தமிழகத்தில் அனைத்து மருத்துவகட்டமைப்புகளிலும் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

msubramaniam.jpeg

​​புதுதில்லியிருந்து காணொலிக்காட்சி வாயிலாக கொரோனா  நோய்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மான்சுக் எல்.மாண்டாவியா தலைமையில் நடைபெற்றது. இக்காணொலியில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா நோய்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

 தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை  சந்தித்தார்.  இச்செய்தியாளர் சந்திப்பின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்  ஆகியோர் உடனிருந்தனர்.​ ​ அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,​ “​​மத்திய​ சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.மான்சுக் எல்.மாண்டாவியா  தலைமையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் காணொலி​ ​வாயிலாக நடைபெற்றது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பேரிடர் தடுப்புப்பணிகள்  குறித்தும், கொரோனா பரவல் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த 24மணி நேரத்தில் இந்தியாவில் 6050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் 1936 பேருக்கும், மகாராஷ்டிராவில் 83​ ​பேருக்கும்,  டில்லியில் 66 பேருக்கு,  கர்நாடகம், ஹரியானா, இமாச்சலப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் 300க்கு மேற்பட்டவர்களும்,  தமிழ்நாட்டில் 273​ ​பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை, கோவை, திருச்சி ஆகியவற்றில் உள்ள பன்னாட்டு விமானநிலையங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் இரண்டு சதவீதம் (Random)பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  தற்போது இந்த பரிசோதனையில் தினந்தோறும் 10  முதல் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சைக்கு, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1000 படுக்கைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100க்கு மேற்பட்ட  படுக்கை வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டில்  24061 ஆக்ஸிஜன் கான்சன்ரேட்டர்கள்,260 பி.எஸ்ஏ பிளான்ட்கள், 2067 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சேமிப்புதிறன்,  படுக்கை வசதிகள், மருந்துகையிருப்புகள் போன்றவை தயார்நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் தினந்தோறும் 4000 பேருக்கு ஆர்.டி.பி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. மருத்துவமனைகளில் சளி, இருமல், தொண்டைவலி வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர்  பரிசோதனை செய்யப்படுகிறது. வரும்​ ​நாட்களில் 11000 பேருக்கு பரிசோதனை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குறித்து பயப்படதேவையில்லை. இருந்தாலும், இணை நோய் உள்ளவர்கள், நாள்பட்ட சர்க்கரை நோய் உள்ளவர்கள் பொதுஇடங்களுக்கு செல்லும் முகக்கவசம் அணியவேண்டும். கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் விதமாக ஏப்ரல் 1ம்தேதி முதல் அனைத்து மருத்துவகட்டமைப்புகளிலும் முகக்கவசம் கட்டாயம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் பெரியபாதிப்புகள் இல்லையென்றாலும், தொற்றின் அளவு கூடுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்றின் பரவலை கட்டுப்படுத்த பொதுஇடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிவது, கைகளை சோப்புபோட்டு கழுவுவது, மற்றும் சமூக இடைவெளி பின்பற்றுவதை போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும்

தமிழ்நாட்டில் இன்புளுயன்சா காய்ச்சல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 52,568 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் 19135 முகாம்கள், பள்ளிகள் மூலம் 33,433 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலமாக 21, 05,234 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 11,130 பேருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டது. இவர்கள் பூரணமாக குணமடைந்துவிட்டனர்.  அதிகப்பட்சமாக முகாம்கள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இன்புளுயன்சா காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசின் மருத்துவ சேவையினை இன்று மக்கள் கூடுதலாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 6 இலட்சம்பேர் அரசு மருத்துவமனையினை நாடி வருகிறார்கள்.”  என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

scroll to top