‘‘திமுக கனவு பலிக்காது; பாஜக எண்ணம் ஈடேறாது!’’:மாற்றுப் பாதைக்கும் தயார் ஆகிறதா அதிமுக?

Pi7_Image_admk.jpg

THE KOVAI HERALD:

சென்னை உயர்நீிதிமன்றத் தீர்ப்பு ஓபிஎஸ் அணிக்கு சாதகமாக வந்துள்ளது. இதில் இபிஎஸ் அணி துவண்டு போய் விட்டது. தன்னெழச்சியாக புறப்பட்ட அவர் ஆதரவாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்!’ இப்படியெல்லாம் அதிமுக தவிர்த்த மாற்றுக் கட்சியினரிடம் சரளமாக கருத்தோட்டம் செல்வதை சில நாட்களாக காண முடிகிறது.

உண்மையில் அதிமுகவினருக்குள் அந்தக் கவலையே இல்லை என்பதுதான் இங்கே முக்கியமான செய்தி ‘இது எங்களுக்கான வீழ்ச்சியல்ல. சின்ன சறுக்கல்தான். அதுவும் எதிர்பார்த்ததுதான்!’ என்று  சொல்லும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், ‘‘எந்த இடத்திலும் இபிஎஸ்ஸை வீழ்த்தும் பேச்சுக்கே இடமில்லை. அந்த அளவுக்கு இங்கே பக்கா கிரவுண்ட் ஒர்க் நடந்து விட்டிருக்கிறது!’ என்று சொல்லுகிறார்கள் அவர்கள்.

என்னதான் நடக்கிறது அதிமுகவில்?

அ.தி.மு.கவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓபிஎஸ். அப்போது அவர்,

“அ.தி.மு.கவை தொண்டர்களுக்கான இயக்கமாக உருவாக்கினார் எம்.ஜி.ஆர். 30 வருடங்கள் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் இருக்கும்போது 15 லட்சம் தொண்டர்கள் கொண்ட இயக்கத்தை, ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக மாற்றினார். 16 ஆண்டு காலம் முதலமைச்சராகவும் இருந்தார். அ.தி.மு.க. ஒன்றுபட்டு நின்றபோது, அதை வெல்ல எந்தக் கட்சியும் இல்லை என்ற நிலையை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். எங்களுக்குள் பிளவு ஏற்படும்போது தான் தி.மு.க ஆளும் சூழல் ஏற்பட்டது. இன்றும் அந்தச் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், எங்களுக்குள் ஏற்பட்ட இந்தப் பிரச்சனையால் ஒரு அசாதாரணமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் கசப்பையெல்லாம் மனதிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு கழகம் ஒன்றுபட வேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தியாகங்களைச் செய்தார்களோ, அதனை எண்ணி, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். கடந்த நான்கரை ஆண்டு காலம் அன்பு சகோதரர் எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அவரோடு ஒற்றுமையாகப் பயணித்திருக்கிறோம். பல்வேறு ஜனநாயகக் கடமைகளை ஆற்றியிருக்கிறோம்.அந்த நிலை மீண்டும் வர வேண்டும். அன்புச்சகோதரர் எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், அ.தி.மு.க. விவகாரம் குறித்து நேற்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் எடப்பாடி கே. பழனிச்சாமி மேல் முறையீடு செய்திருக்கிறார். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வழக்கை திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியிருக்கிறது.

ஓபிஎஸ் சந்திப்பினை தொடர்ந்து இபிஎஸ்ஸூம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் ஓபிஎஸ் விடுத்திருக்கும் அழைப்பு குறித்து கேட்டபோது, “அவர் அடிக்கடி அழைப்பு விடுப்பார், தர்மயுத்தம் சென்றார். யார் அழைத்து சென்றார்? அவருக்கு பதவி வேண்டும். பதவியில்லாமல் இருக்க முடியாது. உழைப்பு கிடையாது. ஆனால், பதவி மட்டும் வேண்டும். குடும்பத்திலிருப்பவர்கள் பதவி பெற வேண்டும். மகன் எம்.பியாகி மந்திரியாக வேண்டும். மற்றவர்கள் எப்படிப் போனாலும் கவலையில்லை. இணைய வேண்டும் என்கிறார். அது எப்படி சரரியாகும். ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 2017ல் எப்படிக் கூட்டப்பட்டதோ அதேபோலத்தான் இப்போதும் கூட்டப்பட்டது. அவர் அங்கே வந்திருக்க வேண்டும். மாறாக அவர் நீதிமன்றத்திற்குச் சென்றார். 9 மணிக்குக் கூட்டம் என்றால் எட்டரை மணிக்கு அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து கேட்டை உடைத்தார். பிரதான கதவை ரவுடிகளை வைத்து உடைக்கிறார். எல்லா அறைகளையும் உடைத்து கம்ப்யூட்டர்களை உடைத்து, முக்கியமான பொருட்களை திருடிச் சென்றார். சொத்துப் பத்திரங்களை எடுத்துச் சென்றார். இவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும். இதனை தலைமைக் கழக நிர்வாகிகள் தடுக்கும்போது, அவர்களை அடித்து உதைத்தார்கள். இன்னும் வழக்குகளை சந்திக்கிறார்கள். கட்சியில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி செயல்பட்டால், அவரோடு எப்படி செயல்பட முடியும். சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அனைத்துப் பொறுப்பார்களும் என்னை முதல்வராக அறிவிக்கிறார்கள். ஆனால், இவர் ஏற்க மறுத்தார். 15 நாள் தொலைக்காட்சிகளில் விவாதமாக ஆனது. இதனால் 3 சதவீத ஓட்டில் வெற்றிவாய்ப்பை இழந்தோம். இவரால்தான் அது நடந்தது. தேர்தல் முடிந்த பிறகு யார் எதிர்க்கட்சித் தலைவராவது என்ற விவகாரம். கூட்டம் கூடியபோது 66 பேர் என்னை ஆதரிக்கிறார்கள். 3 பேர் அவரை ஆதரித்தார்கள். இவர் அதை ஏற்க மறுத்தார். இப்படியிருந்தால் கட்சியை எப்படி பொதுமக்கள் ஏற்பார்கள்? அதனால்தான் ஒற்றைத் தலைமை வேண்டுமென கேட்கப்பட்டது. இது தவிர, தி.மு.கவோடு தொடர்பில் இருக்கிறார். இவருடைய மகன் எம்பி, ஸ்டாலினைச் சந்தித்து சிறப்பான ஆட்சி நடக்கிறது என்று கூறினார். இது தொண்டர்களிடம் மனச் சோர்வு ஏற்பட்டது. இதை எப்படி ஏற்க முடியும். இதனால்தான் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்தது. நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்படவில்லை. சொந்தக் காலில் நிற்க வேண்டுமென நினைக்கிறேன். 1974 இல் இருந்து படிப்படியாக மேலே வந்தேன். ஒரே கட்சியில் இருக்கிறேன். இருவரும் இணைந்து பொதுக் குழுவைக் கூட்ட வேண்டுமென்கிறது நீதிமன்றம். அப்படியானால் பொதுக் குழுவிற்குத்தான் அதிகாரம் என்பதை ஏற்கிறார்களா? நாங்கள் மேல் முறையீடு செய்திருக்கிறோம். அதில் எல்லாம் வெளிவரும்!’’ என்று மிகுந்த காட்டமாகவே பேசினார் இபிஎஸ்.

