கோவை இரண்டு மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் தத்தளித்து வருகிறது. தினம் தோறும் தண்ணீர் கிடைத்த வந்த முன்னாள் நகராட்சிப் பகுதிகளில் கூட தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விடப்படுவதாகவும், ஒரு நாள் முழுக்க வந்த குடிநீர் இரண்டு மணி நேரம் மட்டுமே விடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு கோவை சங்கனூர் பகுதியில் ஆய்வு செய்த குடிநீர் வழங்கல் துறை கூடுதல் முதன்மைச் செயலர் ஷிவ்தாஸ் மீனாவிடம் அப்பகுதி மக்கள் மூன்று மாதங்களாக தங்களுக்கு 20 நாள், 25 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் வருவதாகவும், அதனால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலைதான் கோவை நகரின் முக்கியப் பகுதிகளான சிங்காநல்லூர், ராமநாதபுரம், டவுன்ஹால், உக்கடம், குனியமுத்தூர், கோவைபுதூர் பகுதிகளிலும் நிலவி வருகிறது. சூயஸ் கம்பெனி மூலம் 24X7 என்ற திட்டத்தை – அதாவது தினமும் 24 மணி நேரமும் குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போவதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்த மாநகராட்சி அதிகாரிகள் எல்லாம் இப்போது வாயே திறப்பதில்லையே ஏன் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வண்ணம் உள்ளது.
இதன் பின்னணியில் கேரள மாநிலம் அட்டப்பாடியில் கோவையின் குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி, மற்றும் பவானி நதிக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டியிருப்பதால் வேனிற்காலத்தில் அங்கேயே தண்ணீரை தடுத்து விடுவதால் கோவை பில்லூர் அணைக்கு தண்ணீர் வரத்து ரொம்பவும் குறைந்து விட்டதாகவும் கருத்துத் தெரிவிக்கின்றனர் மக்கள்.
தமிழகத்தின் நீலகிரி கூடலூர் பகுதியில் உருவாகி கேரள சைலண்ட்வேலி, அட்டப்பாடி மலைகளுக்குள் ஓடி திரும்ப தமிழகப்பகுதியான முள்ளி, பில்லூர் பகுதிகளுக்குள் நுழைந்து மேட்டுப்பாளையம், பவானி பகுதியில் காவிரியில் கலப்பது பவானி நதி. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையின் முத்திக்குளம் பகுதியில் உருவாகி கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் புகுந்து கூட்டுப்பட்டி என்ற இடத்தில் பவானி ஆற்றுடன் இணைவது சிறுவாணி ஆறு. கோயமுத்தூருக்கு ஆரம்ப காலத்திலிருந்தே கேரள அரசுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட சிறுவாணி அணை மூலமே குடிதண்ணீர் வந்தது. ஆனால் அந்த நீர் பற்றாக்குறை மற்றும் கேரள அதிகாரிகள் செய்யும் தில்லுமுல்லுகள் காரணமாக கோவைக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்தது. இந்த ஸ்திரத்தன்மை இன்மை காரணமாகவே பில்லூரில் அணை கட்டி முதல் மூன்று குடிநீர் திட்டங்களை கோவை தொடங்கி காங்கயம் வெள்ளக்கோயில் வரை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசு.
காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி பெறாமல் கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கேயும், பவானி ஆற்றின் குறுக்கேயும் நான்கைந்து தடுப்பணைகளை ஆறேழு ஆண்டுகள் முன்பே கட்டி விட்டது கேரள அரசு. மேலும் 10 அணைகள் கட்டும் திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறது. அதை ஒவ்வொன்றையும் சத்தமில்லாமல் கட்டி வருகிறது. அதனால் வேனிற்காலத்தில் பில்லூர் அணைக்கு தண்ணீர் பத்தில் ஒரு பங்காக சுருங்கி விடுகிறது. அதனால் கேரள ஏற்கனவே தடுப்பணையை கட்டியிருப்பதற்கும், மேலும் தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதற்கும் தமிழ்நாட்டில் கடுமையான எதிர்ப்புகள் பல ஆண்டுகளாகவே கிளம்பி வருகின்றன. போராட்டங்களும் வெடித்துள்ளன,
மழைக்காலங்களில் இந்தக் குரல் அமுங்கிப் போவதும், கடும் வெயில் வறட்சி காலத்தில் இந்தக் குரல் ஓங்கி ஒலிப்பதும் இப்போதெல்லாம் வழக்கமாகியிருக்கிறது. இப்போது குரல் ஓங்கி ஒலிக்கும் சீஸன்.
அதற்கேற்ப பில்லூர் அணையில் நீர் வற்றி விட்டது. சிறுவாணியில் நீர்தேக்க அளவு பாதிக்குக் கீழாகப் போய்விட்டது. சிறுவாணி அணையிலும் தண்ணீரை முன்பு போலத் தேக்காமல் ஆற்றில் தண்ணீரை உபரி நீராக விட்டு விடுகிறது கேரள அரசு. இதனால் தினம் தோறும் கோவையில் தண்ணீர் பெற்று வந்த மக்கள் 10- 15 நாட்களுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் மட்டுமே தண்ணீர் பிடிக்கும் நிலை. முன்பு வாரம் ஒரு முறை தண்ணீர் பெற்று வந்த மக்கள் 20 நாட்கள், 25 நாட்கள் என காத்திருக்கும் நிலை. அதுவும் ஒரு மணி நேரம் தண்ணீர் வந்தால் அதிகம். இவ்வளவு நடந்தும் கோவை மாநகராட்சி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருவதுதான் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
எனவே அங்கங்கே மக்கள் காலிக்குடத்துடன் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். எந்த நேரமும் இது போராட்டமாக மாறலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.