கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மகக்ள் தொகை 7 கோடியே 21 லட்சமாக உயர்ந்தது. இதையடுத்து 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நடைபெற வில்லை. தற்போது, தமிழ்நாட்டின் மகக்ள் தொகை 8 கோடியை தாண்டியிருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இறப்பு, பிறப்பு, குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரலாற்றிலேயே முதல் முறையாக 2021-ம் ஆண்டு தான் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 8 லட்சத்து 73 ஆயிரத்து 361 பேர் பிறந்துள்ளனர். அதே வேளையில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 259 பேர் உயிழந்துள்ளனர். இந்த பிறப்பு மற்றும் இறப்புக்கும் இடையே 59% இடைவெளி ஏற்பட்டுள்ளது.
ஆனால்,கடந்த 2021-ம் ஆண்டு 9,02,367 பேர் பிறந்துள்ளனர். 8,70,192 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே உள்ள இடைவெளி வெறும் 3.69 சதவீதம்தான் உள்ளது. இது இதுவரை இல்லாத அளவு என்றும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதற்கு கொரோனா தொற்றும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5, 49, 259 ஆகும். அது 2019-ம் ஆண்டு 6, 37, 564 ஆக அதிகரித்துள்ளது. இந்த இரு ஆண்டுகளுக்கு இடையே இறப்பை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு இறப்பு சதவீதம் 16.07 அதிகமாக உள்ளது. 2020-ம் ஆண்டு 6 லட்சத்து 90 ஆயிரத்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2020-ம் ஆண்டு இறப்பு சதவீதம் 8.22 அதிகம் ஆகும். 2021-ம் ஆண்டு 8, 70, 192 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.11 சதவீதமும், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36.48 சதவீதமும், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 58.43 சதவீதமும் அதிகமாக உள்ளது. 2021-ம் ஆண்டு தமிழகத்தில் இறப்பு அதிகமாக இருக்கும் அதே வேளையில் பிறப்பும் குறைந்து போய் உள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை குறைந்து போய் விட்டது. 2019-ம் ஆண்டு 9, 45, 122 பேரும், 2020-ம் ஆண்டு 9, 37, 959 பேரும் பிறந்தனர். ஆனால் 2021-ம் ஆண்டு வெறும் 9, 02, 367 பேர்தான் பிறந்தனர். இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.52%, 2020-ம் ஆண்டுடன் 3.79 சதவீதமும் குறைவாகும்.