குன்றம் கோவில் யானை தெய்வானை பொள்ளாச்சியில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைப்பு

WhatsApp-Image-2023-04-16-at-11.15.25.jpg

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது கொண்ட ஒரு பெண் யானை வாங்கப்பட்டது. அந்த யானைக்கு தெய்வானை என்று பெயர் சூட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக யானை தெய்வானை தன் பாகனை தாக்கி கொடூரமாகக் கொன்றது. இதனால் திருச்சி எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உள்ள புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டு சில மாதங்கள் தங்கி இருந்தது. பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறிது நாட்கள் தங்க வைக்கப்பட்டது. இதற்கிடையே மறுபடியும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு தெய்வானை வரவழைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டது.

திருக்கோயிலில் நடைபெறும் திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட ஒரு சில நிகழ்ச்சியில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பங்கேற்று வந்தது. அப்போது மீண்டும் திருக்கோவில் பேஸ்கார் புகழேந்தி என்பவரை யானை தாக்கியது மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த நிலையில் யானை தெய்வானைக்கு புதிய பாகனுக்கும் பயிற்சி அளிப்பதற்காகவும், மேலும் தெய்வானை வயதுக்கு மீறிய எடையில் உள்ளதால் அதற்கான பயிற்சி மற்றும் புத்துணர்வுக்காக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் உள்ள வனத்துறை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு தெய்வானை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஆறு மாதம் பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் தங்கி பயிற்சி மற்றும் புத்துணர்வு பெற்றுவிட்டு யானை மீண்டும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு திரும்பும் என்று திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

scroll to top