THE KOVAI HERALD:
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 10 முக்கிய பிரச்னைகள் குறித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் கோரிக்கை மனுவாக எனது கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு வாரங்கள் முன்பு அறிவித்திருந்தார்.
அதை சிரமேற்கொண்டு திமுக எம்எல்ஏக்கள் எந்த அளவு அவரவர் தொகுதியில் செய்தார்களோ அவர்களுக்கே வெளிச்சம். ஆனால் கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்பது பேரும் இதை அட்சரம் பிசகாமல் செய்துள்ளனர்.
எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ, பொள்ளாச்சி எம்.எல்.ஏ, வ.ஜெயராமன், கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சிங்காநல்லூர் ஜெயராம், வால்பாறை அமுல்கந்தசாமி, கந்தசாமி, கவுண்டம்பாளையம் அருண்குமார், கிணத்துக்கடவு தாமோதரன், மேட்டுப்பாளையம் செல்வராஜ் ஆகியோர் இதில் அடங்குவர். கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் கடந்த புதனன்று தனித்தனியாக கோரிக்கை மனு அளித்த இவர்கள் அதன் தொடர்ச்சியாக பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசினார்.
இவர்களில் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘‘எங்கள் தொகுதியில் இருக்கும் 10 பிரச்னைகள் குறித்து 15 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் ஒன்பது பேரும் எங்கள் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளோம். கோவை மாநகரில் சாலைகள் மோசமாக இருக்கிறது. பயணிகள் பயனிக்கவே முடியவில்லை. எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பாலங்கள் வேலை அப்படியப்படியே நிற்கிறது. அல்லது சுணக்கமாகி இருக்கிறது. எங்கள் ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்ட 500 சாலைப்பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த சாலைகளை போட வேண்டும். மாநகரில் நடந்து வரும் மேம்பால பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். வெள்ளலூர் பேருந்து நிலையம் அதே இடத்தில் தொடர வேண்டும். மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை வேகப்படுத்த வேண்டும். அத்திக்கடவு – அவினாசி திட்டம் விரைவாக முடிக்க வேண்டும்.அணைகளில் தண்ணீர் இருந்தும் அதனை சரியாக விநியோகிப்பதில்லை. மக்கள் நலத்திட்டங்களை திமுக புறக்கணிக்காமல் நிறைவேற்றி தர வேண்டும். இப்படிப்பட்ட கோரிக்கைகளையே கலெக்டரிடம் மனுவாக அளித்துள்ளோம்!’’ என்றார்.
THE KOVAI HERALD S.KAMALA KANNAN Ph. 9244319559