திருநங்கை நஸ்ரியா காவலர் பணியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு

nazriya-1.jpeg

​கோவையில் சிறப்பு ஜூனியர் உதவி போலீஸ் பிரிவில் பணியாற்றி வரும் திருநங்கை நஸ்ரியா தனக்கு காவல் உயர் அதிகாரிகள் தொடர்ந்து துன்புறுத்தல் தருவதாக கூறி அவரது ராஜினாமா கடிதத்தை மாநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.

இது குறித்து பேட்டியளித்த அவர், ” கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து கோவையில் ஒரு வருடம் ஆயுதப்படை காவலில் பணியாற்றி , அதன் பின் ஜே.ஏ.பி யில் பணியாற்றி வருகிறேன். நான் பணியாற்றும் இடத்தில்  பல்வேறு விஷயங்கள் தவறாக நடைபெற்றது. தனது பாலினத்தை குறிப்பிட்டு ஒரு சிலர் இழிவாக பேசி வந்தனர் தெரிவித்தார். இதற்கு முன்பு மாநகர காவல் ஆணையரை பார்க்க வந்தபோது என்னை தடுத்து விட்டனர். பல்வேறு இடங்களில் எனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தரப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த போதும் எனக்கு இது போன்ற துன்புறுத்தல்கள் தரப்பட்டது. அப்போது நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

தற்போது கோவையில் பணியாற்றும் போது ஆய்வாளர் மீனாம்பிகை தனது பாலினத்தை குறிப்பிட்டு பேசினார். பின்னர் தனது ஜாதியை குறிப்பிட்டு பேசினார். இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் தெரிவித்த பிறகு காவல் ஆணையர் சம்பந்தப்பட்ட ஆய்வாளரை அழைத்துப் பேசினார். அதனை தொடர்ந்து அவர்களது அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்றார். என்னை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள். மெண்டல் டார்ச்சரும் அளித்து வந்தனர். எனவே இதற்கு மேல் இந்தப் பணியில் என்னால் இருக்க முடியாது, அதனால் எனது வேலையை ராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளேன். என்று  தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் நஸ்ரியாவை அழைத்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார்.  அப்போது திருநங்கை காவலர் நஸ்ரியா சொல்லும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு , புகாரை எழுத்து பூர்வமாக கொடுக்கும் படி கூறினார். இதனையடுத்து திருநங்கை காவலர் நஸ்ரியா எழுத்து பூர்வமான புகார் அளித்தார். திருநங்கை காவலர் நஸ்ரியா அளித்துள்ள புகார் குறித்து துணை ஆணையர் சந்தீப் விசாரிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top