THE KOVAI HERALD:
தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் எதிரொலியாக சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டிக்கிறார். அதில், ‘அம்மாவின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது இப்போது பத்திரிகை, மீடியாக்களில் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் நெம்பர் ஒன் டிரண்டாகி உள்ளது. இப்படியான அறிக்கை ஒன்று வந்ததன் மூலம் தமிழக அரசியலில் எத்தகைய மாற்றங்கள் நிகழும்? என்பதுதான் தற்போதுள்ள சர்ச்சையே. அதைப் பற்றி அறிவதற்கு முன்பாக ஆறுமுகசாமி மற்றும் சசிகலா அறிக்கையை சுருக்கமாகப் பார்க்கலாம்.
ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை:
2016 செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார். போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர்களும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடற்ற நீரழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன. 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நதிநீர்க் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார். அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
2016 அக்டோபார் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை விளக்கவில்லை.
ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீகே தொலைபேசியில் பரிந்துரைத்ததாகவும், மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்கா மருத்துவரைத் தவிர, ஆர்.1-ன்னும் (சசிகலா ) பெற்று இருந்தார். நெருக்கடியின் போது முடிவு எடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ அறுவை சிகிச்சையை தொடராமல் தவறு இழைத்து இருக்கலாம்.
இது அமெரிக்கா மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம். சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும்.2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை ஜெயலலிதாவின் மருமகன் ஜெ தீபக் அனுசரித்துள்ளார்.
வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும். மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்
அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.
சசிகலா அறிக்கை:
“என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்று என் மீது பழி போடுவது ஒன்றும் புதிதில்லை. என்றைக்கு நான் அம்மாவின் கரத்தைப் பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது என் மீது இந்த பழி போடும் படலம். புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக அவருடைய மரணத்தையே அரசியல் ஆக்கினார்கள். கழகத்திற்கு எதிரானவர்கள், கழகத்தை அழிக்க நினைத்தவர்கள், குறிப்பாக திமுகவினர், நம் அம்மா அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த நினைத்தது நிறைவேறியது, இதற்கு நம் கட்சியினரே பலிகடா ஆனார்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று.
என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்றால் அதற்கு எத்தனையோ வேறு வழிகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம். அதற்கு அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கியதுதான் மிகவும் கொடுமையானது. அம்மா அவர்களின் மரணத்தை சர்ச்சையாக்கி, அதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் அமைத்து, அதன் அறிக்கையும் அரசியலாக்கி விட்டார்கள்.
அம்மாவின் மரணம் பற்றி எத்தனை முறை விசாரித்தாலும், அதன் உண்மை என்றைக்கும் மாறாது. அம்மாவின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அதன் பிறகு நன்றாக குணமடைந்து வீட்டிற்கு திரும்ப இருந்த நிலையில் தான், துரதிஷ்டவசமாக நம்மையெல்லாம் நிர்கதியாக விட்டுச் சென்றார் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த எதார்த்தத்தை கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் புரிந்து கொண்டனர்.
விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கமாக சொல்லப்பட்டது என்னவென்றால், அம்மா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனைக்கு கொண்டுசென்ற காரணமும், அங்கு சிகிச்சை அளித்த விததையும் விசாரிக்கத்தான் என்று செய்திகள் வந்தது. உச்ச நீதிமன்றம் கூட இந்த விவகாரத்தில் 30.11.2021 அன்று ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருக்கிறது. அதாவது ஆணையத்தின் முன்பாக இருக்கின்ற சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு கொடுத்து இருந்தது. ஆனால்
இந்த விசாரணை ஆணையம் தன்னுடய அதிகார வரம்பை மீறி தேவையற்ற அனுமானங்களை சொல்லி என் மீது பழி போட்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுடைய உறவு குறித்து இந்த ஆணையம் யாரையோ திருப்திபடுத்தும் எண்ணத்தில், யாருடைய அரசியல் ஆதாயத்திற்கு உதவுகின்ற நோக்கத்தில் இப்படிப்பட்ட தேவையற்ற சர்ச்சைக்குரிய கருத்தை இந்தஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?
என்னையும் அம்மாவையும் எப்படியாவது பிரித்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளவே அம்மாவும், நானும் சிறிது காலம் பிரிந்து இருந்து என்ன நடக்கிறது என்று பார்த்தோம். இந்த சதியின் பின்னணி குறித்து நாங்கள் தெரிந்து கொண்டவுடன் மீண்டும் அம்மாவோடு இருந்து வந்தேன். 2012 முதல் அம்மாவுக்கும் எனக்கும் இடையிலான உறவு சரியில்லை என்று ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எப்படி தெரியும். யார் இதைப்பற்றி ஆணையத்திடம் சொன்னது. இறந்துபோன அம்மா அவர்களும் இவர்களிடத்தில் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும் போது இப்படி ஒரு பொய்யான, அபத்தமான கருத்தை ஆணையம் தெரிவிக்க காரணம் என்ன? அதன் உள்நோக்கம் என்ன? இது யாருடைய அரசியல் லாபத்திற்காக வெளியிடப்பட்டிருக்கும் என்பதை மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.
அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒருபோதும் நான் தலையிட்டதில்லை. அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகள் செய்ய வேண்டும். எந்த எந்த மருந்துகள் தர வேண்டும் என்கிற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து உரிய சிகிச்சைகளை வழங்கினார்கள். என்னுடைய நோக்கமெல்லாம் அக்காவுக்கு முதல் தர சிகிச்சை தர வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்போலோ மருத்துவனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை. உலக அளவில் சிறப்புகளை பெற்ற மிகச்சிறந்த மருத்துவ நிபுணர்கள் அங்கே பணியாற்றுகிறார்கள். மேலும் அக்கா உடல்நிலை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளை ஏற்கனவே அதே மருத்துவமனையில் செய்திருந்தோம். இதன் காரணமாகத்தான் அந்த மருத்துவமனையை தேர்ந்தெடுத்து அம்மா அவர்களை சிகிச்ளச அளிக்க அங்கு கொண்டு சென்றோம்.
வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க நான் என்றைக்குமே தடையாக இருந்தது இல்லை. அதேபோன்று அம்மா அவர்களுக்கு அன்றைய சூழலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்வது தொடர்பாக எந்த தேவையும் ஏற்படவில்லை என்று AIIMS டாக்டர்கள் உட்பட அனைத்து டாக்டர்களும் முடிவு எடுத்தார்கள். ஆனால் ஆணையம் யூகத்தின் அடிப்படையில் சொல்வதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, என் மீது சொல்லப்படுகின்ற குற்றச்சாட்டுகளை நாள் முற்றிலும் மறுக்கிறேன். இது தொடர்பாக என்னிடம் எந்த வித விசாரணை நடத்தினாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்.
நம் அம்மா அவர்களை அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூட துணிவில்லாதவர்கள், அவர்களின் மரணத்தை அரசியலாக்கி வேடிக்கை பார்க்கும் அற்பத்தனமான நிலையை இனி யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பொதுமக்களும் அம்மா அவர்கள் மரணத்தில் எந்தவித சர்ச்சைகளும் இல்லை என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள்.
இதில் யாருக்கு அரசியல் லாபம்?
இந்த விஷயங்களை முன்வைத்து அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அதிமுகவினரின் பேட்டிச்சுற்றுக்கு விட்டோம். கிடைத்த தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் மாபெரும் சர்ச்சை என்பது ஊர் உலகம் அறிந்த விஷயம். அதில் சசிகலாவும் அவர் உறவுக்காரர்களும்தான் இதற்கு காரணிகள் என்பதும் அந்த உலகமே பேசிய விஷயம்தான். அப்போது சந்தேகத்திற்கிடமாகப் பேசப்பட்டவை எல்லாமும்தான் தற்போது 90 சதவீதம் ஆணைய அறிக்கையின் மூலமும் வெளிவந்துள்ளது. சசிகலாவையும், அவர் ஆதரவு உறவுக்காரர்களையும் பகிரங்கமாக எதிர்த்து அரசியல் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. திரும்ப பதவிக்காக வந்து சேர்ந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
திரும்ப கட்சியைப் பிடிப்பதற்கு ஓபிஎஸ் சசிகலாவுடன் சேர்ந்து நாடகமாடுகிறார் என்பதுதான் இபிஎஸ் அணியின் முழுமையான குற்றச்சாட்டு. அவர்களுடன் இணக்கமாக இருப்பவர்தான் டி.டி.வி தினகரன். சசி, ஓபிஎஸ், டிடிவி மூவரும் மூன்று துருவங்கள் போல் தெரிந்தாலும் அவர்கள் ஒரே அணியினரே என்பது இப்போது அறிக்கை வந்தவுடன் டிடிவி சசிகலாவை சந்தித்ததும், அதன் பின்னே சசிகலா அறிக்கை வெளியிட்டதும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதில் சசிகலாவும், தினகரனையும் விசாரணை வளையத்தில் திமுக அரசு கொண்டு வரும்போது நிச்சயம் ஓபிஎஸ் தப்பிக்க முடியாது.
இதுவரை எப்படியோ பாஜகவை காக்கா பிடித்து தன்னை பலவானாகக் காட்டிக் கொண்டிருந்தார் ஓபிஎஸ். இப்போது அவரை பாஜக நம்பாது. அவரை காப்பாற்றும் முயற்சியிலும் இறங்காது. பாகஜவைப் பொறுத்தவரை எடப்பாடி அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆனால் அடுத்து அமையும் கூட்டணியில் நம் கட்சிக்கு முக்கியத்துவம் தந்து அதிக சீட்டுகளை தரமாட்டார். எனவே ஓபிஎஸ்தான் சரியானவர் என்றே அவரை ஆதரித்து வந்தது. இனிமேல் அவரை ஆதரித்தால் தன் பெயரும் கெடும் என்பதை உணர்ந்து இபிஎஸ் பக்கமே வரவே சாத்தியக்கூறுகள் அதிகம்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியே அதிமுகவில் மேலும் பலம் பொருந்தியவர் ஆகிறார். இதே நேரத்தில் எப்படியாவது எடப்பாடி கோஷ்டியை இந்த விசாரணை வளைத்திற்குள் கொண்டு வர பிரம்ம பிரயத்தனம் செய்து பார்த்திருக்கிறது திமுக. அதற்கான வாய்ப்பு அமையவில்லை. எனவே இப்போது எந்த நோக்கத்தற்காக எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஆணையம் ஏற்படுத்தப்பட்டதோ, அந்த நோக்கத்தை திமுக ஆட்சியின் கையாலேயே நிறைவேற்றியதன் மூலமும் எடப்பாடி பழனிசாமியே பிரபல்யம் ஆகிறார். விளைவு. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட தலைவராகவே எடப்பாடி ஆகிவிட்டார். மற்றவர்களுக்கு இது எல்லாம் பெரிய சறுக்கல்தான்.
S KAMALA KANNAN Ph.no 9244317182