கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த மூத்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதியரசர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது, “ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான அறிக்கை பற்றி வழக்கறிஞர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், அவரது உடற்பருமன், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாமா என்பது தான் பாயிண்ட். இதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தேன். இந்த தகவல்களை கம்ப்யூட்டரில் செக் செய்து பாருங்கள். உலகில் உள்ள எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். முடிவு எதுவாக இருக்கும் என்று நீங்களே ஆய்வு அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தேன்.” என்றார்.