தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை – பாஜக பொது கூட்டத்தில் ஜே.பி.நட்டா

jpnadda1.jpg

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், “பிரதமர் மோடி தலைமையில் இந்தியா பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நம்பிக்கையான முன்னேற்றத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் பாஜகவைச் சேர்ந்தவன் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை.  சீனா,  அமெரிக்கா  உள்ளிட்ட நாடுகள் கொரோனாவிற்கு பின்னர், முன்னேற்றப் பாதையில் பயணிக்கும் இந்தியாவையும், அதனை வழிநடத்தி வரும் பிரதமர் மோடியின் தலைமைப் பண்பையும் வியந்து பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை வழங்கியதன் வாயிலாக, தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி கட்டமைப்பு திட்டத்திற்கு பாஜக பலம் அளித்துள்ளது.  பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம்,  தமிழகத்தில் உள்ள 6 வழிச் சாலைகளை எல்லாம், 8 வழிச் சாலைகளாக மாற்றுவதற்கான அதிகமான நிதி ஒதுக்கீடு, 800 கோடி ரூபாய் செலவில் 8 புதிய ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றை தமிழகத்திற்காக மத்திய அரசு செய்து வருகிறது.

கொள்ளையடிப்பது மட்டும்தான் திமுகவின் குறிக்கோள். அவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை. இந்த தேசம் எப்படி ஒரு பாதுகாப்பான கைகளில் இருக்கிறதோ அது போல தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை. பாஜகவை பொறுத்தவரை நாடுதான் முதன்மையானது, கட்சி அதற்கு பிறகுதான். இந்த கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது திமுக” என்று கூறினார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜகவின் தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக இளைஞர் அணி செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top