தி கோவை ஹெரால்டு:
‘இப்பவோ, அப்பவோ, எப்பவோ உள்ளாட்சி மன்றத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம்!’ என்ற சூழ்நிலையில் சொல்லி வைத்தமாதிரி சுறுசுறுப்பாய் இயங்குவது அதிமுக கட்சியினர்தான்.
திமுக பார் விவகாரம், வெளியூர் ஆட்கள் விவகாரம், புது ஆட்களுக்குத்தான் சீட் என்றெல்லாம் சர்ச்சைகளும் சண்டை களும் நிகழ்ந்து கொண்டிருக்க, அந்த அதிருப்திகளை மட்டுமல்ல, தன் செயல்பாடுகளையும் வைத்து ஜெயித்துக் காட்டுவோம்ல என சூளுரைத்து இப்பவே களப்பணியை தொடங்கி விட்டார்கள் தன்னம்பிக்கை மிக்க முன்னாள் கவுன்சிலர்கள் பலர்.
அதில் கோவை மாநக ராட்சியில் முன்னணியில் தெரிகிறார் கோவை காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெ.சசிரேகா.
கோவை மாநகராட்சியின் இருதயப்பகுதியான காட்டூர், நஞ்சப்பாரோடு, கலெக்டர் ஆபீஸ் ஆகிய இடங்களை உள்ளடக்கிய 72-வது வ வார்டில் 2011- 2016 ஆண்டில் அதிமுக கவுன்சிலராக இருந்து நிறைய களப்பணிகள் செய்தார். அப்போது தன்னை எதிர்த்த திமுக வேட்பாளர் யமுனா தேவி சம்பத்தை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ வைத்தார். 2017-2021 மாநகராட்சி தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் ஆளுங்கட்சி என்ற முறையில் மாநகராட்சி வேலைகளை வார்டில் திறம்பட நடத்திக் காட்டியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கைங்கரத்தால், மாவட்டச் செயலாளர் அம்மன் கே அர்ச்சுனன் வழிகாட்டுதலில் ரூ. 4.25 கோடியில் பாதாளச்சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டம், சாலை வசதி, சாக்கடை வசதி என சகலமும் செய்திருக்கிறார். முதியோர் பென்சன், சாதிச்சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் என ஆயிரக் கணக்கானோருக்கு வாங்கித் தந்ததோடு, ஆதார் கார்டு கேம்ப், ஸ்மார்ட் கார்டு கேம்ப், வேலைவாய்ப்பு முகாம், அம்மா நலத்திட்ட உதவிகள் முகாம் என்று கட்சி சார்பாக இவர் இங்கு நடத்தாத மக்களுக்கான நலத்திட்ட முகாம்களே இல்லை எனலாம்.
தற்போது இந்த 72வது வார்டு 83வது வார்டாக மாறி விட்டது. இதில் முன்பிருந்த சில வீதிகள் பிரிக்கப்பட்டு அக்கம்பக்க வார்டுகளில் சில வீதிகள் சேர்க்கப்பட்டு, ரயில்வே ஸ்டேஷன், சுங்கம், திருச்சி ரோடு, ஆல் இந்தியோ ரேடியோ வரை கூடுதல் இடங்கள் இணைத்து சுமார் 16 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டுள்ளது இந்த வார்டு. அந்த வகையில் கலைத்து விளையாட திராணியுள்ளவர்கள்தான் ஆளுங்கட்சியிலோ, எதிர்கட்சியிலோ இங்கே போட்டி போட வேண்டும். அப்படியான சிக்கலான சூழலிலும் கூட, ‘‘எங்க கட்சி இங்கே. எப்படி நின்றாலும் ஜெயிக்கும்!’ என்கிறார் சசிரேகா.
‘‘என்னை அரசியலில் இந்த அளவு வளர்த்து விட்டதே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அண்ணன்தான். அவர் வழிகாட்டுதலில் மாவட்ட செயலாளரும் வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான அம்மன் அர்ச்சுனன் எங்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திருக்கிறார். இந்த அளவு வார்டில் என் பணிகள் பேசப்படுவதற்கு முழு முதற்காரணம் அவர்கள்தான். என்னை மக்கள் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடோடிப் போய் அவர்கள் இட்ட பணியை செய்து கொடுத்து விட்டு வந்திருக்கிறேன். தவிர என் கணவர் (காட்டூர் செல்வராஜ்) இந்தப்பகுதியில் அதிமுகவின் பகுதிச் செயலாளர். அதனால் இதில் புதிதாக இணைந்த பகுதிகளான 71,72, 73 வார்டு மக்களுக்காகக் கூட நாங்கள் பணியாற்றியுள்ளோம். எனவே புதிதாக இணைக்கப்பட்ட வாக்காளர்கள் யாரும் எங்களுக்கு புதியவர்கள் இல்லை. அவர்கள் அத்தனை பேரும் எங்களை அறிந்தவர்கள் மட்டுமல்ல, நாங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி பணி செய்திருக்கிறோம் என்பதையும் தெரிந்தே உள்ளார்கள்!’’
என்று உவகையுடன் கூறும் சசிரேகா கட்சியின் 83 ஏ-வது வட்டக்கழகம் துணை செயலாளராக உள்ளார். சிட்டி கோ.ஆபரேட்டிவ் வங்கியின் தலைவராகவும் இருக்கிறார். அதன் பலனாய் ஏழை எளியவர்களுக்கு, குறிப்பாக தெருவோர டைலர்கள், செருப்புக்கடை, உதிரி பொருட்கள், கட்பீஸ் துணி வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தந்து உதவியிருக்கிறார். இந்தப் புகுதியில் இப்படியான சிறுவியாபாரிகள், அன்றாடம் காய்ச்சிகள் அதிகம். அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாலும், பணிகள் நிறைய இங்கே நிறைவேற்றப்பட்டிருப்பதா லும், தான் இந்த வார்டில் சீட் கிடைத்து போட்டியிட்டால் வெற்றி உறுதி என்ற தன்னம்பிக்கையுடன் அதிமுக கட்சி தலைமையிடம் சீட் கேட்டிருக்கிறார்.
அடுத்தது தலைமை சீட் கொடுக்க வேண்டியதும், பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டியதும், வெற்றிச் செய்தி கேட்க வேண்டியதும்தான் பாக்கி. அந்த அளவு தன்னம்பிக்கையுடன் இப்பவே களப்பணியாற்றி வருகிறார்கள் சசிரேகாவும், அவர் கணவர் காட்டூர் செல்வராஜூம்.