ரொம்ப நேரமாக தன் பஸ் வராததால் தனக்கு முன்பிருந்தே நின்றிருந்தவர்களிடம், ‘ஏனுங்க 3 டி இங்கே வர்றதில்லையோ?’ எனக்கேட்டார். பதிலுக்கு அவர், ‘நாங்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதுக்குத்தான் நிற்கிறோம். ஒரு பஸ் காணோம்!’’ என்று சடைந்து கொண்டவர், ‘முந்தியெல்லாம் பத்து நிமிஷத்திற்கு ஒரு பஸ் வரும். இப்ப ஒரு மணி நேரம் ஆகியும் பஸ் வர்றதில்லை. எத்தனை பஸ்ஸைத்தான் குறைச்சுத் தொலைச்சாங்களோ!’’ என்றும் சொன்னார்.
மேற்படி 3 டி வழித்தட பஸ்ஸின் நிலை மட்டுமல்ல, இன்றைக்கு அரசு பேருந்துகளை எதிர்பார்த்து பஸ் நிறுத்தங்களில் நின்றிருக்கும் அத்தனை பேரின் சம்பாஷனையும் இதுதான்.
கொரானா ஊரடங்கு முடிந்து பத்துக்கு நான்கு பேருந்து மட்டும் ட்ரயல் விட்ட அரசு, பிறகு அப்படியே அதிகரிக்கும் என்று சொன்னது. ஊரடங்குகள் எல்லாம் மக்கள் மறந்து வருடக்கணக்கில் ஆச்சு.
ஆனால் அரசுப் பேருந்துகளின் நிலை மாறவில்லை. பெண் பயணிகளுக்கு டிக்கெட் இலவசம். புதிய ரூட்டில் பஸ் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகிறதேயொழிய அரசு பேருந்துகள் ரூட்டில் வந்தால் வந்ததுதான்; போனால் போனதுதான் என்ற நிலை மாறவில்லை. என்னதான் ஆயிற்று அரசு பேருந்துகளுக்கு?
‘‘அரசுப் போக்குவரத்துப் பேருந்துகளை படிப்படியாகக்குறைத்து விட்டது அரசு. அந்த ரூட்டுகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டம்!’’ என்கிறார் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதை காட்டமாகவே குறிப்பிட்டிருந்தார்.
‘‘கடந்த 29.4.2023 சனிக்கிழமை தமிழகத்தின் தலைநகராம் சென்னை கோயம்பேட்டில், சென்னையில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பெருமளவு மக்கள் பேருந்துக்காக விடிய விடிய காத்திருந்தார்கள். கைக்குழந்தை மற்றும் வயதானவர்களுடன் எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே கிடந்தார்கள். இதை அனைத்து ஊடகங்களும் நேரடியாக ஒளிபரப்பும் செய்தன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எங்கே இருந்தார், துறை அதிகாரிகள் என்ன ஆனார்கள் தெரியவில்லை. முதலமைச்சர் ஊடகங்களைப் பார்த்தாவது மக்கள் பிரச்சனையை தெரிந்து கொண்டாரா தெரியவில்லை.
தனியாருக்கு வாய்ப்பா?
இந்நிலையில் மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக தென்காசி கலெக்டர் அறிவிக்கிறார். இவை பத்திரிகைகளில் செய்தியாகவும் வந்தன. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த அரசு, தற்போது ஓட்டுநர்கள் குறைவாக உள்ளனர். எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருக்கிறது இதுவும் செய்திகள் வந்துள்ளன. இதை எல்லாம் பார்க்கும் போது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் தி.மு.க. அரசு ஈடுபட்டு உள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது!’’
