சிவகாசி மாநகராட்சி வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் வரைவு வார்டு மறுவரையறை பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தலைவர் டாக்டர் பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள சிவகாசி மாநகராட்சியின் வார்டுகள் மறுவரையறை குறித்து அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூறினர். ஆணையத் தலைவர் பழனிகுமார் பேசும்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக தெரிவித்தனர். அனைவரின் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி வார்டு மறுவரையறை குறித்து 13 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் வரும் 24ம் தேதி வரை கருத்து கேட்பு மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய பரிசீலனை செய்யப்படும். வரும் 26ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர், மறுவரையறை குறித்து ஆணையத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று கூறினார். கூட்டத்தில், தமிழ்நாடு மறுவரையறை ஆணைய உறுப்பினர் சுந்தரவல்லி, மறுவரையறை வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, ஆட்சியர் மேகநாதரெட்டி மற்றும் தேர்தல் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

scroll to top