இப்படி இபிஎஸ் பேசியதன் பின்னணியில் அதிமுகவின் மூத்த பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘ஓபிஎஸ்ஸிடம் அவரையும் சேர்த்து மூன்று எம்எல்ஏக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். தவிர அவர் மகன் எம்பியாக இருக்கிறார். இவர்கள் எல்லாமே பாஜகவின் நெம்பர் டூ அணியாகத்தான் செயல்படுகிறார்கள் என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். அதன் பின்னணியில்தான் அவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்தாலும் இந்த துள்ளு துள்ளுகிறார்கள். அவர்களால் தமக்கு சாதகமாகக் கோர்ட்டுக்குப் போய் தீர்ப்பும் வாங்கிக் கொள்ள முடிகிறது.

இதை ஈபிஎஸ் எதிர்பார்த்தே இருந்தார். இருக்கிறார். அவரையும், அவர் சார்ந்த எங்களையும் பொறுத்தவரை மன்னார்குடி குடும்பத்திற்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை. பாஜகவுடன் கூட்டுமில்லை.  பாஜகவைப் பொறுத்தவரை எல்லா நேரங்களிலும் எல்லா மீடியாக்களும் அண்ணாமலையைப் பற்றியே பேச வேண்டும் என்று விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமி தென்மாவட்டங்களில் டூர் அடித்ததில் தொண்டர்களிடம் எழுச்சி மிகு வரவேற்பு. அடுத்ததாக வடமாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் டூர் செல்ல திட்டமிட்டிருந்தார். அதை முறியடிக்க வேண்டும். எங்கள் எழுச்சிக்கு தடை செய்ய வேண்டும் என்று எல்லா எதிரிகளும் கூட்டுப் போட்டு செயல்படுகிறார்கள். அதுவும் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும்.  

கோர்ட் தீர்ப்பு  பாதக சாதகமாக எப்படி வந்தாலும், அதை மீறி ஒன்றும் செய்ய முடியாது.  உச்சநீதிமன்றத்தில் இறுதித் தீர்ப்பு எங்களுக்குப் பாதகமான தீர்ப்பு வந்தாலும் கூட அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பதை இப்போதே தீர்மானித்து வைத்திருக்கிறார் ஈபிஎஸ். கட்சியின் பெயரும், இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டாலும் கூட புதுச்சின்னத்தில், புதுப் பெயரில் ஈபிஎஸ் தலைமையில் செயல்படுவது என்று முடிவாகி விட்டது. அதற்கான ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகிறது. அதற்கு முழு பக்கபலமாக 99.99 சதவீதம் தொண்டர்கள் இபிஎஸ்ஸின் கரத்தை வலுப்படுத்த தயாராகி விட்டார்கள். அதன் எதிரொலிதான் எடுத்த எடுப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ் அழைப்பை நிராகரிக்க முடிந்தது. ஓபிஎஸ்ஸை நம்பி ஒரு தொண்டன் கூட போகும் மனநிலையில் இங்கே இல்லை. திமுக  இந்தக் கட்சி உடையாதா, அதில் குளிர்காயலாம் என்று ஜெயலலிதா மறைந்த நாளிலிருந்து கனா கண்டு கொண்டிருக்கிறது. பாஜக ஓபிஎஸ்ஸை வைத்து மடக்கி கட்சியைத்தானே இயக்கலாம் என்று நினைக்கிறது. இந்தக்கனவும், நினைப்பும் எல்லாம் ஒரு போதும் ஈடேறாது. வெகுசீக்கிரமே திட்டமிட்டபடி மறுபடியும் டூர் கிளம்புவார் எடப்பாடி. அப்போது புறப்படும் தொண்டர்களின் எழுச்சியின் மூலம் உண்மை நிலை புரிய வரும்’’ என்றனர்.

S.KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top