கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பொதுமுடக்கம் அமல்படுத்துவதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். தில்லியில், கொரோனா பரிசோதனை செய்வோரில் தொற்று உறுதியாகும் விகிதம் கடந்த 24 மணி நேரத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்திருக்கும் நிலையில், டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக்கு பின், துணை முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், “டெல்லியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்தியாவசிய பணிகள் தவிர பிற அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும். பேருந்து நிறுத்தம், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டத்தை தவிர்க்க பேருந்து மற்றும் மெட்ரோ ரயில்களில் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். டெல்லியில் கடந்த 8 முதல் 10 நாள்களில் 11,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் வகை கரோனாவும் பரவி வருகின்றது. மருத்துவமனையில் 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 124 பேருக்கு ஆக்ஸிஜன் மற்றும் 7 பேர் வெண்டிலேட்டர் உதவியுடனும் இருக்கின்றனர்.” ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, உணவகம் உள்ளிட்டவைக்கு கட்டுப்பாடுகள் என மஞ்சள் எச்சரிக்கை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.