ஜெயகாந்தனும், சுகுமார் அலிகோடும் கூடவே இளையராஜாவும்… ராஜ்யசபா பதவிக்குப் பின்னால் உருளும் சர்ச்சை

ilayaraja.jpg

FIle photo

பட்டியலினத்தவர் எல்.முருகனுக்கு அமைச்சர் பதவி, அடுத்தது பழங்குடியினத்தவர் திரவுபதி முர்முவுக்கு ஜனாதிபதி பதவி வேட்பாளர், அதற்கடுத்து பட்டியலினத்தவரான இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்.பி இப்படி பதவிகளை வாரி வழங்கி அதிரடி கிளப்பி வருகிறது மத்தியில் ஆளும் பாஜக.

இதன் மூலம் அரசியல்ரீதியாக தான் சனாதனவாதி அல்ல என்று நிரூபிக்க பாஜக தலைவர்கள் முயற்சி செய்தாலும், இந்த பதவிகள் அடைந்தவர்களுக்கெல்லாம் எப்படியான சதாதனத்தன்மை இருக்கிறது என்று உப்பு விட்டும், புளி விட்டும் துலக்கி வருகின்றன எதிர்கட்சிகள்.

அதிலும் தமிழ்த்திரை உலகின் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜா தான் பெற்ற பதவியின் மூலம் பெற்ற வசைபாடல்களும், விமர்சனங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. மோடியை அம்பேத்காருடன் ஒப்பிட்டு சில மாதங்களுக்கு முன் எழுதியதே இதற்காகத்தான் என்று விமர்சனங்கள் பொங்கி வெடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஈரம் உலரும் முன் இந்தியைப் போல இசையமைக்க ஏதுவான மொழி வேறு இல்லை என்கிற ரீதியில் ஒரு கருத்தைத் தெரிவித்து வலைத்தள பதிவர்களின் காய்ச்சலுக்கும் .உள்ளாகியிருக்கிறார் ராஜா.

ஏன் இப்படி? ஓர் உன்னத இசைக் கலைஞன் இப்படியெல்லாமா சிறு பதவிக்காக தன்னையே இழப்பது என்பன போன்ற நடுநிலையாளர்கள் கருத்தை நம்மால் உதாசீனம் செய்ய முடியாது.

ராஜ்யசபா எம்பி பதவியை பெற்றிருக்கிறார் தமிழ்த்திரை உலகின் இசைஞானி இளையராஜா. இதன் மூலம் மாபெரும் சர்ச்சையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அவர்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘‘ராஜ்யசபைக்கு மணி மகுடமாக இளையராஜாவுக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை. அவருடைய திறமையை, சிந்தனையை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பதை சிந்தித்து எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ளிட்ட திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டதை அரசியலாக பார்க்க கூடாது. இளையராஜா சுயம்பாக முன்னேறியவர். அடையாளம் கடந்து கொண்டாடப்பட வேண்டியவர். இது அவரின் சாதனைக்காக வழங்கப்பட்ட மரியாதை.

அம்பேத்கர் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் பிரதமர் மோடி பற்றி இளையராஜா முன்னுரை எழுதியது அவரின் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியை மட்டும் அவர் பாராட்டி பேசியதில்லை. கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசையும் இளையராஜா பாராட்டியுள்ளார். அதனால் இது அரசியல் பார்க்க வேண்டாம்!’’ என்று தெரிவித்துள்ளார்.

அவர் பாஜக கட்சியின் தலைவர். அப்படித்தான் கூறுவார். ஆனால் கலை இலக்கியத்தினுள்ளே ராஜாவைப் போற்றுபவர்களுக்கு நிறைய தர்மசங்கடங்கள் இதன் மூலம் வந்து சேர்ந்திருக்கிறது என்பதே உண்மை.

ஒவ்வொரு இனத்திற்கும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மண் மாண்பு இருக்கிறது. அதை ஒட்டி உறவாடி மக்கள் மனதோடு பேசுபவர்கள்தான் இயல், இசை, நாடக கலைஞர்கள். அதில் இசைக்குப் பெரும்பங்கே உண்டு. அவர்கள் இப்படியெல்லாம் அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படும்போதெல்லாம் சர்ச்சைகளும் நிகழ்ந்தே வந்திருக்கிறது.

தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளரான ஜெயகாந்தனுக்கு இப்படித்தான் பாரதிய ஞானபீட விருது வழங்கப்பட்டது. இளையராஜாவைப் போலவே இடதுசாரிப்பாசறையால் புடம்போடப்பட்ட அவர் காஞ்சி மடத்திற்கு சென்றார். ஜெயஜெய சங்கரா எழுதினார். அதனால் தீவிர எதிர்க்கருத்துக்களை பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக பாரதீய ஞானபீடம் பெற்ற போது அடுத்த நிலைக்கே சென்றார். உலகத்திலேயே சிறந்த மொழி சமஸ்கிருதம்தான் என்று பேசி சர்ச்சைகளை விதைத்தார். அதன் பின்னணியில் அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் எல்லாம் தமிழ் ஆர்வலர்கள் உள் நுழைந்து ‘ஜெயகாந்தா தமிழில் பேசாதே, சமஸ்கிருதத்தில் பேசு!’’ என்று கோஷமெழுப்பி போராட்டங்கள் செய்த சம்பவங்கள் எல்லாம் நடந்தது.

அதற்கு கொஞ்சமும் விதிவிலக்கு அற்றவராகவே தற்போதும் நடந்து கொண்டிருக்கிறார் இளையராஜா. இவர் ராஜ்ய சபா எம்பி பதவியென்ன, ஜனாதிபதி, கவர்னர் பதவியே வாங்கிக் கொள்ளட்டும். அதற்காக மோடியை அம்பேத்காருடன் ஒப்பிடலாமா? ஹிந்திதான் இசையமைக்க சிறந்த மொழி என்று இப்போது கூறுபவர் அப்போதே இந்திப் படங்களுக்கு இசையமைக்கப் போய் வாய்ப்புக் கேட்டிருக்கலாமே?

தமிழ் இசையால், தமிழ் உள்ளங்களில் வாழ்ந்து விட்டு இப்படி ஒரு சிறுபதவிக்காக பேசலாமா?’ என்று விமர்சகர்கள் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கவே செய்கிறது. இதற்கெல்லாம் இளையராஜா கோபப்படாமல் பதில் சொல்லுவாரா? இல்லை இனி அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இந்திப் பாடல்களுக்கு இசை அமைத்துக் கொள்!’ என்று கூவும் தமிழ் ஆர்வலர் போராட்டங்களை எதிர்கொள்வாரா? என்பது அவருக்கே வெளிச்சம்.

சரி அவர் எதேச்சையாகத்தான் அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட்டார் என்றாலும் கூட, ராஜ்ய சபா பதவி பெற்றதும் இப்படி ஹிந்தி பற்றி கருத்தை உதிர்க்கலாமா? என்றும் கேட்கிறார்கள். அதுவும் இதே ராஜ்யசபா பதவி இதற்கு முன் எத்தனையோ நடிகைகளுக்கும், நாட்டியதாரகைகளுக்கும் வழங்கப்பட்ட சிறு பதவிதான். அதற்குப் போய் ஆசைப்பட்டு இப்படி பேசலாமா? அதை புறக்கணித்து அல்லவா இருக்க வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுகுமார் அலிகோடு என்ற முதுபெரும் எழுத்தாளர் தனக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டதைப் பெறாமல் புறக்கணித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்.

‘‘நான் எண்பத்தியெட்டு வயதான முதியவன். ஆயிரக்கணக்கான கதை, கட்டுரை, ஆய்வுகள் எழுதியுள்ளேன். பல மொழிப்புலமை பெற்றுள்ளேன். பல நூறு பெரிய விருதுகள் கூட வாங்கியுள்ளேன். எனக்கு இந்த பத்ம விருது கொடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அதே பத்ம விருதை 18 வயசான நாட்டியநடிகைக்கும் கொடுத்திருக்கிறார்களே. அது எப்படி? கலை இலக்கியம் என எழுபதாண்டுகள் சேவை செய்த ஒருவனுக்கும் அதே விருது. 18 வயதுடைய நடிகைக்கும் அதே விருது என்றால் எப்படி?’ என்று கேட்டார்.

இந்த விவகாரம் கேரளா மட்டுமல்ல, உலகெங்கும் பேசப்பட்டது. அப்படி ஒரு புறக்கணிப்பு நடத்த இது என்ன கேரளாவா? இவர் என்ன சுகுமார் அலிகோடா? இவர் இளையராஜாவாயிற்றே? என்ன செய்வார் பாவம்.

scroll to top