டெல்லியில் முகாமிட்ட ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி – தமிழக அரசியலில் என்னதான் நடக்கிறது?

murmu-amit.jpg

​கடந்த வாரம் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டாலும் வெளியிட்டார். தமிழக அரசியலில் ஏகப்பட்ட பரபரப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் முதல்வர் குடும்பத்தில் கடந்த இரண்டு வருடங்களில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்து விட்டதாக ஆடியோ ஒன்று வெளியானது.

அது வலைத்தளங்களில் அங்கிங்கெணாதபடி வைரலாக, அது நான் பேசிய ஆடியோவே அல்ல; யாரோ ஒருவர் தன் குரலில் பேசி வெளியிட்ட மோசடி வீடியோ!’ என்று நீண்டதொரு மறுப்புத் தெரிவித்து அதற்கான லேப் ரிப்போர்ட்டும் வெளியிட்டிருந்தார் அமைச்சர். மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவே அவர் இப்படி ஒரு மறுப்பை வெளியிட்டிருக்கிறார். என் அப்பன் குதிருக்குள் இல்லை எனும் விதமாக இந்த மறுப்பை அவர் வெளியிடாமலே இருந்திருக்கலாம் என்று அதுவும் சர்ச்சையாகி இன்னமும் அதன் ஆதி அந்தம் முதல் இப்போதும் பேசுபொருளாக இருக்கிறது.

அதற்கடுத்ததாக முதல்வர் குடும்பத்தினர் பங்குதாரராக செயல்படும் ஜிஸ்கொயர் மீதான வருமான வரித்துறை ரெய்டு 7-வது நாளாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பாஜக அண்ணாமலை இந்த நிறுவனம் சம்பாதித்ததாக குறிப்பிட்டிருந்த சொத்து மதிப்பு ரூ. 38 ஆயிரத்து 827 கோடி.  
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனம் இந்த ஜி ஸ்கொயர். இது கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கணக்கு காட்டப்பட்டிருக்க, புதிய முதலீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் பணம் கிடைத்தது குறித்தே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. .இந்த நிறுவனத்தில் முதல்வர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எந்த வகையில் தொடர்பு உள்ளது என்பதை எல்லாம் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.  

இந்த நிலையில்தான் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் அதிகமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை இடைவிடாமல் நடந்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 30 க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவன நிர்வாகி வீட்டிலும் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது.

அதேபோல் சென்னை அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் என்பவரின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் டெல்லி சென்று அமி்த்ஷாவை சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறார். இதை ஒட்டி வரும் பார்லிமெண்ட் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை ஆரம்பித்து விட்டதாகவும், பாஜகவுக்கு பத்து தொகுதிகள் வரை அதிமுக கொடுக்க முன் வந்திருப்பதாகவும், மூன்று தொகுதிகள் பாமகவிற்கும் எஞ்சிய 27 தொகுதிகளில் அதிமுக போட்டி எனவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.
அதிமுக தலைமையைப் பொறுத்தவரை திமுக நிறுவனங்கள் மீது நடத்தும் ரெய்டிலும், அண்ணாமலை வெளியிட்ட திமுக அமைச்சர்கள் சொத்துப் பட்டியலிலும் பூரண திருப்தி நிலவுவதாகவும் அந்த மகிழ்ச்சியில் உடனடியாக பாஜகவுடன் மேலும் நெருக்கம் காட்டுவதாகவும் பேச்சு அடிபடுகிறது.

அதே சமயம் திமுக ஆட்சியிலிருக்கும்போதே இந்த அளவு அவர்கள் மீது ரெய்டு என்றால் நம் கதை என்ன ஆகும்? என்று அச்சப்பட்டே பாஜகவுடன் இப்படி நெருங்கி விட்டததாகவும் திமுக தரப்பில் பேச்சும் உலாவுகிறது.

இந்த நேரத்தில் முதல்வர் அவசர அவசரமாக டெல்லி சென்று முகாமிட்டிருப்பதும் பலத்த அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கே மத்திய நிதி அமைச்சரை ரெய்டு நடவடிக்கைகளை கைவிடுமாறு கேட்டுக் கொள்ள முயற்சி நடப்பதாகவும், இதன் பின்னே மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் யாவும் தமிழகத்தில் கேள்வி முறை இல்லாமல் அமல்படுத்த வாக்குறுதி தரப்படுவதாகவும் சர்ச்சைகள் கிளம்புகிறது.

ஏற்கனவே 8 மணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்றிய தொழிலாளர் வேலைச் சட்டம், திருமண மண்டபங்களில் மதுபார் அனுமதி, நீர்நிலைகளை தனியாருக்கு தாரை வார்ப்பு என பல்வேறு அக்கப்போர் விஷயங்களில் சிக்கி மக்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது திமுக.. மத்திய அரசின் இந்த நெருக்கடிகள் மூலம் மேலும் மக்கள் மீது இன்னும் என்னென்ன வேண்டாத அஸ்திரங்களை எய்யுமோ? என்ற கவலையுடன் தமிழக அரசியலை உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

scroll to top