என்று குறிப்பிட்டிருக்க, இதற்கு பதிலடியாக ‘‘எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார்!’ என்று தெரிவித்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கட்டணமில்லா பயணத்தின் மூலம் மகளிர் 277 கோடியே 13 லட்சம் பயணங்களை மேற்கொண்டு, கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் முதல்வருக்கு கிடைக்கும் புகழைப் பொறுக்க முடியாமல்தான் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி பொய்யும் புரட்டுமாய் அறிக்கை விட்டுள்ளார். தமிழ்நாட்டில் எங்கேயும் பேருந்துகள் நிறுத்தப்படவில்லை. பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பது கடந்த எடப்பாடி ஆட்சி காலத்தில் நிகழ்ந்ததுதான். அப்படி எடப்பாடி ஆட்சியில் பேருந்துகளை நிறுத்தியதற்கு காரணம் ஓட்டுநர், நடத்துனர்களை பணிக்கு எடுக்காததுதான். 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஓட்டுநர் நடத்துனர் கூட வேலைக்கு சேர்க்கப்படவில்லை. இதனால் ஓட்டுநர், நடத்துனர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் 2000 வழித்தடங்களை எடப்பாடி ஆட்சியில் முடக்கி விட்டனர். அதற்கு கொரானாவை காரணம் காட்டி விட்டனர்.
அப்படி எடப்பாடி ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை இயக்குவதற்கு தான் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தார்கள், அதற்கு மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். இதை கேள்விப்பட்ட முதலமைச்சர் பொதுமக்கள் கோரிக்கை வைத்த வழித்தடத்தில் பேருந்தை இயக்குவதற்கு ஆணையிட்டுள்ளார். அந்த தென்காசி – வாடியூர் வழித்தடத்தில் 06.05.2023 முதல் பேருந்து இயக்கப்பட இருக்கிறது. அதேபோன்று புதிய பேருந்துகள் 2,000 வாங்கவும், பழைய பேருந்துகள் 1,500 சீரமைக்கவும் என மொத்தம் ரூபாய் 1,000 கோடி ஒதுக்கியுள்ளார். இதை மறைத்து போக்குவரத்துத்துறைக்கு முதல்வர் நிதி ஒதுக்காததுபோல் பொய் பிரச்சாரம் செய்கிறார் பழனிச்சாமி!’’ .
பேருந்துகள் குறைப்பு
இதில் உண்மை நிலை என்ன? கோவை அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘ஒன்றிரண்டு பேருந்துகளே சென்ற கிராமப்புற வழித்தடத்தில் எந்தப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை. ஆனால் நான்கு பேருந்துகளுக்கு மேல் செல்லும் வழித்தடத்தில் நான்குக்கு ஒன்று வீதம் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கோவையில் ஓடும் வழித்தடம் 7 மொத்தம் 17 பேருந்துகள் முன்பு செல்லும். இப்போது 6 பேருந்துகள்தான் விடப்படுகின்றன.
அதேபோல் வழித்தடம் எண் 5 என்பது 14 பேருந்துகள் ஓடின. இப்போது ஐந்து பேருந்துகள்தான் இயக்கப்படுகின்றன. கொரானா காலத்தில் 40 சதவீதம் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. அதை வைத்தே இந்த 25 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதையும் தனியார் பேருந்துகளின் நேரத்தைக் கணக்கிட்டே இந்த வழித்தடத்தில் இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு அரசு பேருந்து செல்லும் நேரத்திற்கு முன்பும், பின்பும் நீண்ட நேர காத்திருப்பில் தனியார் பேருந்துகள் விடப்படுகிறது. அதன் மூலம் தனியார் பேருந்துகளுக்கு வசூல் கொட்டுகிறது. ஒரு ட்ரிப் ரூ. 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூல் பார்த்த வண்டிகள் இப்போது ரூ. 18 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் என பார்க்கின்றன. இரட்டிப்பு வசூல். அதுவே அரசு பேருந்துக்கு ஒன்று நிறுத்திய வகையில் நஷ்டம். இலவசம் பெயரில் நஷ்டம். அடுத்தது இப்படி தனியார் பேருந்துகளுக்கு வசதியாக நேரத்தை வைத்து பஸ் ஓட்டுவதிலும் நஷ்டம். ஆக மொத்தம் அரசு பேருந்தை நஷ்டப்படுத்துவதற்கென்றே இயக்குகிறார்கள். தனியார் பேருந்து முதலாளிகள் மூலம் பெரிய வசூல் அதிகாரிகளுக்கு மாமூல் செல்வதும் இதற்குக் காரணம்!’’ என்றனர்.