டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26 வது தமிழோசை இதழ் வெளியீட்டு விழா

1-2.jpg

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26 வது தமிழோசை இதழ் வெளியீட்டு விழா கல்லூரியின் என்.ஜி.பி.கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்தத் தமிழோசை இதழ் மாணவர்களின் படைப்புத் திறனை வெளிக் கொணரும் விதமாக ‌அவர்களின் படைப்புகள் முழுமையாக இடம் பெற்றிருந்தது. இந்த நிகழ்வு குத்துவிளக்கேற்றுதல் உடன் தொடங்கப்பட்டது.  இந்த நிகழ்வில் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் நீ குப்புச்சாமி வரவேற்புரை வழங்கினார்.

டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு) முனைவர் சு.சரவணன் தொடக்கவுரை வழங்கினார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி இந்த விழாவில் தலைமை உரை வழங்கினார். அவர் தனது உரையில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்து, தமிழின் தொன்மை குறித்து மிகத் திறம்பட எடுத்துரைத்தார். தமிழ் மொழி இனிமையான மொழி, அந்த மொழி செம்மையானது என்றும் அம்மொழியின் வளம் சிதையாது அதனை இந்தத் தலைமுறையினர் சிதைவுறாமல் பாதுகாத்திடல் வேண்டும் என்றார். டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் பெ.இரா.முத்துசாமி வாழ்த்துரை வழங்கினார்.

தமிழோசை இதழ் நூலை சிறப்பு விருந்தினர் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராஜன் வெளியிட்டார். அந்த நூலை கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி பெற்றுக் கொண்டார். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.முருகேசன் ’சங்க காலத் தமிழரின் சமூக வாழ்வும் கலைத் திறனும்’  என்ற நூலை எழுதியிருந்தார். அவர் இந்த விழாவில் இந்நூலை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுகவுரை கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கி.முருகேசன் வழங்கினார்.

இந்த விழாவில் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் ‘வாசிப்பே வெல்லும்’ என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் தமது உரையில், தமிழ் மொழியின் தொன்மை குறித்து மிக நுட்பமாகக் கூறினார். தமிழ் மொழியின் இருக்கின்ற அரிய நூல்கள் தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களின் மூல நூல்களைத் தேடித் தாம் சென்ற விதம், அந்த நூல்கள் தற்போது எந்த நூலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறினார். மேலும் தமிழுக்குத் தொண்டாற்றிய உ.வே.சா, ஜி.யூ.போப், திருவள்ளுவர் குறித்து ஆராய்ச்சி நோக்கில் மாணவர்களுக்கான உரை வழங்கினார்.வேறு மொழிகளுக்கு இல்லாத சிறப்பு  தமிழ் மொழிக்கு இருப்பதை ஆணித்தரமாக மாணவர்களுக்கு எடுத்தியம்பினார். தமிழோசை இதழ் பதிப்பாசிரியர் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கோ.ரங்கநாதன் நன்றியுரை வழங்கினார்.

scroll to top